Dienstag, 10. Juli 2018

8.தேம்பாவணி -6

 வெண்மை செறிந்த மலரின் அழகு போல் தூயவளாகிய கன்னி
மரியாள் கையில் ஞானம் நிறைந்து மலர்ந்துள்ள மகனை நோக்கும்
பொருட்டு, வானமெங்கும் நெருங்கப் பூத்த அழகு போலத் தாங்கி நின்ற
பல விண்மீன்கள் செறிந்து கிடந்து, அழகுடன் விரிந்த கண்களை
ஒத்திருந்தன.

     மிடைந்த + அலர் - 'மிடைந்தவலர்' என்பது 'மிடைந்தலர்' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது. 'அலர் சேடு கண்' என்பதனை, 'சேடு
அலர் கண்' என மாற்றிக் கூட்டுக.



            31
மனவ ணங்குவ ணங்கடி நாயகன்
மனவ ணங்குவ ணங்கில்வ ருந்தினார்
மனவ ணங்குவ ணங்கலி லாளனு
மனவ ணங்குவ ணங்கும ணங்குமே.

மனவு அணங்கு வணங்கு அடி நாயகன்
மன் அவ் அணங்கு வணங்கு இல் வருந்தினார்,
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்,
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே.


     தன் மனத் துயரம் அடங்குதல் இல்லாத கணவனாகிய சூசையும்,
மணியின் அழகும் தோற்று வணங்கும் தெய்வப் பெண் போன்ற
மரியாளும், நவமணிகள் தம்மிலும் அழகியதென்று வணங்கும் திருவடிகளை
உடைய ஆண்டவன்பால் நிலைகொண்ட அத்துன்பங்கள் குறையாமை
கண்டு வருந்தினர்.


  மன் + அ + அணங்கு - 'மன்னவ் வணங்கு
என வரவேண்டியது,
ஈரெழுத்துக்கள் இடையிட்டுத் தொக்கமையால் தொகுத்தல் விகாரம்


            32

ஆர ணந்தரு மாண்டகை யாகுலக்
கார ணந்தரு கட்புனல் கண்டிடர்
பூர ணந்தரு மார்புபு டைத்தெலா
வார ணந்தரும் வானுறக் கூக்குரல்.

ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலக்
காரணம் தரு கண் புனல் கண்டு, இடர்
பூரணம் தரு, மார்பு புடைத்து, எலா
வாரணம், தரும் வான் உறக் கூக்குரல். 

   வேதத்தை வகுத்துத் தரும் ஆண்டவனுக்கு உற்ற துயரத்தின்
காரணமாக இவர்கள் இடும் கண்ணீரைக் கண்டு, தாமும் அத்துன்பத்தை
முற்றும் உணர்ந்ததை அறிவிக்கும் முகமாக, அங்குள்ள எல்லாக்
கோழிகளும், தம் மார்புகளைச் சிறகுகளால் புடைத்துக்கொண்டு,
வானத்தை எட்டுமாறு கூக்குரல் எழுப்பிக் கூவும்.


              33
பேர்ந்த தன்பெரு மானடை பீழைவா
னோர்ந்த தன்மையு ளைந்தழு தாலென
வார்ந்த தண்பனி தாரையின் மல்கியன்
றார்ந்த பைந்தழைக் காவழு தாயதே.
பேர்ந்த தன் பெருமான் அடை பீழை வான்
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என,
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று,
ஆர்ந்த பைந் தழைக் கா அழுது ஆயதே.
   
     தன்னை விட்டுப் பெயர்ந்து மண்ணுலகம் அடைந்த தன் ஆண்டவன்
அடையும் துன்பத்தை வானம் உணர்ந்து கொண்ட தன்மையாக வருந்தி
அழுதாற்போல, அன்று வடித்த குளிர்ந்த பனியாகிய கண்ணீர் மழைத்
தாரைபோல் மிகுதியாகப் பெய்து, நிறைந்த பசுமையான இலைகளைக்
கொண்டுள்ள காடும் அழுதது போல் ஆயிற்று.

     பசுமை + தழை - பைந்தழை.

