Samstag, 28. April 2018

3.திருக்குறள் -4

4)வினைத்திட்பம் 

 661
 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 
மற்றைய எல்லாம் பிற. 

662 
 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை 
 இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.  

 663 
 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
 சொல்லிய வண்ணம் செயல்.  

 664 
 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் 
 வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.  

 665 
 எண்ணிய எண்ணியாங்கு எய்து 
 எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.  

666 
 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள் 
 பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.  

667 
 கலங்காது கண்ட வினைக்கண் 
 துளங்காது தூக்கங் கடிந்து செயல். 

 668 
 துன்பம் உறவரினும் செய்க 
 துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.  

 669 
 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் 
 வேண்டாரை வேண்டாது உலகு.

Mittwoch, 25. April 2018

3.திருக்குறள் -3

3)வினைத்தூய்மை 

 650
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாந் தரும். 

651 
 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
 நன்றி பயவா வினை. 

652 
 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை  
ஆஅதும் என்னு மவர். 

653 
 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்  
நடுக்கற்ற காட்சி யவர். 

654 
 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 
 மற்றன்ன செய்யாமை நன்று. 

655 
 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க 
 சான்றோர் பழிக்கும் வினை. 

656 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்  
கழிநல் குரவே தலை. 

657 
 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் 
 முடிந்தாலும் பீழை தரும். 

658 
 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
 பிற்பயக்கும் நற்பா லவை. 

659 
 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
 கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

Sonntag, 22. April 2018

3.திருக்குறள் -2

2)சொல்வன்மை 

 640
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் 
யாநலத்து உள்ளதூஉம் அன்று. 

641 
 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
 காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 

642 
 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
 வேட்ப மொழிவதாம் சொல்.

 643 
 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
 பொருளும் அதனினூஉங்கு இல். 

644 
 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை 
 வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 

645 
 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் 
 மாட்சியின் மாசற்றார் கோள். 

646 
 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
 இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 

647 
 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது 
 சொல்லுதல் வல்லார்ப் பெறின். 

648 
 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற  
சிலசொல்லல் தேற்றா தவர். 

649 
 இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 
 உணர விரித்துரையா தார். 

Freitag, 20. April 2018

2.10 ஆய்தக்குறுக்கம்

 ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
                                      - நன்னூல்
எ.கா.: முள் + தீது = முஃடீது

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்

Donnerstag, 19. April 2018

3.திருக்குறள் -1

அமைச்சியல் 

 1) அமைச்சு 

 630
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு. 

631 
 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் 
ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 

632 
 பிரித்தலும் பேணிக் கொளலும் 
பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. 

633 
 தெரிதலும் தேர்ந்து செயலும் 
ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு.

 634 
 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்
எஞ்ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

635 
 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு 
அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. 

636 
 செயற்கை அறிந்தக் கடைத்தும் 
உலகத்து இயற்கை அறிந்து செயல். 

637 
 அறிகொன்று அறியான் எனினும் 
உறுதி உழையிருந்தான் கூறல் கடன். 

638 
 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் 
தெவ்வோர் எழுபது கோடி உறும்.

 639 
 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே 
செய்வர் திறப்பாடு இலாஅ தவர். 

Mittwoch, 18. April 2018

2.9 மகரக்குறுக்கம்

மகரக்குறுக்கம்

“ம்” என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்
                                          - நன்னூல்
எ.கா:

வரும் வண்டி
தரும் வளவன்
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல“நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்”. இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும் (தொல். 51)
பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.

Montag, 16. April 2018

2.8 ஔகாரக் குறுக்கம்

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.


தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
                                   - நன்னூல்
எ.கா:ஔவை

மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள ‘ஔ’ தனக்குறிய இரெண்டு மாத்திரையிலிடுந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

குறிப்பு:

ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.

2.புறநானுறு

அ ) "பாணன் சூடிய ------"141 (பரணர்)

பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
5 யாரீ ரோவென வினவ லானாக்
  காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
10 உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே

15 பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே. (141)

     திணை

அது. துறை : பாணாற்றுப்படை;
புலவராற்றுப்படையுமாம். வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர்
பாடியது.

