Mittwoch, 30. Mai 2018

7.கம்பராமாயணம் -3

 21தசரதன் மீண்டும் வினவுதல்
  
1512.இந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி,
நெய்ந் நிலை வேலவன், ‘நீ திசைத்தது உண்டோ?
பொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ?
உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை!’ என்றான்
.


     இந் நிலை நின்றவள் தன்னை - இந்நிலையில் நின்ற கைகேயியை;
எய்த நோக்கி- பொருந்தப் பார்த்து;  நெய்ந் நிலைவேலவன் - நெய்பூசப்பட்ட வேலையுடைய தயரதன்; ‘நீ திசைத்தது  உண்டோ - நீ மனம்
பிரமித்தது உண்டோ?; பொய்ந் நிலையோர்கள் புணர்த்த - வஞ்சத்
தன்மையுடையவர்கள் எவரேனம் கட்டிச்சொன்ன;வஞ்சம் உண்டோ -வஞ்சனைச் சொல் உள்ளதோ?; எனது ஆணை - என் மேல் ஆணையாக;
உன் நிலை உண்மை சொல் - இந்த உனது நிலையின் காரணத்தை
உண்மையாகச் சொல்வாய்;’என்றான் -.
     தயரதனுக்குக் கைகேயியின் மாறுபட்ட நிலை வியப்பாக இருத்தலின்,
‘நீ திசைத்தது உண்டோஅல்லது  பொய்ம்மையாளர்கள் எவரேனும் உன்
மனத்தைக் கெடுத்தனரோ?’ என்கிறான். முன்பு இராமன்மீதுஆணையிட்டுக்
கூறியவன் இப்பொழுது அவளக்கு அவன்பால் அன்பின்மையை உணர்ந்து
தன்மேல் ஆணை என்றான். திசைத்தல் - திகைத்தல்; பிரமித்தல்.      22


          கைகேயியின் கொடுஞ் சொற்கள்
  
1513.‘திசைத்ததும் இல்லை;
     எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த
     இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று
     கொள்வென்; அன்றேல்,
வசைத் திறன் நின்வயின் நிற்க,
     மாள்வென்’ என்றாள்.


     குசைப் பரியோய் - (மன்னன் கூறக் கேட்ட கைகேயி அவனிடம்)
‘கடிவாளம் பூட்டிய குதிரைகளைஉடைய அரசே!; 

திசைத்ததும் இல்லை -நான் திகைத்ததும் இல்லை;
தீயோர் எனக்குவந்து  இசைத்ததும்
இல்லை
 - கொடியோர் எவரும் என்னிடம் வந்து வஞ்சனையாகச்
சொன்னதும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள் - முன்னே (வாயாற்)
கொடுத்த இவ்விரண்டு வரங்களை; இன்று தரின் கொள்வென் -
இப்பொழுது  கொடுத்தால் பெற்றுக்கொள்வேன்; அன்றேல்- அன்றிக்
கொடுக்காமல் போனால்;  வசைத்திறன் நின்வயின் நிற்க - பழியின்
கூறுகள் நின்னிடம் நிலையாக இருக்குமாறு;  மாள்வென் - இறப்பேன்;’
என்றாள் -.
     தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர
விருப்பமில்லை என்று உணர்ந்தகைகேயி, ‘வரம்கொடுத்தால் வாழ்வேன்;
இன்றேல் சாவேன்’ என்கிறாள். குசைப்பரியோய் -கருத்துடை யடைகொளி.
யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப்புகழ்
உளதாயிற்று என்று குறிப்பித்தவாறு. கருத்துடை அடைகொளி அணி.    


23  தசரதன் உற்ற பெருந் துயர்

1514.இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே,
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப,
சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;-
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்.


     மைந்தன் அலாது - மகனாகிய இராமனைத் தவிர;  உயிர் வேறு
இலாத மன்னன் -
தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத அரசனாகிய
தயரதன்;  அவ் ஏழை - அந்த அறிவற்றவளானகைகேயி;  இந்த நெடுஞ்
சொல் கூறும் முன்னே - 
இந்தப் பெரிய வஞ்சினத்தைச்சொல்லிமுடிக்கு
முன்னே; வெந்த கொடும் புணில் - முன்பே தீயினால் சுட்ட கொடிய
புண்ணில்;வேல் நுழைந்தது ஒப்ப - கூரிய வேல் பாய்ந்தாற்போல;
சிந்தை திரிந்து -
மனம் தடுமாறி; திகைத்து - அறிவு மயங்கி; அயர்ந்து
வீழ்ந்தான் - 
சோர்ந்துதரையில் சாய்ந்தான்.

1515.‘ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் -
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்
.


     மாகமும் நாகமும் மண்ணும் - மேலுலகத்தையும் கீழுலகத்தையும்
நிலவுலகத்தையும்; வென்ற வாளான்-வெற்றி கொண்ட வாட்படையையுடைய
தயரதன்; ஆ கொடியாய் எனும் - (கைகேயியிபைப் பார்த்து) ஐயோ,
கொடியவளே என்பான்; ஆவி காலும் - பெருமூச்சுவிடுவான்; அந்தோ ஓ
கொடிதே அறம் என்னும் -
 ஐயோ! தருமம் மிகவும் கொடியதே என்பான்;
உண்மை ஒன்றும் சாக எனா - சத்தியம் என்பதொன்று சாகட்டும் என்று
சொல்லிக்கொண்டு;எழும் - எழுந்திருப்பான்; மெய் தளாடி வீழும் -உடம்பு  நிற்க முடியாமல் தள்ளாடிவிழுவான்.
     இப்பாட்டு ஒரு சோக சித்திரம்; மன்னவன் துயரத்தைப் படம்பிடித்துக்
காட்டுகிறது.  ஆகொடியாய் - ஆ - இரக்கக் குறிப்பு. தயரதன் அறமும்
உண்மையும் நன்மைக்குத் துணை புரியாமல் இராமன்காடு புகுதலாகிய
தீமைக்கு வழி வகுத்தலின் அவற்றை இகழ்கிறான். மாகம் - துறக்கம். நாகம்-
பாதாளம்.        

                                            25
1516.‘ “நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்ன,
கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும்,
பூரியர் எண்ணிடை வீழ்வென்’ என்று, பொங்கும் -
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான்
.


     வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் - பெருவீரர்கள்
வீரத்தையும் வென்று தன்னுள்அடக்கி நிலைபெற்ற வேற்படையை உடைய
தயரதன்;  இஞ் ஞாலம் எங்கும் - இவ்வுலக முழுவதிலும்; நாரியம்
இல்லை என்ன -
 பெண்கள் இல்லை என்னும்படி;  கூரிய வாள் கொடு
கொன்றுநீக்கி -
 கூர்மை பொருந்திய வாளால் கொலை செய்து போக்கி;
யானும் பூரியர் எண்ணிடைவீழ்வென் என்று - யானும் கீழ்மக்கள்
எண்ணிக்கையில் சேருவேன் என்று; பொங்கும் -சினம் மிகுவான்.
     கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள்
கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான்.ஆனால், அச்செயல் தகாது
என்று அடங்கினான். இதனால் அவன் சீற்ற மிகுதி 

வெளிப்படுகிறது. 