             34
கறாக றாவெனக் காடைக லுழ்ந்தன
ஞறாஞ றாவெனத் தோகைக ணைந்தழும்
புறாகு றாவுத லோடிவர் போதலா
லறாந றாப்பொழி லாரழு மோதையே.
கறாகறா எனக் காடை கலுழ்ந்தன;
ஞறாஞறா எனத் தோகைகள் நைந்து அழும்;
புறா குறாவுதலோடு, அவர் போதலால்,
அறா நறாப் பொழில் ஆர் அழும் ஓதையே.


     இவர்கள் தம்மைவிட்டுப் பிரிந்து போதலால், காடைகள்
கறாகறாவென்று அழுதன; மயில்கள் வருந்தி ஞறாஞறாவென்று அழும்;
புறாக்கள் குறாகுறாவென்று அழுவதனோடு, அவையும் சேர்ந்து, என்றும்
அறாத தேனைக்கொண்டுள்ளசோலை, நிறைந்த ஓசையோடு அழும்.

     ஒப்பு நோக்குக 1 : 45.


     35
கிளிய ழக்குயில் கேட்டழத் தேனுணா
தளிய ழச்சிறை நைந்தழ வாவென
வளிய ழத்துயர் மல்கிவ னத்தெலா
வுளிய ழத்தக வோரழ வேகினார்.
கிளி அழ, குயில் கேட்டு அழ, தேன் உணாது
அளி அழ, சிறை நைந்து அழ, ஆ! என
வளி அழ, துயர் மல்கி வனத்து எலா
உளி அழ, தகவோர் அழ ஏகினார்.
 
     கிளிகள் அழவும், அதனைக் கேட்டுக் குயில்கள் அழவும், தேனை
உண்ணாமல் வண்டுகள் அழவும், அன்னங்கள் நைந்து அழவும், ஆ! என்று
காற்று அழவும், துயரம் மிகுந்து அவ்வனத்தின் எல்லா இடங்களும்
அழவுமாக, பெருமை வாய்ந்த அவர்கள் அழுது கொண்டே சென்றனர்.
'சிறை' என்பது சிறகுகளை உடைய அன்னத்திற்குக் காரண இடுகுறிப் பெயர்.



           36
கான்ம றந்தன காமல ரன்னதே
தேன்ம றந்தன தேனின மன்னதே
பான்ம றந்தன மான்பற ழன்னதே
யான்ம றந்தன தம்பிள்ளை யன்னதே.
கான் மறந்தன கா மலர், அன்னதே;
தேன் மறந்தன தேன் இனம், அன்னதே;
பால் மறந்தன மான் பறழ், அன்னதே;
ஆன் மறந்தன தம் பிள்ளை, அன்னதே.


     அதுபோலவே, காட்டிலுள்ள மலர்கள் வாசனை வீச மறந்தன;
அதுபோலவே, வண்டினங்கள் தேனை உண்ண மறந்தன; அதுபோலவே,
மான் குட்டிகள் பால் அருந்த மறந்தன; அதுபோலவே, பசுக்கள் தம்
கன்றுகளை மறந்தன.



37
சுருதி யேந்துசு தற்றுமிப் பேனெனக்
கருதி யேந்துகு ரோதங்க தித்தெனப்
பருதி யேந்துப டம்பட ராமுனர்
குருதி யேந்துகு ணக்குசி வந்ததே.

சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என,
கருதி ஏந்து குரோதம் கதித்து என,
பருதி ஏந்து படம் படரா முனர்,
குருதி ஏந்து குணக்கு சிவந்ததே.


     வேதத்தைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த மகனைக்
கொல்லுவேனென்று எரோதன் திட்டமிட்டுத் தன் மனத்தில் கொண்டிருந்த பகையை வானம் கண்டு சினந்தாற்போல, ஆதவன் 

தாங்கிக் கொண்டிருந்த இருளாகிய போர்வை விலகுவதற்கு முன்னரே, இரத்தம் பாய்ந்த தன்மையாய் அதன் முகமாகிய கீழ்த்திசை சிவந்தது.பகைக்கு மனமும், சினத்திற்கு வானமும், போர்வைக்கு இருளும், கிழக்கிற்கு முகமும் வருவித்து உரைக்கப்பட்டன.