    உரை : 

பாணன் சூடிய பசும் பொன் தாமரை - பாணன் சூடிய
ஒட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ; மாணிழை விறலி
மாலையொடு விளங்க - மாட்சிமைப்பட்ட அணியினையுடைய விறலி
யணிந்த பொன்னரி மாலையுடனே விளங்க; கடும் பரி நெடுந்தேர்
பூட்டு விட்டு அசைஇ - கடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைப்
பிணிப்புவிட்டு இளைப்பாறி; ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் -
ஊரின்கண் இருந்தீர் போலச் சுரத்திடை இருந்தீர்; யாரீரோ என -
நீர் யாவிர் பாணரோ என; வினவலானா - எம்மைக் கேட்டலமையாத;
காரென் ஒக்கல் கடும் பசி இரவல - புல்லென்ற சுற்றத்தையும் மிக்க
பசியையுமுடைய இரவலனே; வென் வேல் அண்ணல் காணா
ஊங்கு - வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன் முன்;
நின்னினும் புல்லியேம் மன் - யாம் நின்னினும் வறியேம்; இனி -
இப்பொழுது; இன்னேம் ஆயினேம் - அவ்வறுமை நீங்கி இத்
தன்மையே மாயினேம்; என்றும் - எந்நாளும்; உடாஅ போரா
ஆகுதல் அறிந்தும்- உடா போராவாதலை யறிந்து வைத்தும்;
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்தஎம்கோ - படாத்தினை மயிலுக்குக்
கொடுத்த எம் இறைவன்; கடாஅ யானைக் கலிமான் பேகன் -
மதமிக்க யானையினையும் மனஞ் செருக்கிய குதிரையினையுமுடைய
பேகன்; எத்துணையாயினும் ஈத்தல் நன்றென - எவ்வளவாயினும்
கொடுத்தல் அழகிதென்று; மறுமை நோக்கின்றோ அன்று -
மறுபிறப்பை நோக்கிற்றோவெனின் அன்று; பிறர் வறுமை
நோக்கின்று அவன் கைவண்மை - பிறரது மிடியைக் கருதிற்று
அவனது கைவண்ணம் எ-று.

     எங்கோ பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற்றன்று பிறர்
வறுமை நோக்கிற் றெனக் கூட்டுக. “நின்னினும் புல்லியேம் மன்”என்பது
“பண்டு காடு மன்”என்பதுபோல நின்றது. ஒழிந்த மன்: அசைநிலை.

     விளக்கம்:

பாணாற்றுப்படை   வாயிலாகப்    பேகன்   
புகழைப் பாராட்டுகின்றவர், தம்மையும் பாணனாக நாட்டிக்கொண்டமையின்,
தம்மைக் காணும் பாணன்முன் தாமிருக்கும் நிலையினை, பாணன் சூடிய
தாமரைப் பூவும் விறலியணிந்த பொன்னரி மாலையும் விளக்கமுற
விருப்பத்தை யெடுத்தோதினார். சுரத்திடத்தே யிருந்தாராயினும் வேண்டுவ
நிரம்பப்பெற்று இனிதிருத்தல் தோன்ற, “ஊரீர் போல இருந்தனிர்”
என்றதாகக் கூறினார். இதனால் பேகனது காவற்சிறப்பும் ஓராற்றால்
வெளிப்படுகிறது. வறுமையால் வாடி மேனியும் முகமும் கருத்துத்
தோன்றுதலால், “காரென் ஒக்கல்”என வேண்டிற்று. தமது செல்வ
நிலை, வந்த பாணன் இனிது கண்டறிய விளங்குதலால்,
“இன்னேமாயினேம்”என்றொழிந்தார். மயில்கள் படாம் பெறின், 
அவற்றை உடுப்பதோ மெய்ம்மறையப் போர்த்துக் கொள்வதோ
செய்யாவாயினும்,  மயிற்குப்  படாஅம்  நல்கின  கொடை மடம்
விளங்க, “உடாஅ போரா ஆகுதலறிந்தும்”என்றார். உடா, போரா
எனப் பன்மையாற்கூறியது, மயில்கள் பலவும் எஞ்சாமல் அடக்கி நின்றது.
மயில்களின் பொதுவியல்பாகிய இதனை யறிந்து வைத்தும், படாஅம்
ஈந்தான் என்றது, நும்பால் வேண்டப்படாத மிகச் சிறந்த பொருளையும்
அவன் நுமக்கு மிக நல்குவன் என்ற குறிப்புத்தோன்ற நின்றது. படாம்,
துகில். ஈத்தல் நன்றென மறுமை நோக்காது வறுமை நோக்கின்று என
இயையும். மன்: ஒழியிசை.

ஆ ) "அளிதோ தானே ------"109 (கபிலர் )

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து

மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

பொருளுரை:


பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது.பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும்,உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன.
ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டு,
இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும்.மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும்.
நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து,கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும்.பாரியின் பறம்பு மலை அகல, நீள, உயரத்தில் வானத்தைப் போன்றது.
அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன.அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும்,இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும் உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது.நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டன்.அதை அடையும் வழியை நான் அறிவேன். தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும்முறுக்கப் பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி,மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால்,பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான்.


