Donnerstag, 28. Juni 2018

8.தேம்பாவணி -3

எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான்
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர்;
பிதிர் இலாத் திரு உளம் பேணித் தேரினார்.


     தனக்கு எதிர் இல்லாதவனும் பகைஇல்லாதவனும் ஒப்புமை எதுவும்
இல்லாதவனும் கெடுதல் இல்லாத வல்லமை உள்ளவனும் உணர்வுக்கு
எட்டாமல் உயர்ந்து நின்றவனுமாகிய ஆண்டவனின் உதறக்கூடாத கட்டளை இது என்று அவ்விருவரும் அவனைத் தொழுது வேண்டினர்; சிதைதல் இல்லாத அவன் திருவுளத்தை விரும்பி ஏற்றுத் தெளிவு கொண்டனர்.



                          11
தேரிய மனத்தவர் தேறி நாயக
னாரிய முகத்துறை யங்க ணேகினார்
நீரிய முகிலெனப் படத்தை நீக்கலாற்
சூரிய னவியெனத் தோன்றல் தோன்றினான்.
தேரிய மனத்தவர் தேறி, நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார்;
நீரிய முகில் என் அப் படத்தை நீக்கலால்,
சூரியன் நவி எனத் தோன்றல் தோன்றினான்.


     தெளிந்த மனங் கொண்ட அவ்விருவரும் தேறி, ஆண்டவன்
அழகிய முகத்தோடு இருந்த அவ்விடம் சென்றனர்; நீரால் நிறைந்த
மேகம் என்னத்தக்க அப் போர்வையை விலக்கவும், ஆதவன் அழகு
போல் அம்மகன் தோன்றினான்.

     நவி - நவ்வி என்ற சொல்லின் இடைக்குறை.




                                12
முப்பொழு தொருபொழு தாக முற்றுணர்ந்
தெப்பொழு தனைத்துமெப் பொருளி யாவிலு
மெய்ப்பொரு டெளித்தவிர் காட்சி மேன்மையா
னப்பொழு துறங்கினா னன்னப் பார்ப்பனான்.        
முப் பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எப் பொழுது அனைத்தும் எப்பொருள் யாவினும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சிமேன்மையான்,
அப்பொழுது உறங்கினான், அன்னப் பார்ப்பு அனான்


.
இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களும் ஒரு காலமே  போல முற்றிலும் உணர்ந்து, எக் காலமாயினும் அனைத்திலும் எப்பொருளா
யினும் யாவற்றிலும் உண்மைப் பொருளைத் தெளிவித்து விளங்கும் முற்றறிவினால் மேம்பட்டவனாகிய குழந்தைநாதன், அன்னக் குஞ்சு போன்றவனாய், அப்பொழுது உறங்கிக் கொண்டிருந்தான்.

     
பொருள் + யாவினும் - 'பொருளியாவினும்' என, யகரப் புணர்ச்சியில்
இடையே இகரம் பெற்றது.



              13
கலைமுகந் தருந்திய புலமைக் காட்சியோ
யலைமுகந் தருந்திய வருளென் றுன்பணி
கொலைமுகந் தருந்துயர் கொண்டுஞ்
செய்வலென்
றுலைமுகந் தருந்தழற் குருகி யேந்தினாள்.
"கலை முகந்து அருந்திய புலமைக் காட்சியோய்,
அலை முகந்து அருந்திய அருள் என்று, உன் பணி,
கொலை முகந்த அருந்துயர் கொண்டும்,
செய்வல்!" என்று,
உலை முகந்த அருந் தழற்கு உருகி, ஏந்தினாள்.


     மரியாள், உலையினின்று வாரிக் கொண்ட அரிய நெருப்புப் போன்ற அந்நிலைக்கு மனம் உருகி, "கலைகளையெல்லாம் வாரி உட்கொண்ட புலமைக்கு ஒப்பான அறிவு கொண்ட ஆண்டவனே, கொலையைத் தழுவ வேண்டிய அரிய துயரத்தை அடைய நேர்ந்தாலும், அதனை, கடலை வாரி உண்ட (கடலினும் பெரிதாய) உன் அருளென்று மதித்து, உன் கட்டளையைச் செய்வேன்!" என்று கூறி, அம்மகனை ஏந்தி எடுத்துக் கொண்டாள்.


            14
ஏர்வள ரடிபணிந் திளவ லேந்தலி
னீர்வளர் குவளைதேன் றுளித்த னேரவன்
சீர்வளர் விழிமலர் சிறந்து முத்துகச் சூர்வளர்
மனத்தவர் துகைத்து ளேங்கினார்.
ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின்,
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர், அவன்
சீர் வளர் விழி மலர் திறந்து முத்து உக,
சூர் வளர் மனத்து அவர், துகைத்து உள் ஏங்கினார்.


 அழகு நிறைந்த அடிகளைப் பணிந்து குழந்தை நாதனை ஏந்தி
எடுக்கவும், நீரில் வளரும் குவளை மலர் தேனைத் துளித்தது போல்,
அவன் சிறப்பு நிறைந்த தன் கண்ணாகிய மலரைத் திறந்து முத்துப் போன்ற கண்ணீரைச் சொரியவே, துன்பம் பெருகிய மனத்தைக் கொண்ட அவ்விருவரும், மிதிக்கப்பட்ட தன்மையாய்த் தம் உள்ளத்துள் ஏங்கினர்.


             15

கதிர்தருங் காதலன் கன்னித் தாயுரத்
தெதிர்தரும் விழிகலந் தினிதிற் சாய்ந்தனன்
முதிர்தரு மமிர்துக முறுவற் கொட்டலாற்
பொதிர்தரு மின்பமுற் றிருவர் பொங்கினார்.

கதிர் தரும் காதலன் கன்னித் தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன்,
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்,
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார்.


       ஒளியை வீசும் மகன் தன் கன்னித் தாயின் மார்பில், எதிர்ப்
படும் இருவர் கண்களும் கலக்குமாறு நோக்கி இனிது சாய்ந்து கொண்டவனாய், முதிர்ந்த அமிழ்தத்தைப் பொழிந்த தன்மையாய்ப் புன்முறுவல் காட்டவே, அவ்விருவரும் நிறைவு தரும் இன்பம்
அடைந்து மனம் பூரித்தனர்.


              16
பொங்கிய வருத்தியாற் பொலிந்த கன்னியுந்
தங்கிய கொடியொடுட் டளிர்த்த சூசையும்
பங்கய மலரடி பணிந்து பாலனை
யங்கிவ ரகலுதற் காசி கேட்டனர்.
பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும்,
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்,
பங்கய மலர் அடி பணிந்து, பாலனை அங்கு
இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர்.


       பொங்கிய ஆசையோடு பொலிந்த கன்னித் தாயும்,
தன்னிடமுள்ள மலர்க் கொடியோடு உள்ளமும் தழைத்த சூசையும்,
குழந்தை நாதனின் தாமரை மலர் போன்ற அடிகளை வணங்கி,
அங்குப் போவதற்கு இவ்விருவரும் அப்பாலனையே ஆசி கேட்டனர்.  

Montag, 25. Juni 2018

8.தேம்பாவணி -2

அழல் குளித்த பைந் தாதோ? கண் பாய் வேலோ? அகல் வாய்ப் புண்
 புழல் குளித்த செந் தீயோ? உருமோ? கூற்றோ? பொருவு இன்றி 
நிழல் குளித்த உரு வானோன் கொடுஞ் சொல் கேட்டு, நெடுங் கடல் நீர்ச் சுழல் குளித்த மனம் சோர்ந்து, வளன், அப்பணியைத் தொழுது, உளைந்தான்.

அச் சொல்லைக்கேட்ட சூசையின் உள்ளம் நெருப்பில் மூழ்கிய பசுமையான பூந்தாதோ? அக்கொடுஞ்சொல் கண்ணில் பாய்ந்த வேல் தானோ? அகன்ற வாயை உடைய புண்ணின் துவாரத்துள் நுழைந்த செந்தீயோ? இடியோ? கூற்றுவனோ? ஒப்பற்ற விதமாய் ஒளியில் மூழ்கிய உருவத்தைக் கொண்ட அவ்வானவனின் கொடுஞ் சொல்லைக் கேட்டு, நெடிய கடல் நீரில் உண்டான சுழியில் அகப்பட்டு மூழ்கிய தன்மையாய் மனம் சோர்ந்து, அக்கட்டளையைச் சூசை தொழுது ஏற்றுக்கொண்டு, பின்னும் வருந்தினான். 

6
மலிநிழற்பட் டலர்மலரின் னொய்யஞ் சேயின் மழவினையும் 
 பொலிநிழற்பட் டலர்பூங்கொம் பொத்தா ணொய்வும் புரைவினையா லலிநிழற்பட் டெரியெசித்தார் நாட்டின் சேணு மாய்ந்தவளன் 
புலிநிழற்பட் டேங்கியமான் போல வேங்கிப் புலம்பினனால். 
 மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழவினையும், 
பொலி நிழல் பட்டு அலர் பூங் கொம்பு ஒத்தாள் நொய்வும், புரை வினையால் அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன், 
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கிப் புலம்பினன் ஆல்.

 நிறைந்த நிழலில் வளர்ந்து மலர்ந்த பூவினும் மென்மையான அழகிய மகனின் இளமையையும், பொலிந்த நிழலிடையே வளர்ந்து மலர்ந்த பூங்கொம்பு போன்ற மரியாளின் மென்மையையும், தம் பாவச் செயல்களால் நெருப்பின் நிழலில் அகப்பட்டதுபோல எரியும் எசித்து மக்கள் வாழும் நாட்டின் தொலைவையும் ஆராய்ந்து பார்த்த சூசை, புலியின் நிழல் தன்மேல் பட்டு ஏங்கிய மான்போல ஏங்கிப் புலம்பினான். 

 7
 அறிவின்மை யுறவின்மை யறத்தி னின்மை யங்கட்சென் 
 னெறியின்மை நெறிதொலைக்கு முறுதி யின்மை நெறிதன்னிற் 
 பறியின்மை சார்பின்மை தன்பா லின்மை பரிசல்லாற் 
பிறிவின்மை யோர்ந்துளைந்தா னுளைந்து மீண்டே பிரிவுற்றான். 
 அறிவு இன்மை, உறவு இன்மை, அறத்தின் இன்மை, அங்கண் செல் 
 நெறி இன்மை, நெறி தொலைக்கும் உறுதி இன்மை, நெறி தன்னில் 
 பறி இன்மை, சார்பு இன்மை, தன்பால் இன்மை பரிசு அல்லால் 
 பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான்; உளைந்து, மீண்டே பிரிவு உற்றான்

அங்கு அறிமுகமானவர் இல்லாமை, உறவினர் இல்லாமை, அறவுணர்வு கொண்டவர் இல்லாமை, அங்குச் செல்லும் வழித் தெரியாமை, வழியைக் கடந்து தொலைக்கும் துணை இல்லாமை, வழியில் பொன் இல்லாமை, பிற சார்பு எதுவும் இல்லாமை, தன்னிடம் வறுமைத்தன்மையே அல்லாமல் வேறொன்றும் இல்லாமை - இவற்றையெல்லாம் நினைந்து வருந்தினான்; இவ்வாறெல்லாம் சிறிது நேரம் வருந்தியும், பின் அங்கிருந்து பிரிந்து மரியாளிடம் சென்றான். 

