Montag, 16. April 2018

2.புறநானுறு

அ ) "பாணன் சூடிய ------"141 (பரணர்)

பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
5 யாரீ ரோவென வினவ லானாக்
  காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
10 உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே

15 பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே. (141)

     திணை

அது. துறை : பாணாற்றுப்படை;
புலவராற்றுப்படையுமாம். வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர்
பாடியது.

    உரை : 

பாணன் சூடிய பசும் பொன் தாமரை - பாணன் சூடிய
ஒட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ; மாணிழை விறலி
மாலையொடு விளங்க - மாட்சிமைப்பட்ட அணியினையுடைய விறலி
யணிந்த பொன்னரி மாலையுடனே விளங்க; கடும் பரி நெடுந்தேர்
பூட்டு விட்டு அசைஇ - கடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைப்
பிணிப்புவிட்டு இளைப்பாறி; ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் -
ஊரின்கண் இருந்தீர் போலச் சுரத்திடை இருந்தீர்; யாரீரோ என -
நீர் யாவிர் பாணரோ என; வினவலானா - எம்மைக் கேட்டலமையாத;
காரென் ஒக்கல் கடும் பசி இரவல - புல்லென்ற சுற்றத்தையும் மிக்க
பசியையுமுடைய இரவலனே; வென் வேல் அண்ணல் காணா
ஊங்கு - வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன் முன்;
நின்னினும் புல்லியேம் மன் - யாம் நின்னினும் வறியேம்; இனி -
இப்பொழுது; இன்னேம் ஆயினேம் - அவ்வறுமை நீங்கி இத்
தன்மையே மாயினேம்; என்றும் - எந்நாளும்; உடாஅ போரா
ஆகுதல் அறிந்தும்- உடா போராவாதலை யறிந்து வைத்தும்;
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்தஎம்கோ - படாத்தினை மயிலுக்குக்
கொடுத்த எம் இறைவன்; கடாஅ யானைக் கலிமான் பேகன் -
மதமிக்க யானையினையும் மனஞ் செருக்கிய குதிரையினையுமுடைய
பேகன்; எத்துணையாயினும் ஈத்தல் நன்றென - எவ்வளவாயினும்
கொடுத்தல் அழகிதென்று; மறுமை நோக்கின்றோ அன்று -
மறுபிறப்பை நோக்கிற்றோவெனின் அன்று; பிறர் வறுமை
நோக்கின்று அவன் கைவண்மை - பிறரது மிடியைக் கருதிற்று
அவனது கைவண்ணம் எ-று.

     எங்கோ பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற்றன்று பிறர்
வறுமை நோக்கிற் றெனக் கூட்டுக. “நின்னினும் புல்லியேம் மன்”என்பது
“பண்டு காடு மன்”என்பதுபோல நின்றது. ஒழிந்த மன்: அசைநிலை.

     விளக்கம்:

பாணாற்றுப்படை   வாயிலாகப்    பேகன்   
புகழைப் பாராட்டுகின்றவர், தம்மையும் பாணனாக நாட்டிக்கொண்டமையின்,
தம்மைக் காணும் பாணன்முன் தாமிருக்கும் நிலையினை, பாணன் சூடிய
தாமரைப் பூவும் விறலியணிந்த பொன்னரி மாலையும் விளக்கமுற
விருப்பத்தை யெடுத்தோதினார். சுரத்திடத்தே யிருந்தாராயினும் வேண்டுவ
நிரம்பப்பெற்று இனிதிருத்தல் தோன்ற, “ஊரீர் போல இருந்தனிர்”
என்றதாகக் கூறினார். இதனால் பேகனது காவற்சிறப்பும் ஓராற்றால்
வெளிப்படுகிறது. வறுமையால் வாடி மேனியும் முகமும் கருத்துத்
தோன்றுதலால், “காரென் ஒக்கல்”என வேண்டிற்று. தமது செல்வ
நிலை, வந்த பாணன் இனிது கண்டறிய விளங்குதலால்,
“இன்னேமாயினேம்”என்றொழிந்தார். மயில்கள் படாம் பெறின், 
அவற்றை உடுப்பதோ மெய்ம்மறையப் போர்த்துக் கொள்வதோ
செய்யாவாயினும்,  மயிற்குப்  படாஅம்  நல்கின  கொடை மடம்
விளங்க, “உடாஅ போரா ஆகுதலறிந்தும்”என்றார். உடா, போரா
எனப் பன்மையாற்கூறியது, மயில்கள் பலவும் எஞ்சாமல் அடக்கி நின்றது.
மயில்களின் பொதுவியல்பாகிய இதனை யறிந்து வைத்தும், படாஅம்
ஈந்தான் என்றது, நும்பால் வேண்டப்படாத மிகச் சிறந்த பொருளையும்
அவன் நுமக்கு மிக நல்குவன் என்ற குறிப்புத்தோன்ற நின்றது. படாம்,
துகில். ஈத்தல் நன்றென மறுமை நோக்காது வறுமை நோக்கின்று என
இயையும். மன்: ஒழியிசை.

ஆ ) "அளிதோ தானே ------"109 (கபிலர் )

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து

மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

பொருளுரை:


பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது.பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும்,உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன.
ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டு,
இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும்.மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும்.
நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து,கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும்.பாரியின் பறம்பு மலை அகல, நீள, உயரத்தில் வானத்தைப் போன்றது.
அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன.அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும்,இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும் உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது.நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டன்.அதை அடையும் வழியை நான் அறிவேன். தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும்முறுக்கப் பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி,மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால்,பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான்.


இ )"யாதும் ஊரே யாவரும் கேளீர் ------" 192 (கணியன்  பூங்குன்றன் )


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

Keine Kommentare:

Kommentar veröffentlichen