சுதன் + துமிப்பேன் என்பது, 'சுதனைத் துமிப்பேன்' என்ற பொருளில், 'சுதற்றுமிப்பேன்' என 
நின்றது.


               38
முழவெ ழுந்தொனி யொப்பமுந் நீரொலி
யெழுவெ ழுந்துபொ ரக்கதி ரெய்சரம்
விழவெ ழுந்தவெய் யோன்சிவந் தெய்திவா
னழவெ ழுந்துய ராற்றில தோன்றிற்றே.
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி
எழ, எழுந்து பொரக் கதிர் எய் சரம்
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி, வான்
அழ, எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே.


      அப்பகைவன் மேல் எழுந்து போர் புரிய எய்யும் கதிராகிய அம்புகள் அழுவதைக் கண்டு, தானும் எழுந்த துயரத்தை ஆற்ற மாட்டாததுபோல்


              39
பானும் பானொடு பாசறை பட்டழும்
வானும் வானொடு மண்ணுமி ரங்கின
வேனு மேதுமு ணர்கில மாக்களுங்
கோனுங் கோடணை கொண்டிரங்
காயினார்.


பானும், பானொடு பாசறை பட்டு அழும்
வானும், வானொடு மண்ணும் இரங்கின
வேனும், ஏதும் உணர்கில மாக்களும்
கோனும் கோடணை கொண்டு இரங்காயினார்.

     
கதிரவனும் கதிரவனோடு கூடித் துன்பப்பட்டு அழும் வானமும், அவ்வானத்தோடு சேர்ந்து மண்ணுலகமும் இவர் நிலை கண்டு இரங்கினவேனும், ஒன்றும் உணர்தல் இல்லாத கீழ் மக்களும் எரோதன் என்ற மன்னனும் மட்டுமே கொடுமை கொண்டு இரங்காதிருந்தனர்.
     
இரங்கார் ஆயினார் என்பது 'இரங்காயினார்' என்று இடையே
குறைந்து நின்றது.

பைதிர நீங்கு படலம் முற்றும்
        

Freitag, 6. Juli 2018

8.தேம்பாவணி -5


                  23
அலைபுறங் கொண்ட ஞாலத் தடரிருள் சீக்க யாக்கை
நிலைபுறங் கொண்ட ஞான நெடுஞ்சுட ரனையான் போகக்
கொலைபுறங் கொண்ட வேந்தன் குணத்துரி நகரு நாடும்
வலை புறங் கொண்ட பாவ மலிந்திருள் மொய்த்த தன்றே.
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் சீக்க, யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான நெடுஞ் சுடர் அனையான் போக,
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து, உரி நகரும்நாடும்
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து, இருள் மொய்த்தது அன்றே
.


     கடலைப் புறத்தே சூழக் கொண்ட இவ்வுலகத்தில் செறிந்துள்ள
இருளைப் போக்கும் வண்ணம், உடலுள்ள நிலையைப் புறத்தே காட்டி
வந்துதித்த நெடிய ஞானச் சுடர் போன்ற ஆண்டவன் நீங்கிப் போகவே,
கொலையை வெளிப்டையாகவே கொண்ட எரோது மன்னனின்
குணத்தைப் போலவே, அவனுக்குரிய நகரத்திலும் நாட்டிலும் வலையாக
மூடிக்கொண்டது போன்ற பாவம் மலிந்து, இருளே மொய்த்தது.



                 24
கதிதள்ளி யுயர்வா னேற்றுங் கனிந்ததம்  வேந்த னோடும்
பதிதள்ளி யமரர் போகப் பகையுநீண் பசியு நோயு
நிதி தள்ளி மிடியுங் கேடு நிசிதமுந் தீய யாவு
மதிதள்ளி மருட்டும் பேயு மறுகுடி யாயிற் றன்றே
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும்
பதி தள்ளி அமரர் போக, பகையும் நீண் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்,
மதி தள்ளி மருட்டும் பேயும் மறுகுடி ஆயிற்று அன்றே
.