    26
1517.கையொடு கையைப் புடைக்கும்; வாய் கடிக்கும்;
‘மெய்யுரை குற்றம்’ எனப் புழுங்கி விம்மும்;
நெய் எரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும் -
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன்.


     வையகம் முற்றும் நடந்த - உலகம் முழுவதும் பெருவழக்காய்
அறியப் பெற்ற; வாய்மை மன்னன் - சத்தியம் தவறாத தயரதன்; கையொடு
கையைப் புடைக்கும் -
 கையுடன்மற்றொரு கையை ஓங்கி அடிப்பான்;
வாய் துடிக்கும் - உதட்டைக் கடிப்பான்;  மெய்உரை குற்றம் என -உண்மை சொல்லுதல் தீங்கைத் தருவது என்று சொல்லி; புழுங்கிவிம்மும்-மனம் வெந்து பொருமுவான்; நெய் எரி உற்று என - நெய்யில் நெருப்புப்
பட்டாற்போல;  நெஞ்சு அழிந்து - மனம் உடைந்து; சோரும் -வருந்துவான்.
     வாய்மை மன்னனாகிய தயரதனை மெய்யுரை குற்றம் என எண்ணச்
செய்தது அவனுக்கு இராமபிரான்பால்உள்ள பேரன்பு. கைபுடைத்தல்
வாய்கடித்தல் ஆகியவை சினத்தால் நிகழும் 

மெய்ப்பாடுகள்.  

         27
1518.‘ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம்’ என்று, வாய்மை மன்னன்,
‘பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது’ என்று எழுந்தான்.


வாய்மை மன்னன் - சத்தியத்தைப் பேணிக் காக்கும் தயரதன்;
‘ஒறுப்பினும்அந்தரம் - இவளைத் தண்டித்தாலும் தீமை; உண்மை
ஒன்றும் ஓவா -
மெய்யைச்சிறிதும் காவாமல்; மறுப்பினும் அந்தரம் -
கொடுத்த வரங்களைத் தர மறுத்தாலும்தீமை;’  என்று - என்று கருதி; ‘இந்
நிலை போகிலாளை -
இந்நிலையினின்றும்மாறாதவளை; பொறுப்பினும் -
பொறுத்து அடங்குவதைக் காட்டிலும்; வாளால் இறுப்பினும்- வாளால்
கொல்வதைக் காட்டிலும்; இரப்பது ஆவது - இவளை வேண்டி யாசிப்பதே
பொருத்தம்;’ என்று எழுந்தான் - என்று கருதி, அது செய்யப்
புறப்பட்டான்.
     பலவாறாகத் துன்பப்பட்ட தயரதன் இறுதியில் இரந்து வேண்டுதல்
ஒருவேளை பயன் தரலாம் என்றுகருதி அவ்வாறு செய்யத் துணிந்தான்.
பொறுப்பு, இறுப்பு - தொழிற்பெயர்கள்; இன் - உறழ்ச்சிப்பொருளில்
வந்தது.          


கைகேயியின் காலில் விழுந்து, 
தயரதன் இரத்தல்  
கலிநிலைத்துறை

1519.‘கோல் மேற்கொண்டும் குற்றம்
     அகற்றக் குறிகொண்டார் -
போல், மேல் உற்றது உண்டு எனின்
     நன்று ஆம் பொறை’ என்னா,
கால்மேல் வீழ்ந்தான் - கந்து கொல்
     யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி
     வணங்கி மிடை தாளான்.
     கந்து கொல் யானைக் கழல் மன்னர் - கட்டுத்தறியை முறிக்கும்
யானைப்படையையுடைய வீரக்கழல் அணிந்த அரசர் பலரும்; மேல் மேல்
முந்தி வந்து -
மேலே மேலே(ஒருவர்க் கொருவர்) முற்பட்டு வந்து;
வணங்கி மிடை தாளான் - வழிபட்டு நெருங்குகின்றபாதங்களையடைய
தயரதன்; கோல் மேற்கொண்டும்- தாம் ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும்;
குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்போல் - (அதில்வரும்) குற்றங்களை
நீக்கக்கருத்துக் கொண்ட நல்ல அரசரைப் போல;  மேல் உற்றது  உண்டு
எனின் -
மேலே வரும் நன்மைஉண்டென்றால்; பொறை நன்று ஆம்
என்னா -
பொறுமை நல்லதாகும் என்று எண்ணி; கால்மேல் வீழ்ந்தான்-
கைகேயியின் கால்களில் விழுந்து வணங்கினான்.

     தம் பதவியே பெரிதெனக் கருதாமல் குற்றம் நிகழாது காக்க அரும்
பாடுபடும் அரசரைப் போலத்தன் பெருமை நோக்காது  கைகேயியைச்
சினம் தணிவித்துக் குற்றம் நிகழாது காக்க எண்ணிய தயரதன்அவள் காலில்
விழுந்து வணங்கினான். கைகேயி மனம் மாறி வரங்களைத் தருமாறு
வேண்டுவது  தவிர்ந்தால்.அவளுக்கு வரந்தர மறுத்தலால் வரும் குற்றமும்.
இராமனுக்கு




அரசளிப்பதாகச் சொன்ன வாக்குப் பொய்த்தலும் நீங்கி நன்மை உண்டாகும்
என்ற எண்ணிஅவ்வாறு செய்தான். உற்றது - கால வழுவமைதி.       29

1520.‘கொள்ளான் நின் சேய் இவ் அரசு;
     அன்னான் கொண்டாலும்,
நள்ளாது இந்த நானிலம்;
     ஞாலம்தனில் என்றும்
உள்ளார் எல்லாம்ஒத
     உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் வழி கொண்டு
     என் பயன்?’ என்றான்.
     ‘இவ் அரசு நின் சேய் கொள்ளான் - இந்த அரசாட்சியை நினக்கு
மகனாகிய பரதன்ஏற்றுக்கொள்ள மாட்டான்; அன்னான் கொண்டாலும் -
(ஒருகால்) அவன் ஏற்றுக்கொண்டாலும்;இந்த நானிலம் நள்ளாது -
இவ்வுலகம் அதனை விரும்பாது;  ஞாலம்தனில் உள்ளார் எல்லாம்-
உலகில் உள்ள எல்லோரும்; என்றும் ஓத உவக்கும் - எந்நாளும்
புகழ்வதைவிரும்பும்;  புகழ் கொள்ளாய் - கீர்த்தியைப் பெறமாட்டாய்;
எள்ளா நிற்கும்வன்பழி கொண்டு - என்றும் எல்லோரும் இகழ்தற்குரிய
வலிய பழியை ஏற்பதனால்;  பயன்என் - பயன் யாது?;’  என்றான் -.
     தயரதன் பரதன் பண்புகள் அறிந்தவனாதலின் அவன் அரசாட்சியைக்
கொள்ளான் என்றான்.கொண்டாலும் - உம்மை கொள்ளுதலின் அருமை
சுட்டியது. நானிலம் - ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று.என்றும்
என்பதனைப் பழியோடும் கூட்டி உரைக்க.                         30

Samstag, 26. Mai 2018

7.கம்பராமாயணம் -2

  11


கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல் 


1502.ஆன்றவன் அவ் உரை கூற, ஐயம் இல்லாள்,
‘தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,
சான்று இமையோர்குலம் ஆக, மன்ன! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள்.