 எசித்துப் பயணம் -

விளம், - விளம், - மா, கூவிளம் 

 8 
 வேரியந் தாரினான் விரைந்தெ ழுந்தனன் 
 மாரியந் தாரையின் வளர்கண் டாரைநீர் 
நேரியந் துணைவியை நேடி நாயகன் 
றேரியங் கேவிய பணியைச் செப்பினான். 
 வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்;
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர் 
 நேரி, அம் துணைவியை நேடி, நாயகன் 
தேரி அங்கு ஏவிய பணியைச் செப்பினான். 

 மணமுள்ள அழகிய மலர்க் கொடியை மாலையாகக்கொண்ட சூசை விரைந்து எழுந்தான்; மழையின் அழகிய நீர்த் தாரை போல், தன் கண்ணில் பிறக்கும் கண்ணீர்த் தாரை சொரிந்து, அழகிய தன் துணைவியைத் தேடிக் கண்டு, ஆண்டவன் நல்ல தென்று தெளிந்து அங்கு வானவன் மூலம் ஏவிய கட்டளையை எடுத்துக் கூறினான். நேர்ந்து, தேர்ந்து என்ற சொற்கள், எதுகைப் பொருட்டு, நேரி, தேரி என நின்றன. 

 9 
செய்யிதட் டாமரை பழித்த சீறடித் 
துய்யிதட் டுப்பவிழ் சுருதி வாயினா 
ளையிதட் டாரினா னறையத் தீமுனர் 
 நொய்யிதட் டாதென நொந்து வாடினாள். 
 செய் இதழ்த் தாமரை பழித்த சீறு அடித் 
துய் இதழ்த் துப்பு அவிழ் சுருதி வாயினாள், 
 ஐ இதழ்த் தாரினான் அறைய, தீமுனர் 
 நொய் இதழ்த் தாது என நொந்து வாடினாள்.

 செந்நிற இதழ்களைக் கொண்ட தாமரை மலரைப் பழித்த சிறிய அடிகளும் தூய உதடுகள் பவளம் போல் விரியும் வேத வாயும் கொண்ட மரியாள், அழகிய இதழ்கள் உள்ள மலர்க் கொடியை மாலையாகக் கொண்ட சூசை இவ்வாறு கூறவும், மெல்லிய இதழ்களிடையே இருக்கும் பூந்தாது தீயின்முன் இடப் பட்டாற்போல நொந்து வாடினாள். 'இதழ்' என்ற சொல், 'இதள்' என நின்றாற் போலக் கொண்டு, வருமொழியில் தகரம் வர, ளகரமும் தகரமும் டகரங்களாக மாறும் விதியை ழகரத்திற்கும் பொருந்துவதாகக் கொண்டமைத்த இடம் இது. கந்த புராணத் தொடக்கத்துக் கச்சியப்ப முனிவர், 'திகழ் தசக்கரம்' என்பதனை, 'திகட சக்கரம்' எனப் பொருத்தியது இதற்கு மேற்கோளாக அமையும். சிறுமை + அடி - சீறடி. 

 10
 எதிரிலான் பகையிலா னிணையெ லாமிலா 
 னுதிரிலா மதுகையா லுணர்வின் மேனின்றான் 
 விதிரிலா விதியிதென் றிறைஞ்சி வேண்டினர் 
 பிதிரிலாத் திருவுளம் பேணித் தேரினார்.

Donnerstag, 21. Juni 2018

8.தேம்பாவணி -1

பைதிரம் நீங்கு படலம் (1-39பாடல்கள் ) 

 எரோதன் கொடுமைக்கு அஞ்சிச் சூசையும் 
மரியாளும் குழந்தைநாதனை எடுத்துக் கொண்டு 
சூதேய நாட்டைவிட்டு எசித்து நாட்டிற்குப் பயணம் 
மேற்கொண்டதைக் கூறும் பகுதி. பைதிரம் என்பது நாடு. 

 சூசைக்கு வானவன் கட்டளை -

 - காய், - - காய், - மா, - மா, - - காய் 

 1
 களிமுகத்தி னிவையாகிப் பைம்பூ மேய்ந்த கனலொப்பச் 
 சுளிமுகத்தி னுற்றதுய ருள்ளம் வாட்டித் துகைத்தன்னார் 
 வளிமுகத்தின் விளக்கன்ன மயங்கி யேங்க வந்தவையான்
 கிளிமுகத்தின் கிளவியொடு விரும்பி யிங்கண் கிளக்குகிற்பேன். 
 களி முகத்தின் இவை ஆகி, பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப, 
 சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டித் துகைத்து, அன்னார், 
 வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை, யான் 
 கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளக்கு கிற்பேன் :

 இவையெல்லாம் மகிழ்ச்சியோடு நடந்த பின், பசுமையான பூவை மேய முற்பட்ட நெருப்புப் போல, சினந்த தன்மையாக வந்தடைந்த துயரம் தம் உள்ளத்தை வாட்டி மிதிக்கக்கொண்டு, சூசையும் மரியாளுமாகிய அவர்கள், காற்றின் முன் இட்ட விளக்குப்போல மயங்கி ஏங்குமாறு நேர்ந்தவற்றை, கிளியினிடம் தோன்றும் இனிய சொல்லோடு நான் இங்கு விரும்பிச் சொல்ல முற்படுவேன்: இப்பகுதி பற்றிய செய்தி, பு. ஏ., மத்தேயு 2 ; 13 - 15 காண்க. 'மடக்கிளி கிளக்கும் புன்சொல்' பாயிரம் 6. 

 2
 பூந்தாமக் கொம்பனையாள் பூத்த பைம்பூ முகைமுகத்திற் 
 றேந்தாமத் திருமகனேர்ந் தின்னு மெண்ணாள் செலவன்னார் 
தாந்தாமக் கடிநகர்கண் டங்க லுள்ளி நாடொறும்பொற் காந்தாமக் கோயில்விழா வணியின் வெஃகிக் கனிசேர்வார். 

பூந் தாமக் கொம்பு அனையாள், பூத்த பைம் பூ முகை முகத்தின் 
தேன் தாமத் திரு மகன் நேர்ந்து, இன்னும் எண் நாள் செல, 
 அன்னார் தாம் தாமக் கடி நகர்க்கண் தங்கல் உள்ளி, நாள்தொறும், 
பொன் காந்து ஆம் அக் கோயில் விழா அணியின் வெஃகிக் கனி சேர்வார்.

 ஒளியுள்ள பூங்கொம்பு போன்ற மரியாள், பூக்கும் பருவத்துப் பசுமையான மலர் மொட்டுப் போன்ற முகங் கொண்டு தேன் நிறைந்த மாலை போன்ற திரு மகனைக் காணிக்கையாக நேர்ந்தபின், மேலும் எட்டு நாட்கள் அக்கோவிலுக்குச் செல்ல வசதியாக, அம்மூவரும் ஒளி பொருந்திய மதிற் காவலுள்ள அந்நகரில் தங்க நினைந்து, பொன்னொளி கொண்ட அக்கோவிலுக்கு நாள்தோறும் விழாக் கோலம் காண்பது போன்ற விருப்பத் தோடு இனிதே சென்று சேர்வர். தேன் + தாமம் - தேந்தாமம். ஒளியைக் குறிக்கும் 'காந்தம்' என்ற சொல், 'காந்து' எனக் கடைக்குறையாய் நின்றது. 

 3 
நெஞ்சுபதி கொண்டவரு ளெஞ்சா நீரார் நிறைந்தைந்நாண் 
மஞ்சுபதி கொண்டமலை யொத்த பைம்பூ மணிப்புகைசூழ் 
விஞ்சுபதி கொண்டமரர் வைகுங் கோயில் மேவியபின் 
னஞ்சுபதி கொண்டவுரைத் தூது வானோ னவின்றடைந்தான். 
 நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐந் நாள், 
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த, பைம் பூ மணிப் புகை சூழ் 
 விஞ்சு பதி கொண்டு அமரர் வைகும் கோயில், மேவிய பின், 
 நஞ்சு பதி கொண்ட உரைத் தூது வானோன் நவின்று அடைந்தான்.

 மேகங்கள் குடி கொண்ட மலை போன்று, பசுமையான மலர் போல் மெல்லிய அழகிய வாசனைப் புகைகள் சுற்றிலும் மண்டும் பதியாகக் கொண்டு வானவர் தங்கும் திருக் கோவிலுக்கு, தம் நெஞ்சில் குடி கொண்ட அருள் என்றும் நீங்காத இயல்புள்ள அம்மூவரும் நிறைவாக ஐந்து நாட்கள் சென்று வந்த பின், ஒரு வானவன் நஞ்சு குடிகொண்ட தூது மொழியைக்கூறியவாறு வந்து சேர்ந்தான் கோவிலை மலையாகவும் புகையை மேகமாகவும் கொள்க. 'உரைத் தூது' என்பதனைத் 'தூதுரை' என மாற்றுக.

 4
 கான்வயிறார் பூங்கொடியோ னுறங்குங் காலை கதிர்தும்மி 
மீன்வயிறா ருருக்காட்டி விண்ணோ னெய்தி விரைக்கொடியோ 
யூன்வயிறார் வேல்வேந்த னிளவற் கோற லுள்ளினனீ 
தேன்வயிறா ரிப்பதி நீத் தெசித்து நாட்டைச் செல்கவென்றான். 
 கான் வயிறு ஆர் பூங் கொடியோன் உறங்குங் காலை, கதிர் தும்மி, 
 மீன் வயிறு ஆர் உருக் காட்டி விண்ணோன் எய்தி, "விரைக்கொடியோய், 
 ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவற் கோறல் உள்ளினன்; நீ 
 தேன் வயிறு ஆர் இப் பதி நீத்து, எசித்து நாட்டைச் செல்க" என்றான்.

 தன்னுள் வாசனைநிறைந்த மலர்க்கொடியை உடையவனாகிய சூசை உறங்கிக் கொண்டிருந்த வேளையில், கதிரைப் பொழிந்து, விண்மீனிடத்து நிறைந்து காணும் ஒளி உருவம் காட்டி அவ் வானவன் வந்து நின்று, "வாசனை கொண்ட மலர்க்கொடியை உடையவனே, பகைவரின் ஊனைத் தன்னிடத்துக் கொண்ட வேலை உடைய மன்னன் சிறுவனைக் கொல்ல நினைந்துள்ளான்; எனவே, தன்னிடத்துத் தேன் நிறைந்துள்ள இந்நகரை விட்டு நீங்கி, எசித்து நாட்டிற்குச் செல்வாயாக" என்றான். 'நாட்டிற்குச் செல்க' என்பது, 'நாட்டைச் செல்க' என்று வந்தது உருபு மயக்கம். வேந்தன் - எரோதன், அவன் குழந்தை நாதனைக் கொல்ல நினைந்தது, 25-வது, குழவிகள் வதைப் படலம் காண்க. 5 அழற்குளித்த பைந்தாதோ கண்பாய் வேலோ வகல்வாயுட் புழற்குளித்த செந்தீயோ வுருமோ கூற்றோ பொருவின்றி நிழற்குளித்த வுருவானோன் கொடுஞ்சொற் கேட்டு நெடுங்கடனீர்ச் சுழற்குளித்த மனஞ்சோர்ந்து வளனப் பணியைத் தொழுதுளைந்தான்.