     உயர்ந்த வானுலகம் முடிவில்லாது போற்றும் கனிவுக்குரிய தம்
அரசனாகிய ஆண்டவனோடு வானவரும் அந்நகரை விட்டு விலகிப்
போகவே, பகையும் நீடித்த பசியும் நோயும் செல்வத்தைப் போக்கிய
வறுமையும் கேடும் இகழ்ச்சியும் தீயன யாவும், வந்து சேர்ந்ததோடு,
அறிவை அகற்றி மயக்கும் பேயும் அங்கு குடியாய் வந்து சேர்ந்தது. 



   25
மணிவளர் முகிற்றண் ணூர்தி வானுடுக் கொடிதண் டிங்க
ளணிவளர் குடைகொண் டெங்கு மருணிழல் மன்னன் போகப்
பணிவளர் நகரு நாடும் பனிப்புறப் பகைத்து வாட்டிப்
பிணிவளர் வினையின் செந்தீப் பிரிவிலா மேய்ந்த தன்றே.
மணி வளர் முகில் தண் ஊர்தி, வான் உடுக் கொடி, தண் திங்கள்
அணி வளர் குடை கொண்டு, எங்கும் அருள் நிழல் மன்னன் போக,
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற, பகைத்து வாட்டி,
பிணி வளர் வினையின் செந் தீ, பிரிவு இலா மேய்ந்தது அன்றே.
 
     நீலமணி போல் விளங்கும் மேகத்தைக் குளிர்ந்த வாகனமாகவும்,
விண்மீனைக் கொடியாகவும், குளிர்ந்த மதியை அழகு பொருந்திய
குடையாகவும் கொண்டு, எங்கும் அருளாகிய நிழலைத் தரும் அரசனாகிய
ஆண்டவன் நீங்கிப் போகவே, அணிகலன் நிறைந்த யூதேய நாடும்
எருசலேம் நகரமும் நடுங்குமாறு, துன்பம் வளர்வதற்குக் காரணமான தீவினையால் வரும் செந்தீ பகைத்து வாட்டி, விலகாமல்
மேய்ந்துகொண்டிருந்தது.

                இயற்கையின் இரக்கம்
     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.


          26
கண்ண கன்ற வகழிக லங்கலிற்
றண்ண கன்றத ரங்கந்த ளம்பலே
யெண்ண கன்றகு ணத்திவர் நின்மினென்
றொண்ண கன்றகை நீட்டின தொத்தவே.
கண் அகன்ற அகழி கலங்கலின்,
தண் அகன்ற தரங்கம் தளம்பலே,
எண் அகன்ற குணத்து இவர், "நின்மின்!"
 என்று,
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே
.

     இடம் பரந்த அகழி காற்றில் அசைந்து கலங்குதலால், குளிர்ந்த
அகன்ற அலைகள் கரையில் தளம்பும் தோற்றம், எண்ணுக்கு அடங்காத
குணம் படைத்த இவர்களை, "போகாதே நில்லுங்கள்!" என்று, ஒளி
பொருந்திய நீண்ட கைகளை நீட்டித் தடுப்பதை ஒத்திருந்தது.


   'தளம்பல்' என்ற எழுவாய்க்குரிய 'ஒத்தது' என்ற பயனிலையில் ஈறு 
கெட்டது. பின் இதுபோல் வருவனவும் அமைத்துக் கொள்க. முதலடியின்
இரண்டாஞ்சீர் விட்டிசைத்தற்கண் 'கன்ற' எனத் தேமாவாக நின்று,
வருஞ்சீர் 'வகழிக' எனக் கருவிளமாய் இசை நிறைத்தல் யாப்பமைதிக்குப்
பொருந்துவதெனக் காண்க. இரண்டாமடியின் மூன்றாஞ்சீர் 'ரங்கந்த' எனத்
தேமாங்காயாக நிற்றலும், ஒரு நிரைக்கு இரு நேர் நின்று கருவிளம்
போன்று இசை நிறைத்தலும் காண்க. இதனையும், 'ரங்கந் தளம்பலே' எனச்
சீர் பிரித்து, முதல் விதிக்கு அமையக் கொள்ளுதலும் ஒன்று. முதல் விதியிற்
குறித்த சீர்கள் இரண்டாம் விதிக்கேற்பப் பிரிக்க அமையாமையும் காண்க.