     ஆன்றவன் - குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரை கூற -அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள் - தன் கருத்து
நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன - அரசனே;
தோன்றிய பேர் அவலம்  துடைத்தல் உண்டேல் - எனக்கு
உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக;  நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும்  இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.

     தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.

     சான்று - சாட்சி. ஆக - வினையெச்சம். ஈதி - ஏவல் வினைமுற்று. 12

மன்னன் வரமளிக்க இசைதல்

1503.

‘வரம் கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி

இரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்
பரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு’ என்றான் -
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான்.

     உரம் கொள் மனத்தவள் - வன்மை கொண்ட நெஞ்சத்தையுடைய
கைகேயியின்;  வஞ்சம்ஒர்கிலாதான் - வஞ்சனையை ஆராய்ந்து
அறியாத தயரதன்; ‘வரம் கொள இத்துணை -(யான் கொடுப்பதாகச்
சொன்ன) ‘வரங்களைப் பெற்றுக்கொள்ள இவ்வளவு;  மம்மர் அல்லல்
எய்தி- தடுமாற்றம் தரும் துன்பம் அடைந்து;  இரங்கிட வேண்டுவது
இல்லை - நீ வருந்த வேண்டுவது இல்லை;  என்பால் பரம் கெட -
என்னிடத்துள்ள மனச்சுமை  நீங்கும்படி;  இப்பொழுதேஈவென் -
இப்பொழுதே தருவேன்;  பகர்ந்திடு - சொல்வாய்;’  என்றான் -.

     இயம்பில் மென்மையான கைகேயியின் மனம் கூனியின் சொல்லால்
மாறி இப்பொழுது வன்மைகொண்டிருப்பதால் ‘உரங்கொள் மனத்தவள்’
என்றார்.  கைகேயியின் மீது கொண்ட அதிக அன்பால்அவள் சொற்களில்
உள்ள வஞ்சத்தை ஆராய்ந்து  அறியாதவனாகத் தயரதன் இருந்தமையால்
‘ஓர்கிலாதான்’ என்றார்.  ஒர்தல் - ஆராய்தல்.                     13

கைகேயி கேட்ட இரு வரங்கள்

1504.

‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்

சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - 
தேவர்கூட்டம் சாட்சியாக;  நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- 
நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும்  இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.
     தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.

                     

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் - கொடியவை என்று
சொல்லப்படும் எல்லாவற்றிலும்மேம்பட்ட கொடியவளான கைகேயி;  ‘ஏய

வரங்கள் இரண்டின் -
 (நீ) கொடுத்த இரு வரங்களுள்;ஒன்றினால் - ஒரு
வரத்தினால்; என் சேய் அரசு ஆள்வது  - என்மகன் பரதன் நாட்டை
ஆளுதல் வேண்டும்;  ஒன்றால் - மற்றொன்றினால்;  சீதை கேள்வன்
போய் வனம்ஆள்வது  -
 சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை
விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்;எனப் புகன்று - என்று
சொல்லி; நின்றாள் - மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.
     தீயவை - நெருப்பு,  கூற்றுவன்,  நஞ்சு,  பாம்பு  முதலியன ‘சிறந்த’
என்பது கொடிய என்னும்பொருளைத் தரும், ‘நல்ல பாம்பு’  ‘நல்ல வெயில்’
என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல,
இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது  சொல்லி நிற்றல் இவளையன்றிப்
பிறர்க்கு அரிது    என்பதனால்  ‘புகன்று நின்றாள்’  என்றார்.  ஆள்வது
வியங்கோள் வினைமுற்று.                                      


 14
தசரதன் உற்ற துயரம்
  
1505.நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.


     நாகம் எனும் கொடியாள் -  பாம்பு என்று சொல்லத்தக்க
கொடியவளாகிய கைகேயி;  தன் நாவின் ஈந்த - தனது நாக்கினின்றும்
வெளியிட்ட;  சோக விடம் தொடர -துன்பத்தைத் தரும் சொல்லாகிய
நஞ்சு தன்னைப் பற்றிக்கொள்ள;  துணுக்கம்  எய்தா -நடுக்கம் அடைந்து;
ஆகம் அடங்கலும் வெந்து  அழிந்து - தன் உடல் முழுவதும் வெதும்பிச்
சோர்ந்து; அராவின் வேகம் அடங்கிய - நச்சுப் பாம்பினால் தன் ஊக்கம்
தணியப்பெற்ற; வேழம் என்ன - யானை போல; வீழ்ந்தான் - (தயரதன்
கீழே) விழுந்தான்.
     இதனால் கைகேயியின் சொற்களில் இருந்த கொடுமை  கூறப்பட்டது.
சோக விடம் - உருவகம்.துயர்க் காரணம் சொற்களாதலால் ‘நாவின் வந்த
விடம்’ என்று வேற்றுமையணியாகக் கூறினார்.ஆகம் வெந்து வீழ்ந்தான்’ -
சினை வினை முதலோடு முடிந்தது. அராவின் - இன் ஏதுப் பொருளில்
வந்தது.       

                                             15
1506 



பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான்.


பூதலம் உற்று - தரையில் விழுந்து; அதனில் புரண்ட மன்னன் -அதன்மீது நிலைகொள்ளாதுஉருண்ட அரசனாகிய தயரதனது;
மாதுயரத்தினை - பெருந்துன்பத்தினை; சொல்ல வல்லார்யாவர் -அளவிட்டுச் சொல்ல வல்லவர் யார்? (ஒருவரும் இல்லை);  வேதனை
முற்றிட -
துன்பம் முதிர்ச்சி அடைய;  வெந்து வெந்து - மனம் மிக
வெதும்பி; கொல்லன் ஊதுஉலையில் கனல் என்ன - கருமான்
(துருத்தியால் ஊதுகின்ற உலைக்களத்துத் தீயைப்போல; வெய்து
உயிர்த்தான் - 
வெப்பம் மிக்க பெருமூச்சு விட்டான்.
     இது கவிக்கூற்று, தயரதன் நெட்டுயிர்ப்பின் வெம்மைக்குக் கொல்லனது
உலைக்களம் உவமை. உலைத்தீ ஊதுந்தொறும் மேலெழுந்து  மீண்டும்
அடங்குவது  போல,  மன்னனது வெப்பம் மிக்க உயிர்ப்பு மிக்கும்
அடங்கியும்  நிகழ்ந்தது. வெந்து வெந்து - அடுக்கு மிகுதிப்பொருளைக்
காட்டுவது.  

