Donnerstag, 7. Juni 2018

7.கம்பராமாயணம் -5

40
1531.‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும்,
     உயர் கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர்”
     என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர்காறும், எல் வளையார்,
     தம் இறையோரைச்

கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? -
     கொடியோளே!
     ‘எல் வளையார் - ஒளி பொருந்திய வளையலையுடைய மகளிர்;
ஒன்றா நின்ற ஆர்உயிரோடும் -  உடலோடு ஒன்று சேர்ந்த அரிய
உயிருடனே; உயர் கேள்வர் - தம்உயர்ந்த கணவர்; பொன்றா முன்னம்
பொன்றினர் -
இறப்பதற்கு முன்னே தாங்கள் இறந்தனர்; என்னும் புகழ்
அல்லால் -
எனப்படும் கீர்த்தியைக் கொண்டனரேயன்றி;  இன்றுகாறும்-
இன்றுவரை; தம் இறையோரைக் கொன்றார் இல்லை - தம் கணவரைக்
கொலை செய்தவர்இல்லை; கொடியாளே- கொடுமையுள்ளங் கொண்டவே!;
நீ கொல்லுதியோ - (அவ்வுலகஇயல்புக்கு மாறாக) நீ (என்னைக்)
கொல்லுகின்றாயோ -’
    இது முதல் ஐந்து பாடல்கள் ஒரு தொடர். 45 ஆம் பாட்டொடு
முடியும். அப்பாட்டில் வரும் தோளான்என்பது இவற்றிற்கு எழுவாய். இன்று
ஓர் காறும்; ஒர் - அசை.

     இதுவரை கணவனைக் கொன்ற மகளிர் இல்லை.  நீ கணவனாகிய
என்னைக் கொல்லுகின்றாய் ஆதலின்உன்போலக் கொடியவர் உண்டோ
என்று தயரதன் கைகேயியை இகழ்ந்தான். பத்தினிப் பெண்டிர்கணவன்
இறந்தபின் உயிர்வாழா இயல்பினர் என்று நூல்கள் கூறும்.


    “பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
     வள்இதழ் அவிழ்ந்த தாமரை
     நள்இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே”      
(புறம் 246)

   “தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல்,
    பெருங் கோப்பெண்டும் ஒருங்கு உடன் மாய்ந்தனன்”


                                    
(சிலம்பு 3:25: 85 - 86)

    “காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி,
    ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
    இன்உயிர் ஈவர்;  ஈயார் ஆயின்,
    நன்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்”


                                 
(மணிமேகலை;  2:42 - 48)

    “தரைமகளும் தன்கொழுநன் உடலம் தன்னைத்
    தாங்காமல் தன்கரத்தால் தாங்கி விண்நாட்டு
    அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
    ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்”


                                  
(கலிங்கத்துப் பரணி, 483)
    “போரில்,
     விடன் ஏந்தும் வேலாற்கும் வெள்வளையினாட்கும்
     உடனே உலந்தது உயிர்”


                        
(புறப்பொருள் வெண்பா மாலை: (262)
ஆகியவை காணத்தக்கன.                               41


1532.‘ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்;
     அறம் எண்ணாய்;
“ஆ!” என்பாயோ அல்லை; மனத்தால்
     அருள் கொன்றாய்;
நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்;
     இனி, ஞாலம்
பாவம் பாராது, இன் உயிர்
     கொள்ளப் படுகின்றாய்!
     ‘ஏவம் பாராய் - (என்) துன்பத்தைப் பார்க்கின்றாய் அல்லை;  இல்
முறை நோக்காய்-
நற்குடிப் பிறந்த பெண்ணின் நடைமுறையையும்
கருதுவாய் அல்லை; அறம் எண்ணாய் -தருமத்தையும் நினைக்க மாட்டாய்;
ஆ என்பாயோ அல்லை - ஐயோ என்று இரங்குவாயும் அல்லை;
மனத்தால் அருள் கொன்றாய் - உன் மனத்தில் அருள் என்னும்
பண்பையே கொன்றுவிட்டாய்; என் ஆர் உயிர் - என்னுடைய அரிய
உயிரையும்;  நா அம்பால் உண்டாய் - உன் நாக்காகியஅம்பினால்
கொன்றாய்; இனி ஞாலம் பாவம் பாராது - இனி இவ் வுலகத்து மக்களால்
(பெண்கொலை)பாவம் என்று பாராமல்;  இன் உயிர் கொள்ளப்
படுகின்றாய் -
உன் இனிய உயிரைக்கொள்ளப்படப் போகின்றாய்.
     பெண்ணிற்குரிய எந்த நற்பண்பும் இல்லாத உன்னை உலகத்தாரே
கொன்றொழிப்பர் என்கிறான்.ஏவம் - எவ்வம் என்பதன் விகாரம் மனத்தால்
அருள் - உருபு மயக்கம்.  உண்டாய் - தெளிவு பற்றிவந்தகால
வழுவமைதி.                                                  42