27
அலைய லைந்தலர் கூப்பிய தாமரை
யிலைய லைந்தலை மீதெழுந் தாடலந்
நிலைய டைந்தனர் நீங்கலிர் நின்மினென்
றுலைவ டைந்துகை கூப்பிய தொத்தவே.
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
அலை அலைந்து அலை மீது எழுந்துஆடல், அந்
நிலை அடைந்தனர், "நீங்கலிர்! நின்மின்!" என்று,
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே.
   

இலையோடு கூடி அசைந்து அலைக்குமேல் எழுந்து நின்று ஆடும்
தோற்றம், அவ்விடம்வந்தடைந்த இம்மூவரை "எம்மை விட்டு நீங்காதீர்கள்! நில்லுங்கள்!" என்று, கலக்கம் அடைந்து கை கூப்பித் தடுப்பதை ஒத்திருந்தது.

             28
நாக நெற்றியி னன்மணி யோடைபோ
னாக நெற்றியி னன்மணி யாறுபாய்
நாக நெற்றியி னன்மலர்க் காவப்பா
னாக நெற்றியி னன்மதி தோன்றிற்றே.
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல்,
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய்
நாக நெற்றியின் நன் மலர்க் கா அப்பால்
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே
 

யானையின் நெற்றியில் அணிந்த நல்ல மணிகள் பதித்த பட்டம் போல், மலையின் உச்சியினின்று நல்ல மணிகளைக் கொண்ட ஆறு பாய்ந்தோடுவதும், தன் உச்சியில் நல்ல மலர்களைக் கொண்ட புன்னைமரங்கள் நிறைந்ததுமான சோலைக்கு அப்பால், வானத்தின் நெற்றியில் நல்ல திங்கள் அப்பொழுது உதித்தது.'நெற்றியின் நன் மலர் நாகக்கா' என மாற்றிக் கூட்டுக. 'மதி' பிறைமதி என்பது, வரும் பாடலால் அறிக. 


              29
உறைகி டந்தவிண் வேந்துயி ருண்பலென்
றுறைகி டந்தயி லோங்கர சைப்பகைத்
துறைகி டந்தக டற்பறைக் கோர்குணி
லுறைகி டந்தன வொண்பிறை தோற்றமே.
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசைப் பகைத்து,
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில்
உறை கிடந்து அன, ஒண் பிறை தோற்றமே

     ஒளி பொருந்திய அப்பிறையின் தோற்றம், மழையைக் கொண்டுள்ள விண்ணுலக வேந்தனாகிய குழந்தை நாதனின் உயிரை உண்பேனென்று உறைக்குள் கிடந்த வேலை உருவி உயர்த்திய அரசனைப் பகைத்து, உப்புக்காரம் அமைந்து கிடந்த கடலாகிய பறையை அடித்துப் போர்க்குரல் எழுப்புவதற்கென்று ஒரு குறுந்தடி வானத்தில் கிடந்ததுபோன்று இருந்தது.    
  
கிடந்த + ஆயில் - 'கிடந்தவயில்' என வேண்டியது, 'கிடந்தயில்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.

             30
சிதமி டைந்தலர்ச் சேடனை யாள்கையிற்
சிதமி டைந்தலர் சேடனை நோக்குபச்
சிதமி டைந்தலர் சேடெனத் தாங்குபற்
சிதமி டைந்தலர் சேடுகண் ணொத்தவே.
சிதம் மிடைந்த அலர்ச் சேடு அனையாள் கையில்
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப,
சிதம் மிடைந்து அலர் சேடு எனத் தாங்கு பல்
சிதம் மிடைந்து, அலர் சேடு கண் ஒத்தவே. 