     
                                            16
1507.உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது; ‘தக்கது என்கொல்?’ என்று என்று
அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும்.


     நா உலர்ந்தது - (தயரதனுக்கு) நாக்கு வறண்டது;  உயிர் ஓடல்
உற்றது - 
உயிர்போகத் தொடங்கியது;  உள்ளம் புலர்ந்தது - மனம்
வாடியது; கண்கள் பொங்குசோரிபொடித்த - கண்கள் மிகுதியாகக் குருதி
சிந்தின;  சலம் தலைமிக்கது - கவலை மிகுந்தது; அரும் புலன்கள்
ஐந்தும் -
 அரிய ஐந்து பொறிகளும்; தக்கது என்கொல் என்று என்று -செய்யத்தக்கது என்ன என்று எண்ணி  எண்ணி;  அலந்து அலையுற்ற -கலங்கித் தவித்தன.
     இதில் தயரதன் அடைந்த அவல மெய்ப்பாடுகள் கட்டப்படுகின்றன.
கோபத்தால் கண்கள் இரத்தம்சிந்தின. புலன் - ஈண்டுப் பொறிகளைக்
குறித்தது; ஆகுபெயர். ‘அலந்து அலையுற்ற’ என்பதனை ‘அலந்தலைஉற்ற’
என்று கொள்வாரும் உண்டு. அலந்தலை - ஒருசொல்; கலக்கம் என்பது
பொருள்.  சலம் - கோபமும்ஆம்.       


                        17
1508.மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான்.


     ஆவி பதைப்ப - உயிர் பதைக்கும்படி; அலக்கண் எய்துகின்றான்-பெருந்துன்பத்தை உறுகின்ற தயரதன்;  நிலத்தில் மேவி இருக்கும் -தரையில்(சிறிதுபொழுது) பொருந்தி இருப்பான்; நிற்கும் - எழுந்து நிற்பான்;
வீழும் - (மீண்டும்) விழுவான்; ஓவியம் ஒப்ப - சித்திரம்

போல; உயிர்ப்பு அடங்கி ஓயும் - மூச்சு அடங்கி ஒய்வான்;  பாவியை
எதிர் உற்றுப்பற்றி - 
கைகேயியை எதிரே சென்று பிடித்து;  எற்ற -மோத;  எண்ணும் - நினைப்பான்.
     இதனால் தயரதனது கலக்கநிலை உணர்த்தப்படுகிறது. இராமன்மீது
இரக்கமின்றிக் கேடு சூழ்ந்தாளாதலின்கைகேயி பாவி என்று

குறிக்கப்பட்டாள்.  

                                            18
1509.பெண் என உட்கும்;
     பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து,
     உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும் -
     வன் கைவேல் வெம்
புண் நுழைநிற்க உழைக்கும்
     ஆனை போல்வான்.


     வன் கை வேல் - வன்மையான கையினால் வீசப்பட்ட வேல்; வெம்
புண் நுழைநிற்க-
 கொடிய புண்ணில் நுழைவதனால்;  உழைக்கும்
ஆனை போல்வான் - 
வருந்தும்  யானைபோன்றமன்னன்; பெண் என
உட்கும் - 
பெண் என்று கருதிக் கொல்ல அஞ்சும்;  பெரும் பழிக்கு-(கைகேயியைப் பற்றி எற்றுவதனால்) வரக்கூடிய பெரிய பழிச்சொல்லுக்கு;
நாணும் -நாணுவான்; உள் நிறை வெப்பொடு - தன்னுள்ளே மிக்கிருந்ததாபத்தோடு;  உயிர்த்து உயிர்த்து - பலகால் பெருமூச்சு விட்டு;
உலாவும் - அங்கும் இங்குமாக அலைவான்; கண்ணினில் நோக்கும்
அயர்க்கும் -
 (கைகேயியைக்) கண்ணால்  உற்றுப் பார்த்துப் பின்னர்ச்சோர்வான்.

     கைகேயியைக் கொன்றுவிடலாமா என்ற கருதி தசரதன் அதனால் உண்டாகும் பழிக்கு நாணிஅதனைச் செய்யாமல் விடுத்தான். நாணுதலாவது தனக்குப் பொருந்தாத இழிந்த செயலில் மனம் ஒடுங்குதல். முதல் வரம்
கொடும்புண் செய்ய,  இரண்டாவது  வரம் அப்புண்ணில் வேலை எடுத்து
நழைத்தாற்போன்ற மிகுந்த துன்பம் விளைத்தது.         


           19
கைகேயியின் கலங்கா உள்ளம்
1510.கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று,
உம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது;
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால்.


     கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன் - கட்டுத்தறியில்
கட்டுண்ட மிக்க மதத்தையுடையகளிற்றை யொத்த அரசனாகியதயரதன்;  வெம்பி விழுந்து எழும் விம்மல் - மனம் நொந்து கீழே
விழுந்து  எழுகின்றதுன்ப நிலையினை;  உம்பர் கண்டு - தேவர்கள்
பார்த்து;  வெய்துற்று நடுங்கினர் -மனம் புழுங்கி நடுங்கினார்கள்; ஊழி
பேர்வது ஒத்தது - 
பிரளய காலம் வந்தது போன்றிருந்தது; அம்பு அன
கண்ணவள் உள்ளம் -
 (அந்நிலையிலும்) அம்பு போன்ற கண்களையுடைய
கைகேயியினது  மனம்; அன்னதே - முன்பு இருந்த அதே தன்மையில்
இருந்தது.
     தயரதன் சம்பரனைத் தொலைத்துத் தங்களுக்கு உதவியவன் ஆதலால்
அவனது துன்பத்தைக் கண்டு தேவர்கள்வருந்தினர்.  உலகத்தவர் யாவரும்
வருந்துதலால் ‘ஊழிபேர்வது ஒத்தது’ என்றார்.  அந்நிலையிலும்கைகேயி
சிறிதும் மனம் இளகாமல் ‘உறுதியோடு இருந்தாள் என்று அவளது கொடுமை
குறித்தார். கட்டுத்தறியில்கட்டப்பட்ட யானை போல என்றும் உவமை
வரத்தால் பிணிப்புண்ட தயரதன் நிலையினைக் காட்டுவது,‘ஏ, ஆல் அசை.     


                                                  20
1511.அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்;
‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர்
.