Samstag, 16. Juni 2018

7.கம்பராமாயணம் -7

ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல் 

1551.ஆடகம் தரு பூண் முயங்கிட
     அஞ்சி அஞ்சி, அனந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட,
     யாம பேரி இசைத்தலால்,
சேடகம் புனை கோதை மங்கையர்
     சிந்தையில் செறி திண்மையால்,
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர்,
     நையும் மைந்தர்கள் உய்யவே.

     சேடகம் புனை கோதை மங்கையர் - சிறப்புப் பொருந்திய
மலர்மாலையை அணிந்த மகளிர்; சிந்தையில் செறி திண்மையால் 

மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன்
மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி -
(கணவன்மார்) தம் மார்பில் அணிந்தபொன்மாலையோடு தழுவுவதற்கு
(மகளிர் மார்பில் ) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு;
அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு;  ஏடு அகம் பொதி தார்
புனைந்திட -
  பூக்களால்கட்டிய மாலையை அணிந்துகொள்ள;  யாம
பேரி இசைத்தலால் -
அப்பொழுது  கடையாமம் கழிந்ததைஅறிவிக்கும்
முரசம் ஒலித்தலால்;  நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின்
ஊடலால்வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி;  கூடல்
கண்டிலர் -
கூடி  மகிழ்தலைப்பெற்றாரில்லை.
     மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம்
கழிந்ததால் அம்மகளிர் கூடல்பெறாமல் பிரிந்தனர்.  ஊடல் - கணவனும்
மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது,  கணவனிடத்துப்புலத்தற்கும்
காரணம் இல்லாமல் இருந்தும்,  மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக்
கற்பித்துக்கொண்டுமனைவி மனம் மாறுபட்டு நிற்றல்.  மைந்தர் உய்யக்
கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும்.         61



பல்வகை ஒலிகள்
  
1552.தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன;
     தார் ஒலித்தன; பேரி ஆம்
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன;
     முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன; புள் ஒலித்தன;
     யாழ் ஒலித்தன; - எங்கணும் -
மழை ஒலித்தனபோல் கலித்த,
     மனத்தின் முந்துறு வாசியே.
     எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்;  தழை ஒலித்தன -
பீலிக்குஞ்சங்கள்விளங்கின;  வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம்
செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு
ஒலித்தன -
மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தின -
பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன;  தேர் ஒலித்தன -தேர்கள்
தெருவில் ஓடும்போது  ஒலி எழுப்பின;  முத்து  ஒலித்து  எழும்
அல்குலார் -
முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய
பெண்களுடைய;  இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள்
ஒலித்தன -
பறவைகள் கூவின;  யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன;
மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து
ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல;
கலித்தன - ஒலித்தன.
ஒலித்தன என்னும்  சொல் பல்வேறு பொருள்களில் அடுத்தடுத்து
வந்தமையால் சொற்பின்வருநிலை அணி.                          62



விளக்குகள் ஒளி மழுங்குதல்
  
1553.வையம் ஏழும் ஓர் ஏழும் ஆர் உயிரோடு
     கூட வழங்கும் அம்
மெய்யன், வீரருள்வீரன், மா மகன்மேல்
     விளைந்தது ஒர்காதலால்
நைய நைய, நல் ஐம்புலன்கள்
     அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி
     போல் மழுங்கின - தீபமே.
     வையம் ஏழும் ஓர் ஏழும் - பதினான்கு உலகங்களையும்;  ஆர்
உயிரோடு கூட வழங்கும்அம் மெய்யன் -
தன் அரிய உயிருடனே
சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்; வீரருள் வீரன் -
வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்;  மா மகன்மேல்
விளைந்தது ஓர் காதலாதல்-
தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற
பாசத்தால்; நையநைய - மிகவும் வருந்த;  நல் ஐம்புலன்கள் அவிந்து
அடங்கி -
சிறந்த ஐந்து புலன்களும்கெட்டு அடங்கிப்போக; நடுங்குவான்
தெய்வமேனி படைத்த -
நடுங்குகி்ன்றவனாகிய தயரதனதுதெய்வத்தன்மை
பொருந்திய உடலில் இருந்த;  சேய் ஒளிபோல் - செவ்விய ஒளி மெல்ல
மெல்லமழுங்குவது போல; தீபம் மழுங்கின - விளக்குகள் (பொழுது
விடிவதால்) ஒளி குறைந்தன.
     தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன.  மா
மகன் - மூத்த மகன்,ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய
இராமனைக் குறித்தது. திருவுடை மன்னன் திருமாலாகக்கொள்ளப்படுதலின்,
அவன் மேனி  ‘தெய்வமேனி’ எனச் சிறப்பிக்கப்பட்டது. உயிர்ப்பிரியும்
காலம் அடுத்தபோது,  புலன்கள் கலங்கி ஒடுங்குதலும்,  உடம்பின் ஒளி
குன்றுதலும் நிகழ்வனவாகும்.                                   63




பல்வகை இசையொலி
  
1554.வங்கியல் பல தேன் விளம்பின.;
     வாணி முந்தின பாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின;
     பம்பை பம்பின; பல் வகைப்
பொங்கு இயம் பலவும் கறங்கின;
     நூபுரங்கள் புலம்ப, வெண்
சங்கு இயம்பின; கொம்பு அலம்பின,
     சாம கீதம் நிரந்தவே.
     வங்கியம் பல - இசைக் குழல்கள் பலவும்; தேன் விளம்பின -
தேன்போலும்  இனிய இசையை ஒலித்தன;  வாணி முந்தின பாணியின்
பங்கி -
சொற்கள் முற்பட்ட இசைப்பாட்டின் வகைகள்; அம்பரம் எங்கும்
விம்மின -
வானம் எங்கும் நிறைந்தன; பம்பை பம்பின - பம்பை என்னும்
வாத்தியங்கள் பேரொலி  செய்தன;  பல்வகை -பலவகையான; பொங்கு
இயல் பலவும் -
மகளிரின் காற்சிலம்புகள் ஒலிக்க; வெண்சங்குஇயம்பின-
வெள்ளிய வளையல்கள் அவற்றிற்கேற்ப ஒலித்தன;  கொம்பு அலம்பின -
ஊது கொம்புகள் ஒலித்தன;  சாமகீதம் நிரந்த - சாமவேத இசை நிரம்பின.
     அயோத்தி நகரில் காலையில் எழுந்த பல்வேறு ஒலிகள்
குறிக்கப்பட்டன.  கொட்டுவன, தட்டுவன, ஊதுவன முதலிய வாத்தியங்கள்
பலவகை.  நூபுரங்கள் புலம்ப என்பதற்கு மகளிர் காற்சிலம்பு என்றுபொருள்
கொண்டதற்கு  ஏற்பச் ‘சங்கு இயம்பின’ என்பதற்கு வளையல்கள் ஒலித்தன
என்றுபொருள்கொள்ளப்பட்டது. சங்கு - சங்கினால் ஆகிய வளையல். ஏ -
ஈற்றசை.                                                     64



கதிரவன் தோற்றம் 

1555.தூபம் முற்றிய கார் இருட் பகை
     துள்ளி ஒடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்றென
     சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத்
     திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
     ஒத்தனன், குண குன்றிலே.
     தூபம் முற்றிய - புகைபோல எங்கும் சூழ்ந்த; கார் இருள் பகை
துள்ளி ஓடிட-
கரிய இருளாகிய பகை குதித்து ஓடிப்போகவும்; உள் எழும்
தீபம் முற்றவும்-
வீடுகளின்உள்ளே எரிகின்ற விளக்குகள் எல்லாம்; நீத்து
அகன்றென -
ஒளியைத் துறந்து மழுங்கியபோல; சேயது ஆர் உயிர்
தேய
- தன் குலத்தில் பிறந்த தயரதனது அரிய உயிர் மெலியும்படி;  வெம்
பாபம் முற்றிய பேதை செய்த -
தீவினை முதிர்ந்த கைகேயி புரிந்த;
பகைத் திறத்தினில்- பகைச் செயலால்; வெய்யவன் - சூரியன்;  குண
குன்றின் -
கிழக்கு மலையில்; கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
ஒத்தனன்
- சினம் முதிர்ந்து  மிகவும் செந்நிறம்கொண்டவன் போலக்
காணப்பட்டான்.
     சூரியன் கிழக்கு மலையில் சிவந்து  தோன்றியதனைத் தன் குலத்தில்
பிறந்த தயரதனது உயிர்ஒடுங்குமாறு கேடு சூழ்ந்த கைகேயியின்மீது கோபம்
கொண்டவன் போலத் தோன்றினான் என்றது  ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.
குண குன்று - கதிரவன் எழும் கிழக்கு மலை. குணக்கு - கிழக்கு      65



தாமரைகள் மலர்தல்
  
1556.மூவர் ஆய், முதல் ஆகி, மூலம்
     அது ஆகி, ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில்
     ஒடித்த சேவகன், சேண் நிலம்
காவல் மா மூடி சூடு பேர் எழில்
     காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம்
     மலர்ந்த - பங்கய ராசியே.
     மூவர் ஆய் - அயன்,  அரி,  அரன் என்னும் மூன்று மூர்த்திகளாகி;
முதல் ஆகி- அம்மூவர்க்குள்ளும் திருமாலாகிய முதல்வனாகி;  மூலம்
அது ஆகி -
இவையெல்லாவற்றிற்கும்அடியாய் ஆகி;  ஞாலமும் ஆகி -
உலகத்துள்ள எல்லாப் பொருள்களும் தானே ஆகி;  அத்தேவதேவர்
பிடித்த போர் வில் -
அந்த மகாதேவராகிய சிவபெருமான் பிடித்த
போரிற்குரியவில்லை; ஒடித்த சேவகன் - (சீதையை மணத்தற்காக) ஒடித்த
வீரன் ஆகிய இராமபிரான்; சேண் நிலம் காவல் - பெரிய மண் முழுதும்
காத்தற்குரிய;  மாமுடிசூடுபேர் எழில் -சிறந்த மகுடத்தைச்
சூட்டிக்கொள்ளும் பேரழகை; காணலாம் எனும் ஆசை கூர்- பார்க்கலாம்
என்னும் ஆவல் மிகுந்த;  பாவைமார் முகம் என்ன -  பெண்களின்
முகங்கள்போல;  பங்கயராசி முன்னம் மலர்ந்த - தாமரைப் பூக்களின்
கூட்டம்  முந்தி மலர்ந்தன.
     தாமரைப் பெண்களின் முகத்திற்கு உவமையாகச் சொல்வதே வழக்கம்.
இங்குப் பெண்களின் முகம்போலத்தாமரை மலர்ந்தன என்றார். இது எதிர்
நிலை உவமை அணி.