Montag, 2. Juli 2018

8.தேம்பாவணி -4

   17
மருந்தடக் கனிமுக மகிழ்ந்து நாயக
னருந்தடத் தவர்க்குநல் லருளோ டாசியைத்
தருந்தடத் திவர்ந்திருட் புதைத்த சாமத்தாங்
கிருந்தடத் தேகுதற் கெழுந்து போயினார்.
மருந்து அடக் கனி முகம் மகிழ்ந்து நாயகன்,
அருந் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியைத்
தரும் தடத்து இவர்ந்து, இருள் புதைத்த
சாமத்து, ஆங்கு
இருந் தடத்து ஏகுதற்கு, எழுந்து போயினார்.


     அமுதத்தையும் வென்ற தன்மையாய் ஆண்டவனாம் அப் பாலன்
கனிந்த முகம் காட்டி மகிழ்ந்து, அரிய பெருமையாய் நல்ல அருளோடு
ஆசியை அவர்களுக்குத் தரும் மாண்பினால் அவர்கள் எழுச்சி கொண்டு,
அங்கிருந்து நெடிய வழித் தடத்திற் செல்வதற்கு இருள் கவிந்த நள்ளிரவில்
எழுந்து போயினர்.



             18
இருச்சுட ரோன்பட வீரை யாயிரங்
குருச்சுடர் மேனியைக் கொண்ட வானவர்
திருச்சுட ரோனெனச் சிறுவன் றாளிணை
பருச்சுடர் பாய்ந்துறப் பணிந்து தோன்றினார்.
இருச் சுடரோன் பட, ஈர் ஐயாயிரம்,
குருச் சுடர் மேனியைக் கொண்ட வானவர்,
திருச் சுடரோன் என் அச் சிறுவன் தாள் இணை,
பருச் சுடர் பாய்ந்து உறப் பணிந்து தோன்றினார்.
     பெருஞ் சுடரோன் எனப்படும் கதிரவன் ஒளி கெடத் தக்க நிறம்
வாய்ந்த ஒளி மேனியைக் கொண்ட பதினாயிரம் வானவர், திரண்ட ஒளி
பாய்ந்து நிலைக்குமாறு, திருச்சுடரோன் எனப்படும் அச்சிறுவனின் இரண்டு
அடிகளையும் வணங்கியவண்ணம் வந்து தோன்றினர்.

     'இருஞ்சுடர்' என்பது,எதுகை ஓசைப் பொருட்டு, 'இருச்சுடர்' என
நின்றது.




               19
எல்லியல் படச்சுட ரிரவி றோற்றினார்
பல்லியங் கடலொலி படமு ழக்கினா
ரல்லியங் குழவியை யளவில் வாழ்த்தினார்
கல்லியம் பாத்தொடை கனியப் பாடினார்.

எல் இயல் படச் சுடர் இரவில் தோற்றினார்;
பல் இயம் கடல் ஒலி பட முழக்கினார்;
அல்லி அம் குழவியை அளவு இல் வாழ்த்தினார்;
கல்லியம் பாத் தொடை கனியப் பாடினார்.


     அவ்வானவர் பகலின் தன்மை கெடுமாறு ஒளிரும் இரவு போல்
அதனைத் தோன்றச் செய்தனர்; கடலின் ஒலியும் கெடுமாறு பல இசைக்
கருவிகளை முழக்கினர்; ஆம்பல் மலர் போல் அழகிய அக்குழந்தையை
அளவில்லாது வாழ்த்தினர்; தேன் போன்ற பாடல்களைத் தொடைநயம்
கனியப் பாடினர்.