1533.‘ஏண்பால் ஓவா நாண்,
     மடம், அச்சம், இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்;
     புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர்
     தம்பால் நணுகாரே;
ஆண்பாலாரே; பெண்பால்
     ஆரோடு அடைவு அம்மா?
     ‘ஏண்பால் ஓவா - பெருமையின் பகுதியிலிருந்து நீங்காத; நாண்,
மடம் அச்சம்-
நாணம், மடம்,  அச்சம் முதலிய;  இவை தம் பூண்பால்
ஆக
- இவற்றைத் தம்முடையஅணிகலன்களாக; காண்பவர் நல்லார் -
கருதுபவர் நற்பெண்டிர் ஆவர்; புகழ் பேணி -புகழை விரும்பி; நாண்பால்
ஓரா நங்கையர் -
நாணத்தின் தன்மையை அறியாத மகளிர்; தம் பால்
நணுகாரே
- தம் இனத்தில் சேர்ந்தவர் ஆகார்;

ஆண்பாலாரே -(அவர்கள்) ஆண்மக்களே;  பெண்பால் ஆரோடு
அடைவு அம்மா -
பெண்ணினத்தில் யாரோடுசார்ந்தவர் ஆவார்?’
(ஒருவரோடும் சார்ந்தவர் அல்லர்)
     பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம்,  மடம், அச்சம், பயிர்ப்பு
என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் -
தகாதவற்றின்கண்உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும்
அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும்காணாததைக் கண்டவிடத்து
அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கைமுதலியன மேற்படின்
அருவருத்தல்.  ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம்
அசை;  அம்மா - வியப்பிடைச்சொல்.                            43



1534.‘மண் ஆள்கின்றார் ஆகி,
     வலத்தால் மதியால் வைத்து
எண்ணா நின்றார் யாரையும்,
     எல்லா இகலாலும்,
விண்ணோர்காறும், வென்ற எனக்கு,
     என் மனை வாழும்
பெண்ணால் வந்தது, அந்தரம்
     என்னப் பெறுவேனோ?’


     ‘மண் ஆள்கின்றார் ஆகி - நாட்டை ஆளுகின்ற அரசர்களாகப்
பட்டம் ஏற்று;  வலத்தால் - வலிமையாலும்;  மதியால் - அறிவினாலும்;
வைத்து எண்ணாநின்றார்யாரையும் - மேலாக வைத்துப்
போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும்- தேவர்கள்
வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு-
வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என்
அரண்மனையில் வாழும்பெண்ணினால்;  அந்தரம் வந்தது என்னப்
பெறுவேனோ -
முடிவு நேர்ந்தது  என்று சொல்லத்தக்க நிலையை
அடைவேனோ!’
     வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு
அவையில்லாத மனைவியால்முடிவுவந்துவிடுமோ என்கிறான். மனை வாழும்
பெண் - மனைவி இகலால் - உருபுமயக்கம்.                        44



1535.என்று, என்று, உன்னும்;
     பன்னி இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல்
     உழக்கும்; ‘உயிர் உண்டோ?
இன்று! இன்று! ’ என்னும்
     வண்ணம் மயங்கும்; இடையும் - பொன் -

குன்று ஒன்று ஒன்றோடு
     ஒன்றியது என்னக் குவி தோளான்.
     பொன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது
என்ன -
மற்றொருபொன்மலையோடு கூடியது என்னுமாறு;  குவி
தோளான்
- திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று
உன்னும் -
முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்;  பன்னி இரங்கும் -
வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும்- துன்ப வெள்ளத்தில்
அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத;
இன்னல் உழக்கும் - பலவகைத்துன்பங்களால் வருந்துவான்; உயிர்
உண்டோ -
மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும்வண்ணம் -
இல்லை இல்லை என்று கூறும்படி;  மயங்கும் - மூர்ச்சையுறுவான்;
இடையும்- (நெஞ்சம்) உடைவான்.
     தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப்
பட்டது.  ‘பொன் குன்றுஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ -  இல்பொருள்
உவமை.                                                     45