    “முதலாவார் மூவரே;  அம்மூவர்  உள்ளும்
     முதலாவான் மூரிநீர் வண்ணன்”


என்பது பொய்கையாரின் முதல் திருவந்தாதி.   
                    66

Montag, 11. Juni 2018

7.கம்பராமாயணம் -6

1541.எண் தரும் கடை சென்ற
     யாமம் இயம்புகின்றன - ஏழையால்,
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
     மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன
     காமர் துணைக் கரம்
கொண்டு, தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப
     போன்றன - கோழியே.
     எண்தரும் கடை சென்ற யாமம் -  எண்ணப்படுகிற யாமங்களில்
கடைசியாய் வந்த யாமத்தில்; இயம்புகின்றன கோழி - கூவுகின்றன வாகிய
கோழிகள்;  ஏழையால் - அறிவற்றவளானகைகேயியால்;வண்டு தங்கிய தொங்கல் மார்பன்-வண்டுகள் மொய்க்கின்ற மாலையை
அணிந்த மார்பினையுடைய தயரதன்;  மயங்கி - அறிவு அழிந்து;
விம்மியவாறு எலாம் கண்டு - புலம்பியவற்றை எல்லாம் பார்த்து; நெஞ்சு
கலங்கி -
மனம் கலங்கி;  அம் சிறை ஆன - அழகிய சிறகுகளாகிய;
காமர் துணைக் கரம்கொண்டு- அழகிய இரு கைகளால்;  தம் வயிறு
எற்றி எற்றி -
தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப
போன்றன -
அழுவன போன்றிருந்தன.
     இது முதல் பதினாறு பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும்
நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்படுகின்றன. வைகறையில் இயல்பாகக் கூவும்
கோழிகள் கைகேயியால் துன்புற்ற தயரதனைப் பார்த்து அடித்துக்கொண்டு
அழுவன போன்றிருந்தன என்பது தற்குறிப்பேற்ற அணி.  இந்த அணிக்கு,
‘சிறை ஆன காமர் துணைக்கரம் என வரும் உருவக அணி அங்கமாய்
அமைந்தது.  கோழி - பால்பகா அஃறிணைப் பெயர். ஏ - ஈற்றசை.



ஒப்பு:தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரியருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா 280)       51

1542.தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி,
     மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின்
     நின்று சிலம்புவ -
கேகயத்து அரசன் பயந்த விடத்தை,
     இன்னது ஓர் கேடு சூழ்
மா கயத்தியை, உள் கொதித்து,
     மனத்து வைவன போன்றவே.
     தோய் கயத்தும் - நீராடும் குளங்களிலிருந்தும்; மரத்தும் -
மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால்
குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற
பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய
சிற்றிடையையுடைய;  மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச்
சிலம்புகள்போலிருந்து;  சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன்
பயந்த விடத்தை -
கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை;
இன்னது ஓர்கேடு  சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த;  மா
கயத்தியை -
மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து  - உள்ளம்
புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை
ஒத்திருந்தன;  ஏ -அசை.
     பறவைகள் விடியற் காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு
அவளைத்
தம் மனத்தினுள் வைவது  போலும் என்றார். இது தற்குறிப்பற்ற அணி,
கணவன் உயிரை வாங்கக் காரணமாதலின்‘விடத்தை’ என்றார்.  கயத்தி -
கயவன் என்பதன் பெண்பால்; கீழ்மையுடையவள். அவள் செயலின்
கொடுமை நோக்கி ‘மா கயத்தி’ என்றார். ஏ - அசை                 52



யானைகள் துயில் ஒழிந்து எழுதல்  

1543.சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த
     இன் துயில் செய்தபின்,
‘வாம மேகலை மங்கையொடு வனத்துள்,
     யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்’ என்று
     நடுங்குகின்ற மனத்தவாய்,
‘யாமும் இம் மண் இறத்தும்’
     என்பனபோல் எழுந்தன - யானையே.
     யானை - யானைகள்;  சேமம் என்பன பற்றி - தமக்குப்
பாதுகாப்பான கூடங்களில்பொருந்தி;  அன்பு திருந்த இன்துயில்
செய்தபின் -
இராமபிரானிடத்து அன்பு மிக இனிதுதூக்கத்தைச் செய்த
பின்பு;  வாம மேகலை மங்கையொடு - அழகிய மேகலை அணிந்த சீதை
யோடு;  யாரும் மறக்கிலா நாம நம்பி - எவரும் மறக்க முடியாத
திருப்பெயரை உடைய இராமபிரான்; வனத்துள் நடக்கும் என்று -
காட்டிற்குச் செல்வான் என்று;  நடுங்குகின்ற மனத்தவாய்- வருந்துகின்ற
நெஞ்சையுடையவனவாய்;  ‘யாமும் இம் மண் இறத்தும் - நாமும் இந்த
நாட்டைவிட்டுச் செல்வோம்;’  என்பன போல் - என்று கூறுவன போல;
எழுந்தன -கிளம்பின.
     யானைகள் எழுந்ததை, இராமபிரான் நாட்டை விட்டுக் காட்டுக்குச்
செல்லப் போவதனால் நாமும்இந்நாட்டைவிட்டுச் செல்வோம் என எழுந்தது
போலத் தோன்றியது என்கிறார். இது தற்குறிப்பேற்றஅணி. சேமம் - கூட்டு
மிடம்;  கூடம். வாமம் - அழகு. மேகலை - எண்கோவை மணி.  யானை -
பால்பகாஅஃறினைப் பெயர்.                                    53


விண்மீன்கள் மறைதல்  

1544.
சிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை,
     திருமாலை, அக்
கரிக் கரம் பொரு கைத்தலத்து, உயர் காப்பு
     நாண் அணிதற்குமுன்
வரித்த தண் கதிர் முத்தது ஆகி,
     இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்

விரித்த பந்தர் பிரித்தது ஆம் என,
     மீன் ஒளித்தது - வானமே.
     சிரித்த பங்கயம் ஒத்த - மலர்ந்த தாமரைப் பூக்களைப் போன்ற;
செங்கண்திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய
இராமபிரானது;  கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது
துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்;  உயர்காப்பு நாண் -  சிறந்த
மங்கல நாணை;  அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே;  இம் மண்
அனைத்தும் நிழற்ற -
இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்;
வரித்ததண் கதிர் முத்தது ஆகி- கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய
முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி
வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என- பிரிக்கப்பட்டது
போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது- விண்மீன்களோடு மறைந்தது.
     வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும்
கொண்டு, காலையில் விண்மீன்கள்மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில்
முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார்.இது
தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன்,  அதற்குரிய தலைவன்
வலங்கையில்காப்புக் கயிறு  (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த
பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு;  வேற்றுமை
மயக்கம்.                                                     54


மகளிர் எழுதல்
  
1545.‘நாம விற் கை இராமனைத் தொழும் நாள்
     அடைந்த நமக்கு எலாம்,
காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது’
     என்பது கற்பியா,
தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி,
     சாரல் மாரி தழங்கலால்,
மா மயில் குலம் என்ன, முன்னம்
     மலர்ந்து எழுந்தனர், மாதரே,
     நாம வில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும்
கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை;  தொழும் நாள் அடைந்த
நமக்கு எலாம் -
வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்;
காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனது கரும்பு வில்லுக்குத்
தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது;  கரித்தது - நீங்கியது;
என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக் கொண்டு; பேரி ஒலித்தன -
முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி- அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்-
மலைப் பக்கங்களில் தங்கியமேகம்போல முழங்கியதால்; மாமயில் குலம் என்ன - பெரிய மயில்களின்
கூட்டம் எழுந்தாற்போல; மாதர் - மகளிர்;  முன்னம் மலர்ந்து
எழுந்தனர்
- தம் கணவர் எழுவதற்குமுன்னே முகம் மலர்ந்து
துயிலினின்றும் எழுந்தனர்;
     நாமம் - அச்சம். கங்குல் மாலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
ஏ - ஈற்றசை.                                                 55


1546.இன மலர்க் குலம்வாய் விரித்து,
     இள வாச மாருதம் வீச, முன்
புனை துகிற்கலை சோர, நெஞ்சு
     புழுங்கினார் சில பூவைமார்;
மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப்
     புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார்
     சில கன்னிமார்.
     சில பூவைமார் - பெண்கள் சிலர்;  இன மலர் குலம் வாய்
விரித்து-
பல்வகையானபூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள
மாருதம் வீச -
நறுமணம் கலந்த இளங்காற்றுவீசுதலினால்; முன் புனை-
முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலைசோர - அடையும்
மேகலையும் குலைய;  நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில
கன்னிமார் -
மணமாகா மகளிர் சிலர்; மனம் அணுக்கம் விட - நெஞ்சில்
உள்ள வருத்தம்  தீர;  தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்);
வள்ளலைப்புணர்- இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன்
கனவுக்கு -
மிக்க வஞ்சனையையுடையகனாவிற்கு;  இடையூறு அடுக்க -
காற்றினால் தடை பொருந்துதலினால்;  மயங்கினார் -திகைத்தனர்.
     தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த
மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாதபெண் காற்றினால் தூக்கம் கலைந்து
கனவு நீங்க,  உண்மையறிந்து  மயங்கினர். விரித்து -விரிய;  செய்தென்
எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு.                       56



குமுதங்கள் குவிதல் 

1547.சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு
     தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு,
     அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு,
     சீரிய நங்கையார்.

வாய் அடங்கின என்ன வந்து குவிந்த -
     வண் குமுதங்களே.
     சாய் அடங்க - தன் பெருமை அழியவும்;  நலம் கலந்து  தயங்கு
தன்குல நன்மையும்-
நன்மை பொருந்தி விளங்குகின்ற  தனது  குலத்தின்
சிறப்பும்;  போய் அடங்க -  கெட்டழியவும்; நெடுங் கொடும் பழி
கொண்டு
- நெடுங்காலம் நிற்பதாகிய கொடிய பழியையேற்றும்; அரும்
புகழ் சிந்தும்
- பெறுதற்கரிய புகழைச் சிதறுகின்ற;  அத் தீ அடங்கிய
சிந்தையாள்-
அந்தக் கொடுமை பொருந்திய மனத்தையுடைய
கைகேயியினது;  செயல் கண்டு - தகாத செயலைப்பார்த்து;  சீரிய
நங்கைமார் வாய் -
சிறந்த பெண்களின் வாய்கள்;  அடங்கின என்ன-
அடங்கி மூடினாற்போல; வண்  குமுதங்கள் - வளப்பத்தையுடைய
செவ்வாம் பல் மலர்கள்;வந்து  குவிந்த - (இதழ்கள் கூடி) மூடின.
     ஆம்பல் மலர் காலையில் குவிதல் இயற்கை நிகழ்ச்சி. அது
கைகேயியின் கொடுமை கண்டு குலப்பெண்டிர்வாயடங்கியிருந்தாற்போன்று
இருந்தது என்பது தற்குறிப் பேற்றம். பழி கொண்டு புகழ் சிந்தினாள்என்பது
மாற்றுநிலை அணி (பரிவர்த்தனாலங்காரம்). தீ - உலமவாகு பெயர்;
தீப்போலும் கொடுமையைக்குறித்தது.   