     ஐயனது அல்லல் கண்டும் அஞ்சலள் - (தன்) கணவனது
துன்பத்தைக் கண்டும் அவள் அச்சம்கொள்ளவில்லை; உள்ளம் நஞ்சிலள்- மனம் இரங்கவில்லை; ‘நாண் இலள்’ என்ன -‘வெட்கப்படவும் இல்லை’
என்று அவள் நிலையைக் கூற;  நாணம் ஆம் - (சொல்லும்) நமக்கே
வெட்கம் உண்டாகும்; தக்கோர் - சால்புடைய பெரியோர்; ‘பண்டு - தொன்றுதொட்டே;வஞ்சனை - வஞ்சனை என்பது;  மடந்தை வேடம் - பெண்ணுருவம்;’ என்றே -என்று எண்ணியே;  மாதரை - பெண்களை;
தஞ்சு என - பற்றுக்கோடு என்று;  உள்ளலார்கள்- நினையார்கள்.
     பெண்மைக் குணங்கள் யாதுமின்றி இருந்த கைகேயி நிலைபற்றிக்
கூறுவது நாணம் தருகிறது என்கிறார்கம்பர்.  ஐயன் - கணவன், தலைவன்,
நஞ்சிலள் - நைந்திலள் என்பதன்போலி. தஞ்சு - தஞ்சம்என்பதன் விகாரம்.
‘ஆல்’ அசை.                                                

Montag, 21. Mai 2018

7.கம்பராமாயணம் -1

கைகேயி சூழ்வினைப்படலம்  (1-66 பாடல்கள் )


கூனியினால் மனம் திரிந்த கைகேயி தன் அலங்காரத்தை அழித்துக் கொண்டு தரையில் கிடந்தாள். இராமன் முடிசூட இருப்பதை அவளுக்குத் தெரிவிக்க வந்த தயரதன் அவளை எடுத்து அவளது துயரத்திற்குக் காரணம் கேட்டான். அவள் அவனிடம் இரு வரங்களைக் கேட்க. அவனும் தருவேன் என்றான். கைகேயி இரு வரங்களைக் கேட்டாள். தயரதன் பெருந்துயர் உற்றான். அவள் காலில் விழுந்து ஒரு வரத்தைப் பெற்று, இராமனைக் காட்டுக்கு அனுப்பும் மற்றொரு வரத்தைக் கேட்காதிருக்குமாறு வேண்டினான். அவள் அதற்கு இணங்க வில்லை. அவன் மண்ணில் விழுந்து புலம்பினான். அவள் வரம் தர மறுத்தால் உயிர்விடுவதாகச் சொன்னாள். அவன் வரத்தை நல்கி மூர்ச்சை அடைந்தான். அவள் செயல் முற்றித் துயின்றாள். இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. இராமன் முடிசூடுவதைக் குறித்து நகர மக்கள் மகிழ்ந்தனர். முடிசூட்டு மண்டபத்துள் அரசர்கள், அந்தணர்கள் முதலியோர் நிறைந்தனர். வசிட்டன் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தான். மன்னனை அழைத்துவரச் சுமந்திரனை அனுப்பினான். அவனிடம் இராமனை அழைத்துவருமாறு சொன்னாள் கைகேயி. அரண்மனைக்குச் செல்லும் இராமனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர். இராமன் அரண்மனையில் அரசனைக் காணாமல் கைகேயியின் அரண்மனை புகுந்தான். அவன் எதிரே கைகேயி வர, அவளை வணங்கினான். அவள், இராமன் காடு செல்ல வேண்டும் என்பது மன்னன் கட்டளை என்றாள். இராமன் மகிழ்ச்சியோடு அவளிடம் விடைபெற்றுக் கோசலையின் மாளிகைக்குச் சென்றான். இப் படலத்தில் இடம் பெறும் விடியற் கால நிகழ்ச்சிகள் பற்றிய பாடல்கள் தற்குறிப்பேற்றஅணி நயம் நிறைந்து கற்பனை வளம்செறிந்து உயர்ந்த கவிதைகளாய்த் திகழ்கின்றன.


கைகேயி தன் கோலம் அழித்தல் 


கூனி போன பின், குல மலர்க்
 குப்பைநின்று இழிந்தாள்;
சோனை வார் குழல் கற்றையில்
சொருகிய மாலை,

வாளை மா மழை நுழைதரு மதி
  பிதிர்ப்பாள்போல்,
தேன் அறவாவுறு வண்டினம்
அலமர, சிதைத்தாள்
.


     கூனி போன பின் - தன் பணிப்பெண்ணாகிய  மந்தரை விடைபெற்றுச் சென்றபின்பு;  குல மலர்க் குப்பை நின்று இழிந்தாள் -கைகேயி சிறந்த  மலர்களின் குவியலால்ஆகிய படுக்கையிலிருந்து இறங்கி;சோனை வார் குழல் கற்றையில் - கருமேகம் போன்றதன் நீண்டகூந்தல் தொகுதியில்;  சொருகிய மாலை - சூடியிருந்த பூ மாலையை; வானமா மழை  நுழைதரு மதி - விண்ணிலே பெரிய கார்காலத்து மேகத்தில்நுழைந்திருக்கின்ற சந்திரனை;பிதிர்ப்பாள் போல் - இழுத்துச்சிதறவிப்பவள் போல; தேன் அவாவுறு வண்டு இனம்அலமர - பூவில் உள்ள  தேனை விரும்பி மொய்க்கின்ற வண்டுக் கூட்டம் நிலைகெட்டுச்சுழலுமாறு;சிதைத்தாள் - கூந்தலிலிருந்து பிடுங்கிச் சிதைத்தெறிந்தாள்.
     கூந்தலில் சொருகியிருந்த  பூமாலையைக் கைகேயி  எடுத்தெறிந்ததுமேகத்தில் நுழைந்த சந்திரனைப்பிதிர்ப்பது போல இருந்தது;  தன்மைத்தற்குறிப்பேற்ற அணி.  குப்பை - தொகுதி. மலர்க்குப்பை- ஆகுபெயராய்ப்படுக்கையைக் குறித்தது. இழிந்தாள் - முற்றெச்சம். கூந்தலிருந்து மாலையை
எடுத்தெறிந்ததுஅவளுக்கு நேர இருக்கும் அமங்கலத்தைக் குறிப்பாய்க்காட்டுகிறது.    

                                              1
1492. விளையும் தன் புகழ் வல்லியை
     வேர் அறுத்தென்ன,
கிளை கொள் மேகலை சிந்தினள்;
     கிண்கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்
     துடைப்பாள்போல்,
அளக வாள் நுதல் அரும் பெறல்
     திலகமும் அழித்தாள்.


     விளையும் தன் புகழ் வல்லியை - வளரும் தன்புகழாகிய கொடியை;வேர் அறுத்துஎன்ன - வேரொடு அறுத்தாற் போல;  கிளை கொள்மேகலை - ஒளியைக் கொண்ட மேகலாபரணத்தை ; சிந்தினாள் -
அறுத்தெறிந்தாள்; கிண்கிணியோடும் வளை துறந்தனள் - பாதக்கிண்கிணியுடனே கை வளையல்களையும் கழற்றி நீக்கினாள்;  மதியினில்மறு - சந்திரனிடத்தில்இருக்கும் களங்கத்தை;  துடைப்பாள்



போல- அகற்றுபவளைப் போல;  அளக வாள் நுதல் - கூந்தலைச்
சார்ந்து  அமைந்துள்ள ஒளிபொருந்தியநெற்றியில் உள்ள;  பெறல் அரும்
திலகமும் -  பெறுதற்கரிய திலகத்தையும்; அழித்தாள்- துடைத்தாள்.