கைகேயி, ‘உரை மறுத்தால் உயிர் விடுவேன்’ எனல்
  
1536.ஆழிப் பொன் - தேர் மன்னவன்
     இவ்வாறு அயர்வு எய்தி,
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப்
     புரள் போழ்தில்,
“ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றேல்,
     உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள்,
     பகை அற்றாள்.
     ஆழிப் பொன் தேர் மன்னவன் - சக்கரங்களையுடைய பொன்னால்
ஆகிய தேரையுடையதயரதன்; இவ்வாறு அயர்வு எய்தி - இப்படித்
தளர்ச்சி அடைந்து; பொன் தோள் முற்றும்பூழி அடங்க - அழகிய தன்
தோள்கள் முழுவதும் புழுதி போர்க்க; புரள் போழ்தில் -(தரையில்)
உருளும்போது; பசை அற்றாள் - நெஞ்சில் ஈரமில்லாத கைகேயி; ‘பாழி
பொன் தார் மன்னவ -
பெருமை பொருந்திய பொன் மாலை அணிந்த
அரசே; ஊழின் பெற்றாய்- முறையாகப் பெற்றாய்; என்று உரை - என்று
உன்வாயால் சொல்; இன்றேல் -அவ்வாறு சொல்லாவிட்டால்; உயிர்
மாய்வென் -
நான் உயிரைப் போக்கிக்கொள்வேன்;’என்றாள் -.
     இப்பாட்டு, கைகேயியின் கல்நெஞ்சைக் காட்டுகிறது. ‘மன்னவ’ என்னும்
விளி சொன்னசொல்லைக் காத்தலும், அறத்தைப் போற்றுதலும் அரசனாகிய
உன் கடமை ஆகும். அதனைச் செய்க என்னும் கருத்தைக் காட்டுகிறது. ஆழிப் பொன் தேர் மன்னவன்என்பதில் தசரதன் என்பதன் பொருள் அடங்கியிருக்கிறது.  பூழி - புழுதி.  பசை - ஈரம்,  இரக்கம்.    46


1537.‘அரிந்தான், முன் ஓர் மன்னவன்
     அன்றே அரு மேனி,
வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை வளர்ப்பான்!
     வரம் நல்கி,
பரிந்தால், என் ஆம்?’ என்றனள் -
     பாயும் கனலேபோல்,
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும்
     எரி அன்னாள்.


     பாயும் கனலேபோல் - பரந்து எரியும் தீயைப்போல; எரிந்து
ஆறாதே
- எரிந்துதணியாமல்; இன்உயிர் உண்ணும் - இனிய உயிரை
அழிக்கின்ற;  எரி அன்னாள் -நெருப்புப் போன்ற  கைகேயி;  ‘வரிந்து
ஆர் வில்லாய் -
இறுக்கிக் கட்டப்பட்டவில்லை உடையவனே!;  முன்
ஓர் மன்னவன் -
உன் குலத்தில் முன்பு தோன்றிய ஓர் அரசன்;வாய்மை
வளர்ப்பான் -
சத்தியத்தைக் காப்பதற்காக;  அருமேனி அரிந்தான்
அன்றே-
அரிய தன் உடலை அரிந்து கொடுத்தான் அல்லவா?;  வரம்
நல்கி -
(அவ்வாறிக்க)நீ முன்னே வரத்தைத் தந்துவிட்டு; பரிந்தால் என்
ஆம் -
இப்போது  வருந்தினால் என்னபயன் உண்டாகும்;’  என்றனள்-.

     வாய்மை காக்க அருமேனி அரிந்த மன்னவன் சிபிச் சக்கரவர்த்தி
ஆவான்.  ஒரு பொருளைக்பற்றி எரித்த பின் தீயானது தணிந்துவிடுவதாய்
இருக்கக் கைகேயியாகிய தீயோ உயிரோடு கூடியமன்னவனைப் பற்றி
எரித்தும் தணியாது  அவன் உயிரையும் கொள்ளுகிறது என வேற்றுமையணி
தோன்ற, எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி  அன்னால்’
என்றார்.                                                    47
தயரதன் வரம் தருதல் 

1538.‘வீய்ந்தாளே இவ் வெய்யவள்’ என்னா,
     மிடல் வேந்தன்
‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்;
     என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு
     ஆள்வென்; வசை வெள்ளம்
நீந்தாய், நீற்தாய், நின்
     மகனோடும் நெடிது!’ என்றான்.