                          57
1548. மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு
     தீயின் முழங்க, மேல்
வை அராவிய மாரன் வாளியும், வான்
     நிலா நெடு வாடையும்,
மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு
     மாதர்தம் மென் செவி,
பை அரா நுழைகின்ற போன்றன -
     பண் கனிந்து எழு பாடலே.
     மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில்
நிறையும்படியும்;  ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த
எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே;  வை
அராவிய மாரன் வாளியும்-
கூர்மை செய்யப்பட்ட மன்மதன்அம்புகளும்;
வான் நிலா நெடு வாடையும்- விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்;
மெய் அராவிட -  உடலை அறுத்தலால்;  ஆவி சோர - உயிர் தளர;
வெதும்பும்மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய
காதுகளில்;  பண் கனிந்து  எழுபாடல் - இசை முதிர்ந்து  எழுகின்ற
பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள்
நுழைவனவற்றை ஒத்தன;
     கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும்
இரவில் வருத்த. காலையில்எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை
மிகுவித்துத்
துன்புறுத்தின. அராகம் - காதல்; பொருளிடத்துத் தோன்றும்
பற்றுள்ளம். ஆசை - உள்ளம்விரும்பியதைப் பெறவேண்டும் என்று மேலும்
மேலும் நிகழ்வது.  நிலா நெடுவாடை - நிலாவும் நெடியவாடைக் காற்றும்.
பாடல் - பள்ளியெழுச்சிப் பாடல்.  ஏ - ஈற்றசை.                   58

ஆடவர் பள்ளியெழுச்சி  
1549.‘ஆழியான் முடி சூடும் நாள்,
     இடை ஆன பாவிஇது ஓர் இரா
ஊழி ஆயினவாறு’ எனா, உயர்த
     போதின்மேல் உறை பேதையும்,
ஏழு லோகமும், எண் தவம் செய்த
     கண்ணும், எங்கள் மனங்களும்,
வாழும் நாள் இது’ எனா எழுந்தனர் -
     மஞ்ச தோய் புய மஞ்சரே.
     மஞ்சு தோய் புய மஞ்சர் - மேகத்தை யொத்த கைகளையுடைய
ஆடவர்;  ஆழியான்முடிசூடும் நாள் - சக்கரப்படை ஏந்திய இராம
பிரான் மகுடம் சூடிக்கொள்ளும் நாளுக்கு;  இடை ஆன - நடுவிலே வந்த;
பாவி இது  ஓர் இரா - பாவியாகிய இந்த ஓர் இரவு;  ஊழி ஆயினவாறு
எனா -
ஊழிக்காலம் போல நெடிதாய் இருந்தது  என்னோ என்று
எண்ணியும்;  உயர் போதின்மேல் உறை பேதையும் - சிறந்த
தாமரைமலரில் தங்கியுள்ள திருமகளும்; ஏழுலோகமும் - ஏழு உலகத்தில்
வாழ்வோரும்;  எண் தவம் செய்த கண்ணும் - முடி சூட்டுவிழாவைக்
காணப் பெருமைக்குரிய தவத்தைப் புரிந்த எங்கள் கண்களும்; எங்கள்
மனங்களும் -
அத்தகைய எங்கள் நெஞ்சங்களும்;  வாழும் நாள் இது
எனா -
வார்ச்சியுறும் காலம் இந்நாள்என்று எண்ணியும்;  எழுந்தனர் -
படுக்கையிலிருந்து எழுந்தனர்.
     இராமன் முடிசூடும் விடியலுக்குக் காத்திருந்தமையால்,  இரவு  நீண்டு
செல்வதாகத் தோன்றியது.எனவே, ‘பாவி இரா’ என்று பழித்தனர்.  எனினும்,
கைகேயி சூழ்ச்சி செய்த இரவாக அது அமைந்துஉண்மையிலேயே பாவி
இரவாக ஆயிற்று. எண் தவம் செய்த என்னும் அடையினை மனங்களோடும்
கூட்டுக.வாழும் நாள் - தாம் தோன்றியதற்குரிய பயனைஅடையும் நாள்.
இரவைப் பாவி என்றது.‘அழுக்காறு எனஒரு பாவி’ (குறள்.168) என்பது
போல.                                                      59

மகளிர் எழுதல்  
1550.
ஐஉறும் சுடர் மேனியான் எழில் காண
     மூளும் அவாவினால்,
கொய்யுறும் குல மா மலர்க் குவைநின்று
     எழுந்தனர் - கூர்மை கூர்

நெய் உறும்சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து,
     நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு
     பொம்மென விம்மவே.
     கூர்மை கூர் - கூர்மை மிக்க;  நெய்உறும் சுடர் வேல் - நெய்
பூசப்பட்டஒளிபொருந்திய வேல் போன்ற;  நெடுங் கண் முகிழ்ந்து -
நீண்ட கண்களை மூடிக்கொண்டு; நெஞ்சில் நினைப்பொடும் - மனத்தில்
இராமனைப் பற்றிய எண்ணத்தோடு;  பொய்உறங்கும் மடந்தைமார் -
கள்ளத்துயில் கொண்ட மகளிர்; ஐ உறும் சுடர் மேனியான் - வியப்பைத்
தருகின்ற ஒளிவீசும் திருமேனியையுடைய இராமபிரானது;  எழில் காண -
முடிசூடியபுதிய அழகைக் காண்பதற்கு; மூளும் அவாவினால் -
கிளர்ந்தெழுகின்ற ஆசையினால்;  கொய் உறும் குல மா மலர்க் குவை
நின்று -
கொய்யப்பட்ட சிறந்த பெரிய மலர்த்தொகுதியினால்செய்யப்பட்ட
படுக்கையிலிருந்து; குழல்வண்டு பொம்என விம்ம- இசைப்பாட்டையுடைய
வண்டுகள் பொம்மென்று  ஆளத்திவைக்க;  எழுந்தனர்-.
     ‘நாம விற்கை’ (1545) என்று தொடங்கும் பாடல் தத்தம் கணவரோடு
கூடியிருந்த பெண்கள்விழித்ததைத் தெரிவிப்பது; இப்பாடல்
கன்னிப்பெண்கள் விழித்தெழுந்ததைக் கூறுவது.  இராமனது முடிசூட்டு
விழாவைக் காணும் ஆசை நெஞ்சில் மூண்டெழுவதால் உறக்கம்
வராதிருக்கவும் கண்மூடிக் கிடந்தனர். ஆதலின் அது ‘பொய் உறக்கம்’
ஆயிற்று.  எழில் - மேலும் மேலும் வளர்ந்து சிறக்கும் அழகு. குவை -
ஆகுபெயராய் மலர்களால் ஆகிய படுக்கையை உணர்த்திற்று. குழல்
வண்டு - குழல்போல இசைபாடும்வண்டு. “பொன் பால் பொருவும் விரை
அல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது,  தன்பால் தழுவும்குழல்வண்டு,
தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே”  (3736) என்னும் இடத்தும்
இப்பொருளில்வருதல் காணலாம். பொம்மென - ஒலிக்குறிப்பு.         60

Donnerstag, 7. Juni 2018

7.கம்பராமாயணம் -5

40
1531.‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும்,
     உயர் கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர்”
     என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர்காறும், எல் வளையார்,
     தம் இறையோரைச்

கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? -
     கொடியோளே!
     ‘எல் வளையார் - ஒளி பொருந்திய வளையலையுடைய மகளிர்;
ஒன்றா நின்ற ஆர்உயிரோடும் -  உடலோடு ஒன்று சேர்ந்த அரிய
உயிருடனே; உயர் கேள்வர் - தம்உயர்ந்த கணவர்; பொன்றா முன்னம்
பொன்றினர் -
இறப்பதற்கு முன்னே தாங்கள் இறந்தனர்; என்னும் புகழ்
அல்லால் -
எனப்படும் கீர்த்தியைக் கொண்டனரேயன்றி;  இன்றுகாறும்-
இன்றுவரை; தம் இறையோரைக் கொன்றார் இல்லை - தம் கணவரைக்
கொலை செய்தவர்இல்லை; கொடியாளே- கொடுமையுள்ளங் கொண்டவே!;
நீ கொல்லுதியோ - (அவ்வுலகஇயல்புக்கு மாறாக) நீ (என்னைக்)
கொல்லுகின்றாயோ -’
    இது முதல் ஐந்து பாடல்கள் ஒரு தொடர். 45 ஆம் பாட்டொடு
முடியும். அப்பாட்டில் வரும் தோளான்என்பது இவற்றிற்கு எழுவாய். இன்று
ஓர் காறும்; ஒர் - அசை.

     இதுவரை கணவனைக் கொன்ற மகளிர் இல்லை.  நீ கணவனாகிய
என்னைக் கொல்லுகின்றாய் ஆதலின்உன்போலக் கொடியவர் உண்டோ
என்று தயரதன் கைகேயியை இகழ்ந்தான். பத்தினிப் பெண்டிர்கணவன்
இறந்தபின் உயிர்வாழா இயல்பினர் என்று நூல்கள் கூறும்.