     மேகலையை அறுத்தெறிந்தது புகழை வேரொடும் அறுத்தது  போலும்
எனவும், நெற்றியில் திலகத்தைஅழித்தது  மதியின் மறுவைத் துடைத்தது
போலும் எனவும்  கூறினார். இவை தற்குறிப்பேற்றம். திலகத்தின்அருமை
நோக்கி ‘அரும் பெறல்’  என்னும் அடை மொழி தந்தார்.  அறுத்தென்ன -
தொகுத்தல் விகாரம்.கிண்கிணி - காரணப் பெயர். கிண்கிண் என
ஒலித்தலான்.       

                                           2
1493.தா இல் மா மணிக் கலன் மற்றும்
     தனித் தனி சிதறி,
நாவி ஓதியை நானிலம்
     தைவரப் பரப்பி,
காவி உண் கண் அஞ்சனம்
     கான்றிடக் கலுழா,
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப்
     புவிமிசைப் புரண்டாள்.


     மற்றும் தா இல் மா மணிக் கலன் - பின்னும் குற்றமற்ற பெரிய
மணிகளால் ஆகியஅணிகளையும்; தனித்தனி சிதறி - வேறு வேறாகச்
சிதைத்தெறிந்து; நாவி ஓதியை -புழுகுநெய் பூசப்பட்ட கூந்தலை;
நால்நிலம் தைவரப் பரப்பி - தரையிலே  புரளுமாறு பரப்பிக்கொண்டு
காவி உண்கண் - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள்;  அஞ்சனம்
கான்றிட - மைகரைந்து  சிந்தும்படி;  கலுழா - கண்ணீர்விட்டு
அழுதுகொண்டு; பூ உதிர்ந்தது ஒர்கொம்பு என - மலர்களை யெல்லாம்
உதிர்த்துவிட்ட ஒரு வெறுங்கொம்புபோல; புவிமிசைப்புரண்டாள் -
தரைமேல் விழுந்து  உருண்டாள்.


     மங்கலப் பொருள்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு அழுத
கைகேயியின்தோற்றம் பின்னே தான் அடையப் போகும் கைம்மை
நிலையை இப்பொழுதே அவள் மேற்கொண்டதைக்குறிப்பாற்
புலப்படுத்தியது நானிலம் - ஈண்டு நால் வகை நிலத்தைச் சுட்டாமல்
தரையைச்சுட்டியது. புவி - தரை. அணிகலன்கள் நீங்கிய நிலையில்
மகளிர்க்குப் பூ உதிர்த்த கொம்பைஉவமை கூறுவதை ஆறுசெல் படலத்தில்



“தாஅரு நாண் முதல் அணி அலால், தகை
 மே வரு கலங்களை வெறுத்த மேனியர்,
 தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
 பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினர்”  
  


(2277)
என்னும் பாட்டிலும் காணலாம்.      3      
                       


1494.நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்
     துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம்
     கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து
     அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள்,
     கேகயன் தனையை.


     கேகயன் தனையை - கேகயன் மகளாகிய கைகேயி; நவ்வி வீழ்ந்து
என - மான் விழுந்தாற் போலவும்;  நாடகம்  மயில் துயின்று என்ன -
ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும்; ‘கவ்வைகூர்தர - துன்பம் மிக;  சனகி ஆம்கடிகமழ் கமலத்து அவ்வை -
மணங்கமலும் செந்தாமரையில்  வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்; நீங்கும் என்று - அயோத்தியை விட்டு நீங்குவாள்’  என்று கருதி;  அயோத்திவந்து அடைந்த - அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த;  அம் மடந்தை தவ்வை ஆம் என - அத்திருமடந்தையின்தமக்கையாகிய மூதேவிஎன்னுமாறு;  கிடந்தனள் - சோர்ந்து கிடந்தாள்.

     ஓடும் மானையும் ஆடும்  மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை
கூறுவது இந்நாள் வரை அவளிடம்இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது.திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது தற்குறிப்பேற்றம்.  அவ்வை -தாய்; தவ்வை - தமக்கை.                                       4



தசரதன் கைகேயியின் மாளிகைக்கு வருதல்  

1495.நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,
‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -
ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான்.


     ஆழி நெடுங் கை - ஆணைச் சக்கரம் ஏந்தும் நீண்ட கைகளை
யுடைய; ஆளி மடங்கள்அன்னான் - சிங்க ஏறு போன்றவனான தயதன்;
கங்குலின் நாழிகை நள் அடைந்த பின்றை -இராப்பொழுது  நடுவை
அடைந்த பின்னர்; வாழிய என்று அயில் மன்னர் துன்ன - ‘வாழ்க’
என்று கூறிக்கொண்டு வேலேந்திய அரசர்கள் பக்கத்தில் சூழ்ந்துவர;  யாழ்
இசை அஞ்சிய அம்சொல்ஏழை கோயில் -  யாழினது ஒலியும் அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு;
வந்தான் - வந்தடைந்தான்.

     மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய  விழா எற்பாடுகளைச்
செய்வதில் காலம் கழிந்தமையால்இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின்இருப்பிடம் நோக்கி  மகிழ்ச்சியோடு தசரதன் சென்றான்.  ஏழை - பெண்;


பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது  நடத்தலின் அறிவில்லாதவள் என்னும்
குறிப்பும் புலப்பட வைத்தார். மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப்
பெற்றது;  காரணப் பெயர்.       

                                5
1496. வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு,
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி,
பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள்,
ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன்
.


     மன்னர் வணங்கி வாயிலில் நிற்ப - தன்னுடன் வந்த அரசர்கள்
தொழுது அந்தப்புரவாயிலில் நிற்க; ஆங்கு வந்து - அவ்விடத்தில்
ஓடிவந்து; ஏயின செய்யும்  மடந்தைமாரொடுஏகி - கட்டளையிட்ட
வற்றைச் செய்யும் பணிப்பெண்களோடு சென்று; பாயல் துறந்த -
படுக்கையைவிட்ட;  படைத் தடங் கண் - வேல் போலும் கூரிய பெரிய

கண்களையும்; மெல்தோள்- மென்மையான தோள்களையும் உடைய; ஆய் இழைதன்னை - கைகேயி; அடைந்த ஆழிமன்னன்- சேர்ந்த அந்தச் சக்கரவர்த்தி  (எடுக்கலுற்றான் என அடுத்த பாடலோடு முடியும்)
     தசரதன் மாளிகையின் உள்ளே சென்று, தரையிலே அலங்கோலமாகக்
கிடந்த கைகேயியைக் கண்டான்என்பது கருத்து.  அந்தப்புரத்தில் அயல்
ஆடவர் செல்ல இயலாதாகலின் மன்னர் வெளியே நின்றனர். ஆயிழை -
பெண் என்னும் பொருட்டாய் நின்றது, கைகேயி  அணிகலன்களைத் துறந்து கிடத்தலின்.      