     தொடை - எதுகை; மோனை போன்ற பாடல் உறுப்புக்கள்.
                  நாதன் நீங்க நலமெலாம் நீங்கல்
     - விளம், - மா, - தேமா, - விளம், - மா, - தேமா
                 20
வார்வளர் முரசு மாரா வரிவளர் வளையு மூதா
தேர்வள ருருளுஞ் செல்லா தெருவள ரரவுந் தோன்றா
வூர்வள ரசைவு மில்லா வுறங்கிய சாமத் தேகிச்
சீர்வள ருயிர்போ யவ்வூர் செத்துடம் பொத்த தன்றே.
வார் வளர் முரசும் ஆரா, வரி வளர் வளையும் ஊதா,
தேர் வளர் உருளும் செல்லா, தெரு வளர் அரவும் தோன்றா,
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி,
சீர் வளர் உயிர் போய் அவ் ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே


     வாரால் அடித்துப் பிறக்கும் முரசு முழங்காமலும், வரிகளைத்
தன்பால் கொண்டுள்ள சங்கு ஊதாமலும், தேரோடுபொருந்திய சக்கரம் உருண்டு செல்லாமலும், தெருவிலே வளரும் ஆரவாரம் தோன்றாமலும், ஊரில் காணப்படும் நடமாட்டம் இல்லாமலும் உறங்கிக் கிடந்த நள்ளிரவில் இவர்கள் நீங்கிச் சென்றமையால், அவ்வூர் தன் சிறப்பு வளர்வதற்குக் காரணமான உயிர்போகச் செத்த உடம்பு போன்றது.
'அன்றே' - இங்கும், தொடரும் பாடல்களிலும் அசைநிலை : வரி - சங்கைச் சுற்றிக் காணப்படும் கோடு. அது 'புரி' எனப்படும். புரியின் போக்கு நோக்கி, வலம்புரி இடம்புரி எனச் சங்கு இருவகைப்படும். வலம்புரிச் சங்கே சிறப்புக் கொண்டது. 'செத்தவுடம்பு' என்பது, 'செத்துடம்பு' என வந்தது தொகுத்தல் விகாரம். அரவு - அரவம் என்பதன் கடைக்குறை.



          21
நல்வினை யுலந்த போழ்தின் னலமெலா மகலும் போலக்
கொல்வினை யறுப்ப வந்த குணத்தொகை யிறைவன் போக
வல்வினை மருளிற் பொங்கு மல்லவை யுயிரை வாட்டப்
புல்வினை மல்கிச் சீலம் புரிநலம் போயிற்றன்றோ.
நல்வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகலும் போல,
கொல் வினை அறுப்ப வந்த குணத் தொகை இறைவன் போக,
வல் வினை மருளின் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட,
புல் வினை மல்கி, சீலம் புரி நலம் போயிற்று அன்றே.


     நற்செயல் அழிந்த போதே நலமெல்லாம் நீங்குதல் போல, கொல்லும் தன்மை வாய்ந்த பாவ வினையை அறுக்க அவதரித்து வந்த, குணமெல்லாம் தொகையாகக் கொண்ட ஆண்டவன் நீங்கிப் போகவே, வலிமையின் வயப்பட்ட அறிவு மயக்கத்தால் பெருகும் பாவங்கள் உயிரை வாட்ட, அதனால் தீவினை பெருகி, நல்லொழுக்கத்தால் வரும் நன்மையெல்லாம் போயிற்று.
 அல்லவை - அறம் அல்லாதவை: மறங்கள் - பாவங்கள் நல்வினை
- புல்வினை.

 
                  22
இருள்புரி கங்கு னாப்ப ணிரிந்தறக் கடலோன் போக
வருள்புரி வுணர்வு காட்சி யறந்தவஞ் சுருதி தானந்
தெருள்பொறை நீதி வீரஞ் சீர்தகை யுறுதி ஞானம்
பொருள்புகழ் மற்றப் பொலிநலம் போயிற் றன்றே.
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அறக் கடலோன் போக,
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்றப் பொலி நலம் போயிற்று அன்றே.
     
இருளைச் செய்யும் இரவின் நடுவே அறக் கடலாகிய ஆண்டவன்
நீங்கிச் செல்லவே, அருளும் அன்பும் உணர்வும் அறிவும் அறமும்
தவமும் வேதமும் கொடையும் உறுதியும் ஞானமும் பொருளும் புகழும்
புலமையும் மற்றுமாக ஒரு நாட்டைப் பொலியச் செய்யும் நலமெல்லாம்
போயிற்று.