    “பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
     வள்இதழ் அவிழ்ந்த தாமரை
     நள்இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே”      
(புறம் 246)

   “தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல்,
    பெருங் கோப்பெண்டும் ஒருங்கு உடன் மாய்ந்தனன்”


                                    
(சிலம்பு 3:25: 85 - 86)

    “காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி,
    ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
    இன்உயிர் ஈவர்;  ஈயார் ஆயின்,
    நன்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்”


                                 
(மணிமேகலை;  2:42 - 48)

    “தரைமகளும் தன்கொழுநன் உடலம் தன்னைத்
    தாங்காமல் தன்கரத்தால் தாங்கி விண்நாட்டு
    அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
    ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்”


                                  
(கலிங்கத்துப் பரணி, 483)
    “போரில்,
     விடன் ஏந்தும் வேலாற்கும் வெள்வளையினாட்கும்
     உடனே உலந்தது உயிர்”


                        
(புறப்பொருள் வெண்பா மாலை: (262)
ஆகியவை காணத்தக்கன.                               41


1532.‘ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்;
     அறம் எண்ணாய்;
“ஆ!” என்பாயோ அல்லை; மனத்தால்
     அருள் கொன்றாய்;
நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்;
     இனி, ஞாலம்
பாவம் பாராது, இன் உயிர்
     கொள்ளப் படுகின்றாய்!
     ‘ஏவம் பாராய் - (என்) துன்பத்தைப் பார்க்கின்றாய் அல்லை;  இல்
முறை நோக்காய்-
நற்குடிப் பிறந்த பெண்ணின் நடைமுறையையும்
கருதுவாய் அல்லை; அறம் எண்ணாய் -தருமத்தையும் நினைக்க மாட்டாய்;
ஆ என்பாயோ அல்லை - ஐயோ என்று இரங்குவாயும் அல்லை;
மனத்தால் அருள் கொன்றாய் - உன் மனத்தில் அருள் என்னும்
பண்பையே கொன்றுவிட்டாய்; என் ஆர் உயிர் - என்னுடைய அரிய
உயிரையும்;  நா அம்பால் உண்டாய் - உன் நாக்காகியஅம்பினால்
கொன்றாய்; இனி ஞாலம் பாவம் பாராது - இனி இவ் வுலகத்து மக்களால்
(பெண்கொலை)பாவம் என்று பாராமல்;  இன் உயிர் கொள்ளப்
படுகின்றாய் -
உன் இனிய உயிரைக்கொள்ளப்படப் போகின்றாய்.
     பெண்ணிற்குரிய எந்த நற்பண்பும் இல்லாத உன்னை உலகத்தாரே
கொன்றொழிப்பர் என்கிறான்.ஏவம் - எவ்வம் என்பதன் விகாரம் மனத்தால்
அருள் - உருபு மயக்கம்.  உண்டாய் - தெளிவு பற்றிவந்தகால
வழுவமைதி.                                                  42



1533.‘ஏண்பால் ஓவா நாண்,
     மடம், அச்சம், இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்;
     புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர்
     தம்பால் நணுகாரே;
ஆண்பாலாரே; பெண்பால்
     ஆரோடு அடைவு அம்மா?
     ‘ஏண்பால் ஓவா - பெருமையின் பகுதியிலிருந்து நீங்காத; நாண்,
மடம் அச்சம்-
நாணம், மடம்,  அச்சம் முதலிய;  இவை தம் பூண்பால்
ஆக
- இவற்றைத் தம்முடையஅணிகலன்களாக; காண்பவர் நல்லார் -
கருதுபவர் நற்பெண்டிர் ஆவர்; புகழ் பேணி -புகழை விரும்பி; நாண்பால்
ஓரா நங்கையர் -
நாணத்தின் தன்மையை அறியாத மகளிர்; தம் பால்
நணுகாரே
- தம் இனத்தில் சேர்ந்தவர் ஆகார்;

ஆண்பாலாரே -(அவர்கள்) ஆண்மக்களே;  பெண்பால் ஆரோடு
அடைவு அம்மா -
பெண்ணினத்தில் யாரோடுசார்ந்தவர் ஆவார்?’
(ஒருவரோடும் சார்ந்தவர் அல்லர்)
     பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம்,  மடம், அச்சம், பயிர்ப்பு
என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் -
தகாதவற்றின்கண்உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும்
அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும்காணாததைக் கண்டவிடத்து
அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கைமுதலியன மேற்படின்
அருவருத்தல்.  ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம்
அசை;  அம்மா - வியப்பிடைச்சொல்.                            43



1534.‘மண் ஆள்கின்றார் ஆகி,
     வலத்தால் மதியால் வைத்து
எண்ணா நின்றார் யாரையும்,
     எல்லா இகலாலும்,
விண்ணோர்காறும், வென்ற எனக்கு,
     என் மனை வாழும்
பெண்ணால் வந்தது, அந்தரம்
     என்னப் பெறுவேனோ?’


     ‘மண் ஆள்கின்றார் ஆகி - நாட்டை ஆளுகின்ற அரசர்களாகப்
பட்டம் ஏற்று;  வலத்தால் - வலிமையாலும்;  மதியால் - அறிவினாலும்;
வைத்து எண்ணாநின்றார்யாரையும் - மேலாக வைத்துப்
போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும்- தேவர்கள்
வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு-
வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என்
அரண்மனையில் வாழும்பெண்ணினால்;  அந்தரம் வந்தது என்னப்
பெறுவேனோ -
முடிவு நேர்ந்தது  என்று சொல்லத்தக்க நிலையை
அடைவேனோ!’
     வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு
அவையில்லாத மனைவியால்முடிவுவந்துவிடுமோ என்கிறான். மனை வாழும்
பெண் - மனைவி இகலால் - உருபுமயக்கம்.                        44



1535.என்று, என்று, உன்னும்;
     பன்னி இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல்
     உழக்கும்; ‘உயிர் உண்டோ?
இன்று! இன்று! ’ என்னும்
     வண்ணம் மயங்கும்; இடையும் - பொன் -

குன்று ஒன்று ஒன்றோடு
     ஒன்றியது என்னக் குவி தோளான்.
     பொன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது
என்ன -
மற்றொருபொன்மலையோடு கூடியது என்னுமாறு;  குவி
தோளான்
- திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று
உன்னும் -
முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்;  பன்னி இரங்கும் -
வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும்- துன்ப வெள்ளத்தில்
அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத;
இன்னல் உழக்கும் - பலவகைத்துன்பங்களால் வருந்துவான்; உயிர்
உண்டோ -
மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும்வண்ணம் -
இல்லை இல்லை என்று கூறும்படி;  மயங்கும் - மூர்ச்சையுறுவான்;
இடையும்- (நெஞ்சம்) உடைவான்.
     தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப்
பட்டது.  ‘பொன் குன்றுஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ -  இல்பொருள்
உவமை.                                                     45

கைகேயி, ‘உரை மறுத்தால் உயிர் விடுவேன்’ எனல்
  
1536.ஆழிப் பொன் - தேர் மன்னவன்
     இவ்வாறு அயர்வு எய்தி,
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப்
     புரள் போழ்தில்,
“ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றேல்,
     உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள்,
     பகை அற்றாள்.
     ஆழிப் பொன் தேர் மன்னவன் - சக்கரங்களையுடைய பொன்னால்
ஆகிய தேரையுடையதயரதன்; இவ்வாறு அயர்வு எய்தி - இப்படித்
தளர்ச்சி அடைந்து; பொன் தோள் முற்றும்பூழி அடங்க - அழகிய தன்
தோள்கள் முழுவதும் புழுதி போர்க்க; புரள் போழ்தில் -(தரையில்)
உருளும்போது; பசை அற்றாள் - நெஞ்சில் ஈரமில்லாத கைகேயி; ‘பாழி
பொன் தார் மன்னவ -
பெருமை பொருந்திய பொன் மாலை அணிந்த
அரசே; ஊழின் பெற்றாய்- முறையாகப் பெற்றாய்; என்று உரை - என்று
உன்வாயால் சொல்; இன்றேல் -அவ்வாறு சொல்லாவிட்டால்; உயிர்
மாய்வென் -
நான் உயிரைப் போக்கிக்கொள்வேன்;’என்றாள் -.
     இப்பாட்டு, கைகேயியின் கல்நெஞ்சைக் காட்டுகிறது. ‘மன்னவ’ என்னும்
விளி சொன்னசொல்லைக் காத்தலும், அறத்தைப் போற்றுதலும் அரசனாகிய
உன் கடமை ஆகும். அதனைச் செய்க என்னும் கருத்தைக் காட்டுகிறது. ஆழிப் பொன் தேர் மன்னவன்என்பதில் தசரதன் என்பதன் பொருள் அடங்கியிருக்கிறது.  பூழி - புழுதி.  பசை - ஈரம்,  இரக்கம்.    46


1537.‘அரிந்தான், முன் ஓர் மன்னவன்
     அன்றே அரு மேனி,
வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை வளர்ப்பான்!
     வரம் நல்கி,
பரிந்தால், என் ஆம்?’ என்றனள் -
     பாயும் கனலேபோல்,
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும்
     எரி அன்னாள்.


     பாயும் கனலேபோல் - பரந்து எரியும் தீயைப்போல; எரிந்து
ஆறாதே
- எரிந்துதணியாமல்; இன்உயிர் உண்ணும் - இனிய உயிரை
அழிக்கின்ற;  எரி அன்னாள் -நெருப்புப் போன்ற  கைகேயி;  ‘வரிந்து
ஆர் வில்லாய் -
இறுக்கிக் கட்டப்பட்டவில்லை உடையவனே!;  முன்
ஓர் மன்னவன் -
உன் குலத்தில் முன்பு தோன்றிய ஓர் அரசன்;வாய்மை
வளர்ப்பான் -
சத்தியத்தைக் காப்பதற்காக;  அருமேனி அரிந்தான்
அன்றே-
அரிய தன் உடலை அரிந்து கொடுத்தான் அல்லவா?;  வரம்
நல்கி -
(அவ்வாறிக்க)நீ முன்னே வரத்தைத் தந்துவிட்டு; பரிந்தால் என்
ஆம் -
இப்போது  வருந்தினால் என்னபயன் உண்டாகும்;’  என்றனள்-.

     வாய்மை காக்க அருமேனி அரிந்த மன்னவன் சிபிச் சக்கரவர்த்தி
ஆவான்.  ஒரு பொருளைக்பற்றி எரித்த பின் தீயானது தணிந்துவிடுவதாய்
இருக்கக் கைகேயியாகிய தீயோ உயிரோடு கூடியமன்னவனைப் பற்றி
எரித்தும் தணியாது  அவன் உயிரையும் கொள்ளுகிறது என வேற்றுமையணி
தோன்ற, எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி  அன்னால்’
என்றார்.                                                    47
தயரதன் வரம் தருதல் 

1538.‘வீய்ந்தாளே இவ் வெய்யவள்’ என்னா,
     மிடல் வேந்தன்
‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்;
     என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு
     ஆள்வென்; வசை வெள்ளம்
நீந்தாய், நீற்தாய், நின்
     மகனோடும் நெடிது!’ என்றான்.


     மிடல் வேந்தன் - வலிமை பொருந்திய தயரதன்; ‘இவ் வெய்யவன்
வீய்ந்தாளேஎன்னா -
இந்தக் கொடியவள் நாம் உடன்படாவிட்டால்இறுந்துவிடுவான் என்று கருதி;’ இவ் வரம் ஈந்தேன் ஈந்தேன் - இந்த
வரங்களைக் கொடுத்தேன்,கொடுத்தேன்; என் சேய் வனம் ஆள - என்
மகன் இராமன் காட்டை ஆள;  நான் மாய்ந்துபோய் - யான்
இறந்துபோய்;  வான் உலகு ஆள்வென் - விண்ணுலகை ஆள்வேன்;
நெடிது- நெடுங்காலம்;  நின் மகனோடும் - (நீ) நின் பிள்ளையாகிய
பரதனுடன் கூடி;  வசை வெள்ளம் - பழியாகிய கடலை;  நீந்தாய்
நீந்தாய் -
கடக்க முடியாமல் அதனுள்நீந்திக்கொண்டே இருப்பாய்;’
என்றான் -.
     தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று
அஞ்சி,  ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து  கூறினான். இவ் அடுக்கு -
தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி
இறந்த காலத்தில் கூளினார்.                                     48



தயரதன் துயர் கொள்ள, கைகேயி துயிர் கொள்ளல்
  
1539.கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி,
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்.


     கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று,  கூறி
முடிப்பதற்குள் முன்னே;கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற;
கொலைவாளின் ஏறு ஆம் என்னும் -கொலைத் தொழிலையுடைய
வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க;  வன் துயர்
ஆகத்து இடை மூழ்க -
கொடிய துன்பம் மனத்தில் புக; தேறான் ஆகி -
உணர்வற்றவன்ஆகி; செய்கை மறந்தான் - செயல்மறந்து மயங்கினான்;
செயல்முற்றி - (தன்காரியம்) முடிவுற்றதனால்; ஊறா நின்ற
சிந்தையினாளும் -
மகிழ்ச்சி  ஊறுகின்ற மனமுடையகைகேயியும்;
துயிலுற்றாள் - உறங்கினாள்.
     இப்பாட்டில், தயரதன் துயரினால் செயலற்றுக் கிடக்க, கைகேயி
மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்துதூங்கினாள் எனக் துயருற்றார்க்கும்
மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரேநிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டது.வாள்
ஏறு - வாளின் தாக்குதல். இடியேறு என்பது போல,  செயல் முற்றலாவது -
தான் வேண்டிய வரங்களைப்பெற்றுக்கொண்டது.        

            49
இரவு கழிதல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

1540.
சேண் உலாவிய நாள் எலாம் உயிர்ஒன்று
     போல்வன செய்து, பின்

ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த,
     ஒன்றும் இரங்கிலா
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு,
     மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் -
     நளிர் கங்குல் ஆகிய நங்கையே.


     சேண் உலாவிய நாள் எலாம் - நீட்சி பொருந்திய மிகப் பல
நாளும்;  உயிர்ஒன்று போல்வன செய்து - இருவருக்கும் உயிர் ஒன்றே
என்று சொல்லத்தக்க செயல்களைப் புரிந்து; பின் - பிறகு; ஏண் உலாவிய
தோளினான் -
வலிமை பொருந்திய தோள்களையுடையகணவன்; இடர்
எய்த -
துன்பத்தை அடைய;  ஒன்றும் இரங்கிலா - அது கண்டுசிறிதும்
மனம் நெகிழாத; வாள் நிலா நகை மாதராள் - ஒளிமிக்க பற்களையுடைய
கைகேயியின்; செயல்கண்டு - தீச்செயலைப் பார்த்து;  நளிர் கங்குல்
ஆகிய நங்கை -
குளிர்ந்தஇரவாகிய பெண்;  மைந்தர்முன் நிற்கவும்
நாணினாள் என -
ஆடவர் முன்னே நிற்பதற்கும்வெட்கமுற்றாள்
என்னும்படி;  ஏகினாள் - அகன்று போனாள் (இரவு கழிந்தது)
     சேண் உலாவிய நாள் எலாம் - நீண்ட காலமாக;  பல ஆண்டுகளாக;
அஃதாவது திருமணம் ஆனதுமுதல்அதுவரை உள்ள நிண்ட காலம்.
இவ்வளவு  காலமும்  ஈருடலும் ஓருயிரும் போலக் கணவனுடன் ஒன்றுபட்டு
அவன் இன்பத்தில் தான் இன்புற்றும்,  அவன் துன்பத்தில் தான் துன்புற்றும்
வாழ்ந்தவள் இப்போதுமாறுபட்டு இரக்கமின்றி அவன் பெருந் துயரத்திற்கும்
காரணமாகிப் பழியேற்றது கண்டு,  அது பெண்குலத்திற்கேஇழுக்க என்று
கருதிக் கங்குலாகிய நங்கை ஆடவர் முன் நின்றகவும் நாணி அகன்றாள்.
தற்குறிப்பேற்றஅணி. வாள்நிலா - ஒரு பொருட் பன்மொழி.  நிற்கவும் -
உம்மை இழிவு சிறப்பு.                                          50

Sonntag, 3. Juni 2018

7.கம்பராமாயணம் -4

1521.‘வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்;
     இனி, மற்று என்
ஏனோர் செய்கை? யாரொடு நீ
     இவ் அரசு அள்வாய்
யானே சொல்ல, கொள்ள
     இசைந்தான்; முறையாலே
தானேநல்கும் உன் மகனுக்கும்
     தரை’ என்றான்



     ‘வானோர் கொள்ளார் - ‘இராமனைக் காட்டுக்குத் துரத்தி விட்டுப்
பரதன் அரசாள்வதைத்தேவர்களும் எற்றுக் கொள்ளார்;  மண்ணவர்
உய்யார்
- மண்ணுலகத்தவர் எவரும் உயிர்வாழார்;  இனி மற்று ஏனோர்
செய்கை என் -
இனிமேல் பிறர் செய்கையைப் பற்றிச்

சொல்லவேண்டுவது  என்ன?;  நீ இவ் அரசு யாரொடும் ஆள்வாய் -
(அவ்வாறாயின்) நீஇந்த அரசினை யாரோடிருந்து ஆட்சி புரிவாய்?; யானே
சொல்ல -
நானே அவனை அரசேற்குமாறுசொல்ல; கொள்ள
இசைந்தான் -
ஏற்றுக்கொள்ள உடன்பட்டான்; முறையாலே - முறைப்படி;
உன் மகனுக்கும் தானே தரை நல்கும் - உன் பிள்ளைக்கும் தானே
நாட்டைக்கொடுப்பான்;’  என்றான் -.
     யான் வற்புறுத்த இராமக் அரசினை ஏற்க இசைந்தான்; அவன் ஆசை
கொண்டு முயலவில்லை.பரதன் நாட்டைப் பெறுவதற்காக இராமனைக்
காட்டிற்குத் துரத்த வேண்டுவதில்லை. நீ விரும்பினால்தானாகவே பரதனுக்கு
நாட்டை அளித்துவிடுவான். அப்பொழுது  முறைகேடு யாதும் நேராது
என்றான்தயரதன்.  எங்ஙனமாவது  இராமன் காடு செல்வதைத் தவிர்க்க
வேண்டும்  என்று கருதினான். வானோரையும்மண்ணில் வாழ்வோரையும்
முற்கூறினமையின் ஏனோர் என்றது  பிற மக்களையும் கீழுலகத்தவரையும்
குறித்தது.  

                                                   31
1522.‘ “கண்ணே வேண்டும்” என்னினும்
     ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே
     உனது அன்றோ? -
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! -
     பெறுவாயேல்,
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
     மற’ என்றான்.
     ‘பெண்ணே - ‘பெண்ணாகப் பிறந்தவளே!;  வண்மைக் கேகயன்
மானே
-வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே!;  கண்ணே
வேண்டும்  என்னினும் -
என்கண்களையே (நீ)வேண்டும்  என்றாலும்;
ஈயக் கடவேன் -  கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன்;  என் உள்நேர்
ஆவி வேண்டினும் -
எனது  உடலின் உள்ளே நிலவும் உயிரை
விரும்பினாலும்; இன்றேஉனது அன்றோ - இப்பொழுதே உன் வசமுள்ள
தல்லவா?; பெறுவாயேல் - வரத்தைப் பெறவிரும்புவாயானால்;  மண்ணே
கொள்நீ -
நாட்டை மட்டும் பெற்றுக் கொள்வாய்;  மற்றையது ஒன்றும்
மற -
மற்றொரு வரத்தை மட்டும் மறந்துவிடு;’ என்றான் -.

     பெண்களுக்குரிய இரக்கம் உன்பால் இருக்க வேண்டுவதன்றோ
என்னும் குறிப்போடு ‘பெண்ணே’ என்றும்,  உன் தந்தையின் வள்ளன்மை
உனக்கும் இருத்தல் வேண்டுமன்றோ என்னும் கருத்தோடு ‘வன்மைக்
கேகயன் மானே’ என்றும் கூறினான். கண்ணிற் சிறந்த உறுப்பு
இல்லையாதலின் அதனையும், அக்கண்ணிற் சிறந்தது  உயிராதலின்
அதனையும் தருவதாகச் சொன்னான். உனது - குறிப்பு வினைமுற்று.
மற்றையது- இராமனைக் காட்டிற்கு அனுப்புதல். அதனை வாயாற்
சொல்லவும் அஞ்சி இவ்வாறு கூறினான்.                          32




1523.‘வாய் தந்தேன் என்றே; இனி,
     யானோ அது மாற்றேன்;
நோய் தந்து என்னை
     நோவன செய்து நுவலாதே;
தாய் தந்தென்ன, தன்னை இரந்தால்,
     தழல் வெங் கண்
பேய் தந்தீயும்; நீ இது தந்தால்
     பிழை ஆமோ?’
     ‘யானோ வாய் தந்தேன் என்றேன் - யான் வாயால் வரங்களைத்
தந்தேன் என்றசொல்லிவிட்டேன்; இனி அது மாற்றேன் - இனி அதனைத்
தவறமாட்டேன்; என்னை நோய்தந்து - எனக்கு வருத்தத்தைத் தந்து;
நோவன செய்து - துன்புறத் தக்கவற்றைப் புரிந்து; நுவலாதே - (மேலும்)
அத்தகைய சொற்களைச் சொல்லாதே;  தன்னை இரந்தால் -தன்னை
ஒருவர் இரந்து வேண்டினால்;  தாய் தந்து என்ன - தாய் மனம் இரங்கித்
தருவதுபோல;  தழல்வெம் கண் பேய் - நெருப்புப் போலும் கொடிய
கண்களையுடைய பேயும்; தந்தீயும் - கொடுக்கும்; நீ இது தந்தால் - நீ
(யான் வேண்டும்) இதனைத்தருவாயானால்; பிழை ஆமோ- தவறாகுமோ?’
     இரந்து கேட்டால் பேயும் தாய்போல இசையும் என்றால் பரதனுக்குத்
தாயாகிய நீ இசைதல்தவறாகுமோ? என்றான்.  பேய் என்பதன்பின் இழிவு
சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. தந்தீயும்- தரும்; வினைத்
திரிசொல்.                                                   33



கைகேயி மறுக்கத் தயரதன் மீண்டும் இரத்தல்  

1524.இன்னே இன்னே பன்னி
     இரந்தான் இகல் வேந்தன்;
தன் நேர் இல்லாத் தீயவள்
     உள்ளம் தடுமாறாள்,
‘முன்னே தந்தாய் இவ் வரம்;
     நல்காய்; முன்வாயேல்,
என்னே? மன்னா! யார் உளர்
     வாய்மைக்கு இனி?’ என்றாள்.
     இகல்வேந்தன் - வெற்றியையுடைய அரசர்க்கரசனாகிய தயரதன்;
இன்னே இன்னேபன்னி இரந்தான் - இவ்வாறாகப் பலமுறை சொல்லி
வேண்டினான்;  தன் நேர் இல்லாத்தீயவள் - தனக்கு நிகரில்லாத
தீயவளான கைகேயி;  உள்ளம் தடுமாறாள் - மனம்சிறிதும் இரங்கினாள்
அல்லள்; மன்னா - அரசே;  இவ் வரம் முன்னே தந்தாய்