                                             6
கைகேயியைத் தசரதன் எடுத்தலும், 
அவள் மண்ணில் வீழ்தலும்  

1497அடைந்து , அவண் நோக்கி,
     ‘அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு
     சோரும் நெஞ்சன்,
மடந்தையை, மானை எடுக்கும்
     ஆனையேபோல்,
தடங்கை கள் கொண்டு தழீஇ,
     எடுக்கலுற்றான்.
    


அவண் அடைந்து - அங்குச் சென்று;  நோக்கி - கைகேயியின்
நிலையைக் கூர்ந்துபார்த்துத் (துணுக்கம் கொண்டு); அரந்தை என் கொல் வந்து  தொடர்ந்தது  என - துன்பம்யாது வந்து சேர்ந்தது  என்று எண்ணி;  துயர்கொண்டு சோரும் நெஞ்சன் - வருத்தமடைந்து வாடும் மனமுடையவனாய்; மானை எடுக்கும் ஆனையே போல் - பெண்மானைத்

துதிக்கையால் யானையைப்போல;  தடங்கைகள் கொண்டு - தன் பெரிய
கைகளால்;  மடந்தையைத் தழீஇ - அவளைக் கட்டித் தழுவி;  எடுக்கல்
உற்றான் -
தூக்கத் தொடங்கினான்.

1498.நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,
மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்.
ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் -
மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.


     மன்றல் அருந் தொடை மன்னன் - மணங் கமழும் அரிய மலர்
மாலையைச் சூடியதயரதனுடைய; ஆவி அன்னாள் - உயிர் போன்ற
வளான கைகேயி;  நின்று - தன் நிலையில்மாறாது நின்று;  தொடர்ந்த -
தன்னைத் தழுவ நீண்ட;  நெடுங் கை தம்மை நீக்கி -(அரசனுடைய)
நீண்ட கைகளை விலக்கி;  மின் துவள்கின்றது  போல - மின்னற் கொடி
துவண்டுவீழ்தல் போல; மண்ணில் வீழ்ந்தாள் - தரையில் வீழ்ந்து;
ஒன்றும் இயம்பலள் -ஒன்றும் சொல்லாமல்; நீடு உயிர்க்கல் உற்றாள்-
பெருமூச்சு விடத் தொடங்கினாள்.

     தேவியர் மூவரில் கைகேயியை தசரதன் மிகவும் விழைந்தான் என்பது
‘மன்னன் ஆவி அன்னாள்’என்னும் தொடரால் விளங்குகிறது.  மன்னன்
துயர் கண்டும் அவள் நெஞ்றசு இளகாமல் இருந்தது தோன்ற‘நின்று’
என்றார்.  வீழ்ந்தாள்,  இயம்பலள் - முற்றெச்சங்கள்.          

        8
தசரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல்

  
1499.அன்னது கண்ட அலங்கல்
     மன்னன் அஞ்சி,
‘என்னை நிகழ்ந்தது?’
     இவ் ஏழு ஞாலம் வாழ்வார்,

உன்னை இகழ்ந்தவர் மாள்வர்;
     உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி;
     சொல்லிடு’ என்றான்
.



     அன்னது கண்ட - கைகேயியின் அந்தச் செயலைப் பார்த்த;
அலங்கள் மன்னன் -மாலையைப் பூண்ட அரசன்;  அஞ்சி - அச்சம்
உற்று;  ‘நிகழ்ந்தது என்னை - நடந்தது யாது;  இஞ் ஞாலம் ஏழில்
வாழ்வார் -
இவ்வேழுலகங்களில் வாழ்பவர்களுள்;  உன்னைஇகழ்ந்தவர்
மாள்வர் -
உன்னை இழிவுபடுத்தியவர் எவராயிருந்தாலும் என்னால்
கொல்லப்பட்டுஅழிவர்;  உற்றது எல்லாம் - நிகழ்ந்தது அனைத்தையும்;
சொன்ன பின் - நீகூறிய பிறகு; என் செயல் காண்டி - என்
செய்கையைப் பார்; சொல்லிடு - காலந்தாழ்த்தாதுசொல்வாய்;’ என்றான்-
என்று சொன்னான்.
     இப்பாட்டு, தயரதன் கைகேயியின் அலங்கோல நிலையினைக் கண்டு,
கொண்ட துணுக்கத்தினையும்அவள்மீது கொண்ட காதலால் அவளைத்
தேற்ற முயலுதலையும் காட்டுகிறது. என்னால் கொல்லப்படுவர்என்பான்
மாள்வர் எனத் தன்வினையால் கூறினான். சொல்லிடு; இடு- துணைவினை. 9

கைகேயி வரம் வேண்டுதல்
1500.வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,
கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,
‘உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள்.


     வண்டு உளர்த தாரவன் - வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த
அரசனது; வாய்மை கேட்ட மங்கை - சொற்களைச் செவியுற்ற கைகேயி;
நெடுங் கணின் கொண்ட ஆலி- நீண்ட கண்களில் கொண்ட
நீர்த்துளிகள்; கொங்கை கோப்ப - மார்பில் வீழ(அமுது கொண்டு);
‘என்கண் அருள் உன்கண் ஒக்கின் - உன்னிடத்தில் உள்ள தானால்;
பண்டைய - முன்னே எனக்குக் கொடுத்தவற்றை;  பரிந்து அளித்தி -
அன்புகொண்டுஅளிப்பாய்;’ என்றாள் - என்ற சொன்னாள்.
     இப் பாட்டில் கைகேயி நயமாகப் பேசித் தயரதனது சூளுரையைப்
பெறவகை செய்கிறாள். ‘நெடுங்கணின் கொண்ட ஆலி’ என மாற்றில்
கூட்டுக.

பண்டைய என்றது - சம்பரனோடு போர் நிகழ்ந்தபோது கைகேயி
உதவியதற்குத் தயரதன் மகிழ்ந்து கொடுத்த வரம் இரண்டையும்  குறித்தது.
பண்டைய - பலவின்பால் பெயர். தன் தருத்தை அறிந்தபின்னர் அரசன்
அதற்கு உடன்படுதல் அரிதாகலின் ‘பரிந்து அளித்தி’ என்றாள்.        10



தசரதன் வாக்குறுதி அளித்தல் 

1501.கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,
வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்;
‘உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்;
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை’ என்றான்.