இ )"யாதும் ஊரே யாவரும் கேளீர் ------" 192 (கணியன்  பூங்குன்றன் )


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

Freitag, 13. April 2018

1.குறுந்தொகை

அ ) "கருங்கால் வேம்பின்  -24 (பரணர் )

24. முல்லை

கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவந்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது
பரணர்

ஆ)"நல்லுரை யிகந்து - 29 (ஒளவையார்)

29. குறிஞ்சி

நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், "இவர் எம்மை மறுத்தார்" என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது
ஒளவையார்

இ )"புனவன் றுடவை  -105 (நக்கீரர்)

105. குறிஞ்சி

புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
நக்கீரர்

ஈ )" நினையாய் வாழி  -343 (ஈழத்து பூதந்தேவன் )

343. பாலை


நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்

அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண்கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயருமாறே.

தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது

ஈழத்துப் பூதன் தேவன்


2.7 ஐகாரக் குறுக்கம்


ஐகாரக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.

ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.

ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
                                 -- நன்னூல்
எ.கா:

ஐந்து – ஐகாரம் மொழிக்கு முதலில் – 1 1/2 மாத்திரை
வளையல் – ஐகாரம் மொழிக்கு இடையில் – 1 மாத்திரை
மலை – ஐகாரம் மொழிக்கு கடையில் – 1 மாத்திரை

Mittwoch, 11. April 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 11

தமிழ்பாடநூல்  வகுப்பு - 11

தமிழ் மொழியும் இலக்கியமும் 

2. 6 குற்றியலிகரம்

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.

எடுத்துக்காட்டு

நாடு + யாது = நாடியாது
கொக்கு + யாது =கொக்கியாது
கேள் + மியா -> கேண்மியா

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

Montag, 9. April 2018

2.5 குற்றியலுகரம்

குற்றியலுகரம் 

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்


(குறுகிய ஓசையுடைய உகரம்)


எ.கா:
நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்

நெடில் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன் தொடர்க் குற்றியலுகரம்
மென் தொடர்க் குற்றியலுகரம்
இடைத் தொடர்க் குற்றியலுகரம்                                                                                              இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு:
'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு

மா | டு +அல்ல = மாடல்ல
ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)இ·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.

அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

அ·து + இல்லை = அ·தில்லை

இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்
வருமொழி 'இ' உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
௩)
இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.

அரசு + ஆட்சி = அரசாட்சி

நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற
உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்றுவன் தொடர்க் குற்றியலுகரம்
௪)
இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.

பட்டு + ஆடை = பட்டாடை

இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்றுமென் தொடர்க் குற்றியலுகரம்
௫)
இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.

சங்கு + ஊதினான் = சங்கூதினான்

இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்
இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று
ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனதுஇடைத் தொடர்க் குற்றியலுகரம்
௬)
இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு

பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.

இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்
அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று
குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று  

தமிழ் இலக்கிய நயம்

2.4 ஒற்றளபெடை

ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.


ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

"ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ" - நன்னூல்

எ.கா:
வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.

ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்        

Freitag, 6. April 2018

தமிழ் இலக்கியத் தொகுப்பு

2.3 உயிரளபெடை

உயிரளபெடை

ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை

மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

"இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ"-நன்னூல்

உதாரணம் -

1 ஓஒதல் வேண்டும் - முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு - இடை
3 நல்ல படாஅ பறை - கடை

Mittwoch, 4. April 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 10

தமிழ் மொழியும் இலக்கியமும்

9 மூன்று சொல்லோவியங்கள் - கட்டுரை

தமிழ் இலக்கிய நயம் 



2:2 உயிர்மெய் எழுத்து -18


ன்

 ன் + அ =
ன் + ஆ = னா
ன் + இ = னி
ன் + ஈ =னீ
ன் + உ = னு
ன் + ஊ = னூ
ன் + எ =னெ
ன் + ஏ =னே
ன் + ஐ = னை
ன் + ஒ = னொ
 ன் + ஓ = னோ
ன் + ஔ = னௌ

Montag, 2. April 2018

2:2 உயிர்மெய் எழுத்து -17

ற்

ற் + அ =
ற் + ஆ =றா
ற் + இ =றி
ற் + ஈ =றீ
ற் + உ =று
ற் + ஊ =றூ
ற் + எ =றெ
ற் + ஏ =றே
ற் + ஐ =றை
ற் + ஒ =றொ
ற் + ஓ =றோ
ற் + ஔ =றௌ

தமிழ்பாடநூல் வகுப்பு - 9

 தமிழ்பாடநூல்  வகுப்பு - 9