 இந்த வரங்களை முன்னர் வாயால் தந்துவிட்டாய்;  நல்காய் - இப்போது
செயற்படுத்தமாட்டாய்; முனிவாயேல் - கோபிப்பாயானால்;  என்னே -
என்னாவது?;  வாய்மைக்கு இனி யார் உளர் - இனிமேல் வாய்மையைக்
காப்பாற்றுதற்கு யார்இருக்கின்றார்?;’ என்றாள் -.
     தன் கணவன் எவ்வளவு இரந்து வேண்டியும் இரங்காமையின் ‘தன்
நேர் இல்லாத் தீயவள்’ என்றார்.‘தீயவை யாவையினும் சிறந்த தீயாள்’ (1504)
என்று முன்னர்க் குறித்தமை கருதத்தக்கது. நல்காய்என்பதனை
முற்றெச்சமாக்கிச் செயற்படுத்தாமல் என்றும் பொருள் கொள்ளலாம்.
‘மன்னா? யார்உளர் வாய்மைக்கு இனி’  என்பது  இகழ்ச்சிக் குறிப்பு.    34



1525.அச் சொல் கேளா, ஆவி புழுங்கா,
     அயர்கிண்றான்,
பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன்,
     பொறை கூர,
‘நச்சுத் தீயே பெண் உரு அன்றோ?’
     என, நாணா,
முச்சு அற்றார்போல், பின்னும் இரந்தே
     மொழிகின்றான்;
     பொய்ச் சொல் பேணா - பொய்யான சொற்களைப் போற்றாத;
வாய்மொழி மன்னன்- உண்மை மொழிகளைப் போற்றும் தயரதன்; அச்
சொல் கேளா -
அந்தச் சொற்களைக்கேட்டு; ஆவி புழுங்கா - உயிர்
வெதும்பி;  அயர்கின்றான் - சோர்ந்து;  பொறை கூர - முன்னிலும்
பொறுமை மேலிட;  நச்சுத் தீயே பெண் உரு அன்றோ’ என -
‘(கொல்லும் தன்மையுள்ள) நஞ்சும், தீயுமே இப்பெண்ணின் தோற்றமாக
வந்துள்ளனவன்றோ’ என்றுஎண்ணி; நாணா- வெட்கமுற்று; முச்சு அற்றார்
போல் -
மூச்சு அடங்கியவரைப்போல இருந்து; பின்னும் இரந்தே
மொழிகின்றான் -
மேலும் இரத்தலை மேற்கொண்டேபேசுகின்றான்.
     இது, கைகேயியின் இகழ்ச்சிக் சொல் கேட்ட தயரதன் உற்ற
சோகத்தையும் தொடர்ந்து வேறுவழியின்றி அவனிடம் இரந்து நிற்றலையும்
கூறுகிறது. பேணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.கேளா,  நாணா -
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். கூர்- உள்ளது சிறத்தலாகிய
குறிப்புணர்த்தும் உரிச்சொல். மூச்சு - மூச்சு என்பதன் குறுக்கல் விகாரம். 35



1526.‘நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்;
     நிலம் எல்லாம்.
உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்;
     உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர்,
     எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடு இறவாமை
     நய’ என்றான்.
     ‘நின்மகன் ஆள்வான்- ‘உனக்கு மகனாகிய பரதன் ஆட்சி புரிவான்;
நீ இனிதுஆள்வாய் - நீ  இன்பமாக அதிகாரம் செலுத்துவாய்;  நிலம்
எல்லாம் -
மண்ணுலகம்முழுதும்; உன் வயம் ஆமே - உன்
வழிப்பட்டதாக ஆகும்; ஆளுதி - ஆட்சிபுரிவாய்;தந்தேன் -
கொடுத்தேன்;  உரை குன்றேன் - பேச்சுத் தவறமாட்டேன்; என்மகன் -
எனக்கு மகனும்;  என் கண் - எனக்குக் கண்போன்றவனும்; என் மகன் -
அனைத்து  உயிர்களுக்கும் சிறந்த பிள்ளை போன்றவனுமான இராமன்;
இந்த நாடு இறவாமை -இந்த நாட்டை விட்டு வெளியேறாமை  மட்டும்;
நய - விரும்பிடுவாய்;’  என்றான் -.
     இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின்
மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என
நல்லன்  மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது  ஒப்பு
நோக்கத்தக்கது.                                               36



1527.‘மெய்யே; என்தன் வேர்
     அற நூறம் வினை நோக்கி
நையாநின்றேன், நாவும்
     உலர்ந்தேன்; நளினம்போல்
கையான், இன்று, என்
     கண் எதிர்நின்றும் கழிவானேல்,
உய்யேன்; நங்காய்! உன் அபயம்
     என் உயிர்’ என்றான்.
     ‘மெய்யே - ‘சத்திமே; என்தன் வேர் அற  நூறும் - எனது மூலம்
கெடும்படிஅழிக்கும்; வினைநோக்கி - எனது தீவினையை எண்ணி; நையா
நின்றேன் -
வருந்துகின்றேன்;  நாவும் உலர்ந்தேன் - (உன்னோடு பேசிப்
பேசி) நாக்கும் வறளப் பெற்றேன்; இன்று - இந்நாளில்; நளினம் போல்
கையான் -
தாமரை போலும் கைகளையுடைய இராமன்;என் கண்
எதிர்நின்றும் கழிவானேல் -
என் பார்வையினின்று நீங்கிக் காடு
செல்வான்என்றால்;  உய்யேன் - யான் பிழைத்திருக்கமாட்டேன்;
நங்காய் - (ஆதலால்)பெண்ணே!;  என் உயிர் உன் அபயம் -
என்னுடைய உயிர் உன் அடைக்கலம் ஆகும்’;  என்றான்-.

     தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத்
தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான்.        37



கைகேயி ‘வரத்தைத் தவிருமாறு கூறுதல் அறமோ?’ எனல்
  
1528.இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளான்.
     முனிவு எஞ்சாள்,
மரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள்,
     வசை பாராள்,
‘சரம் தாழ் வில்லாய்! தந்த வரத்தைத்
     “தவிர்க்” என்றல்,
உரம்தான் அல்லால், நல் அறம் ஆமோ?
     உரை’ என்றாள்.
     இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் - தயரதன் தன்
பால் குறையிரந்துசொல்லும் இனிய சொற்களைக் கேளாதவளும்; முனிவு
எஞ்சாள்
- கோபம் தணியாதவளும்;  மரம்தான் என்னும் நெஞ்சினள் -
மரம் என்று சொல்லத்தக்க வன்மையான மனத்தைக் கொண்டவளும்;
நாணாள் - வெட்கம் இல்லாதவளும்; வசை பாராள் - பழியைப் பற்றிக்
கவலைப்படாதவளுமானகைகேயி;  ‘சரம் தாழ் வில்லாய் - (தயரதனைத்
பார்த்து) ‘அம்புகள் தங்கும் வலியவில்லையுடையே அரசே!; தந்த
வரத்தைத் ‘தவிர்க’ என்றல் -
முன்பு கொடுத்த வரத்தை விட்டுவிடு
என்று வேண்டுவது; உரம்தான் அல்லால் - மன வலிமையேயன்றி;  நல்
அறம் ஆமோ உரை -
நல்ல தருமம் ஆகுமோ சொல்லாய்;’ என்றாள்-.
     கைகேயியின் வலிய நெஞ்சுக்கு மரத்தை உவமையாகச் சொன்னார் -
திருத்தற்கு அரிதாதலின்.இரும்பாயின் நெருப்புக்கு இளகும்; மரமோ
சாம்பலாகுமோ தவிரநெகிழாது. கைகேயி நெகிழாமல் நின்றமை
உணர்த்தப்பட்டது கொள்ளாள், நெஞ்சினள், நாணாள், பாராள் -
வினையாலணையும் பெயர்கள்.                                   38



மண்ணில் விழுந்து, மன்னன் புலம்புதல்  

1529. கொடியாள் இன்ன கூறினள்; கூற,
     குல வேந்தன்,
‘முடி சூடாமல் வெம்பரல்
     மொய் கானிடை, மெய்யே
நெடியான் நீங்க, நீங்கும் என்
     ஆவி இனி’ என்னா,
இடி ஏறுண்ட மால் வரைபோல்,
     மண்ணிடை வீழ்ந்தான்.

     கொடியாள் - கொடியவளான கைகேயி; இன்ன கூறினள் -
இப்படிப்பட்டவற்றைச்சொன்னாள்;  கூற - சொல்ல;  குல வேந்தன்
- சிறந்த மன்னர் மன்னனாகிய தயரதன்;  இனி - இனிமேல்; நெடியான் -
இராமன்;முடிசூடாமல் - மகுடம் சூட்டிக்கொள்ளாமல்; வெம்பரல் மொய்
கானிடை நீங்க -
கொடிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டில்
உறையச்செல்ல;  மெய்யே என் ஆவி நீங்கும் என்ன- உண்மையாக
என் உயிர் பிரியும் என்றும் சொல்லி; இடி ஏறுண்ட மால்வரை போல -
இடியினை ஏற்ற பெரிய மலையைப்போல; மண்ணிடை - பூமியில்;
வீழ்ந்தான் -சாய்ந்தான்.
     திருமாலாதலின் இராமன் நெடியோன் என்று குறிக்கப்பெற்றான்.
ஏறுண்ட - தாக்கப்பட்ட; ‘இடிஏறு உண்ட’ எனப் பிரித்தும் ‘பேரிடி வீழ்ந்த’
எனப் பொருள் உரைப்பாரும் உண்டு. ‘காத்தலும்’என்ற பாடத்தினும்
‘வெம்பரல்’ என்று பாடமே சரி.      

                             39
1530.வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின்
     கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு
     ஓர் கரை காணான்;
சூழ்ந்தாள் துன்பம் சொற்
     கொடியாள், சொல்கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை
     நோக்கிப் புலர்கின்றான்.
     வீழ்ந்தான் - (தயரதன்) மண்ணில் விழுந்தான்;  வீழா - விழுந்து;
வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து - கொடிய துயரமாகிய கடலின்
வெள்ளத்தில்; ஆழ்ந்தான்- அமுந்தினான்; ஆழா - அழுந்தி;
அக்கடலுக்கு ஓர் கரை காணான் - அந்தக்கடலுக்கு ஒர் எல்லை
காணாதவன் ஆனான்; துன்பம் சூழ்ந்தாள் - தனக்குப் பெருந்துன்பத்தைச்
சூழ்ந்துகொண்டவளும்;  சொல் கொடியாள் - கொடிய
சொற்களையுடையவளும்; சொல்கொடுநெஞ்சம் போழ்ந்தாள் - தன்
பேச்சால் மனத்தைப் பிளந்தவளுமான கைகேயியின்; உள்ளன்புன்மையை
நோக்கிப் -
மனத்தின் சிறுமையை எண்ணி;  புலர்கின்றான் -
வாடுகின்றான்.
     துயரத்தைக் கடலாக உருவகித்ததற்கு ஏற்பக் ‘கரை காணான்’ என்றார்.
வீழ்ந்தான் - வினைமுற்று.சூழ்ந்தாள், கொடியாள்,  போழ்ந்தாள் -
வினையாலணையும் பெயர்கள்.