     கள் அவிழ் கோதை- தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது;
கருத்து உணராதமன்னன் -  எண்ணத்தை அறியாத தயரதன்;  வெள்ள
நெடுஞ் சுடர் மின்னின் -
மிகுந்தபேரொளியையுடைய மின்னல்போல;
மின்ன நக்கான்- விளங்கும்படி சிரித்து; ‘உள்ளம்உவந்துள செய்வேன்-
உன் மனம் விழைந்தனவற்றைச் செய்வேன்;  ஒன்றும் லோபேன் -அதில்
சிறிதும் உலோபம் செய்யேன்;  உன் மைந்தன் - நினக்கு மகனும்; 
வள்ளல் -
பெருவள்ளுலுமான; இராமன் ஆணை - இராமன்மேல்
சத்தியம்;’ என்றான் -.
     கைகேயியின் உபாயம் பயன் தந்தது இதனால் கூறப்பட்டது.  தயரதன்
நகைபிறர் பேதைமையான்எழுந்தது. கைகேயி இந்நாள்வரை இராமனிடம்
பேரன்புடையவன் என்னும் உறுதியால் ‘ உன் மைந்தன்இராமன்’ என்றான்.

     கள்ளவிழ் கோதை; அடையடுத்த ஆகுபெயர். லோபம் - வடசொல்;
ஈயாமை என்பதுபொருள்.                                    

Mittwoch, 16. Mai 2018

6.பெரியாழ்வார் திருமொழி

  (நீரோட்டம்)  "வெண்ணையலைந்த ----------கார்மதி மேனி நிறத்துக்  ------------" பத்துப்பாடல்கள் (152 -161)

நான்காந் திருமொழி



ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்கம்
(152)
வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்

விளக்கம் 

கண்ணபிரான் தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும். அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும் அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல்   நீராடவழைக்கின்றன ளென்க விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க.  புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.


(153)

கன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம்
இன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்

விளக்கம் 

கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும், ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும், அக்கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப்  பிடித்துப் புகவிட்டால் அவை காணமுடியாதபடி ஓடிப்போய்விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே? என்பது முதலிரண்டடிகளின் கருத்து.  ‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’  என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும், இது ஒருவகை எதிர்மறை இலக்கணை, பிற குறிப்பு, ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம். (மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க.


(154)
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.



விளக்கம் 

‘உனக்கு முலைகொடுத்த பேய்ச்சி பட்டபாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபடவேண்டி வரப்போகிறதே என்று அஞ்சி ஓடவேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலைதந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள். நெல்லி – நெல்லியிலை.  காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது.  கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித்தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.


(155)


கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.



விளக்கம் 


உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி  நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.

(156)
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.



விளக்கம் 

 ‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான்.  அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு.  சிறுமை + உண்டி – சிற்றுண்டி.  “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம்.  (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.


(157)
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.


விளக்கம் 

- அகத்திலுள்ளார் எல்லாரும் அந்யபரரம்படியாக முதலிலே எண்ணெய்க்குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக்கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம்  தீம்பு செய்பவனே!  என்றபடி.  கண் – இமைக்கு ஆகுபெயர்.  கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறிவிழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.



(158)
கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்
பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே
சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.



விளக்கம் 

 (சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன்மேல் பழிதூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன்மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.


(159)
கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து
பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்
நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.


விளக்கம் 


கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,’கன்றினை வாலோலை கட்டி’என்றார்.கன்றினை-உருபுமயக்கம்,[நன்இத்யாதி,] ‘அதைச்செய்தான்இதைச்செய்தான்’என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது, உன்னுடைய தன்மையை நனைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.


(160)
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.




விளக்கம் 



நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப் புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும் ‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும், நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பதுபோல நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். ...


(161)
கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல்புது வைக்கோன் பட்டர் பிரான்சொன்ன பாடல்
சீர்மல செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே.

விளக்கம் 


உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க.

அடிவரவு – வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.




Freitag, 11. Mai 2018

5.சுந்தரர் தேவாரம்

சிபர்ப்பதம்  

 797. 

தனிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறில் அன்றே
குளியீர்உளம் குருக்கேந்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளம் சிபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறிஉண்
கேதாரம்என் னீரே
.

தெளிவுரை :

 உலகீர், தேவ கோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தால் அன்றோ? இதனை மனத்தில் கொள்ளுங்கள். தெற்கில் உள்ள கோதாவரி, குமரி என்னும் தீர்த்தங்களிலும், வடக்கில் குரு÷க்ஷத்திரத்தில் உள்ள தீர்த்தங்களிலும் சென்று முழுகுங்கள். அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் வடக்கில் திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதியுங்கள்.

இத் திருப்பாடலுள் குமரி முதல் இமயம் வரை யாத்திரை சென்று தீர்த்தங்களில் மூழ்குமாறும் தலங்களை வணங்குமாறும் அருளுகின்றார்.

Mittwoch, 9. Mai 2018

4.சிலப்பதிகாரம்

மதுரைக்காண்டம்

(துன்பமாலை )
ஆங்கு,

ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்; 10
எல்லாவோ,

காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; 15
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ;
தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் 20
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;
சொன்னது:-

அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் 25
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே
எனக் கேட்டு,

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் 30
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்;
இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் 35
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ;
நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்
மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப 40
அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ;
தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; 45

காணிகா,

வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி 50
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.

Freitag, 4. Mai 2018

3.திருக்குறள் -6

6.தூது 

 680
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் 
 பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 

681 
 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு 
 இன்றி யமையாத மூன்று. 

682 
 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
 வென்றி வினையுரைப்பான் பண்பு. 

683 
 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் 
 செறிவுடையான் செல்க வினைக்கு. 

684 
 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி 
 நன்றி பயப்பதாந் தூது. 

685 
 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
 தக்கது அறிவதாம் தூது. 

686 
 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து 
 எண்ணி உரைப்பான் தலை. 

687 
 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் 
 வாய்மை வழியுரைப்பான் பண்பு. 

688 
 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் 
 வாய்சேரா வன்க ணவன். 

689 
 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
 உறுதி பயப்பதாம் தூது. 

Dienstag, 1. Mai 2018

3.திருக்குறள் -5

5)வினைசெயல்வகை 

670
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் 
அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 

671 
தூங்குக தூங்கிச் செயற்பால 
தூங்கற்க தூங்காது செய்யும் வினை. 

672 
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே 
ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.

 673 
வினைபகை என்றிரண்டின் எச்சம் 
நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். 

674 
பொருள்கருவி காலம் வினையிடனொடு 
ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.

 675 
முடிவும் இடையூறும் முற்றியாங்கு 
எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 

676 
செய்வினை செய்வான் செயன்முறை 
அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். 

677 
வினையான் வினையாக்கிக் கோடல் 
நனைகவுள் யானையால் யானையாத் தற்று. 

678 
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
 ஒட்டாரை ஒட்டிக் கொளல். 

679 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் 
குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.