     மிடல் வேந்தன் - வலிமை பொருந்திய தயரதன்; ‘இவ் வெய்யவன்
வீய்ந்தாளேஎன்னா -
இந்தக் கொடியவள் நாம் உடன்படாவிட்டால்இறுந்துவிடுவான் என்று கருதி;’ இவ் வரம் ஈந்தேன் ஈந்தேன் - இந்த
வரங்களைக் கொடுத்தேன்,கொடுத்தேன்; என் சேய் வனம் ஆள - என்
மகன் இராமன் காட்டை ஆள;  நான் மாய்ந்துபோய் - யான்
இறந்துபோய்;  வான் உலகு ஆள்வென் - விண்ணுலகை ஆள்வேன்;
நெடிது- நெடுங்காலம்;  நின் மகனோடும் - (நீ) நின் பிள்ளையாகிய
பரதனுடன் கூடி;  வசை வெள்ளம் - பழியாகிய கடலை;  நீந்தாய்
நீந்தாய் -
கடக்க முடியாமல் அதனுள்நீந்திக்கொண்டே இருப்பாய்;’
என்றான் -.
     தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று
அஞ்சி,  ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து  கூறினான். இவ் அடுக்கு -
தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி
இறந்த காலத்தில் கூளினார்.                                     48



தயரதன் துயர் கொள்ள, கைகேயி துயிர் கொள்ளல்
  
1539.கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி,
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்.


     கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று,  கூறி
முடிப்பதற்குள் முன்னே;கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற;
கொலைவாளின் ஏறு ஆம் என்னும் -கொலைத் தொழிலையுடைய
வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க;  வன் துயர்
ஆகத்து இடை மூழ்க -
கொடிய துன்பம் மனத்தில் புக; தேறான் ஆகி -
உணர்வற்றவன்ஆகி; செய்கை மறந்தான் - செயல்மறந்து மயங்கினான்;
செயல்முற்றி - (தன்காரியம்) முடிவுற்றதனால்; ஊறா நின்ற
சிந்தையினாளும் -
மகிழ்ச்சி  ஊறுகின்ற மனமுடையகைகேயியும்;
துயிலுற்றாள் - உறங்கினாள்.
     இப்பாட்டில், தயரதன் துயரினால் செயலற்றுக் கிடக்க, கைகேயி
மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்துதூங்கினாள் எனக் துயருற்றார்க்கும்
மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரேநிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டது.வாள்
ஏறு - வாளின் தாக்குதல். இடியேறு என்பது போல,  செயல் முற்றலாவது -
தான் வேண்டிய வரங்களைப்பெற்றுக்கொண்டது.        

            49
இரவு கழிதல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

1540.
சேண் உலாவிய நாள் எலாம் உயிர்ஒன்று
     போல்வன செய்து, பின்

ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த,
     ஒன்றும் இரங்கிலா
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு,
     மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் -
     நளிர் கங்குல் ஆகிய நங்கையே.


     சேண் உலாவிய நாள் எலாம் - நீட்சி பொருந்திய மிகப் பல
நாளும்;  உயிர்ஒன்று போல்வன செய்து - இருவருக்கும் உயிர் ஒன்றே
என்று சொல்லத்தக்க செயல்களைப் புரிந்து; பின் - பிறகு; ஏண் உலாவிய
தோளினான் -
வலிமை பொருந்திய தோள்களையுடையகணவன்; இடர்
எய்த -
துன்பத்தை அடைய;  ஒன்றும் இரங்கிலா - அது கண்டுசிறிதும்
மனம் நெகிழாத; வாள் நிலா நகை மாதராள் - ஒளிமிக்க பற்களையுடைய
கைகேயியின்; செயல்கண்டு - தீச்செயலைப் பார்த்து;  நளிர் கங்குல்
ஆகிய நங்கை -
குளிர்ந்தஇரவாகிய பெண்;  மைந்தர்முன் நிற்கவும்
நாணினாள் என -
ஆடவர் முன்னே நிற்பதற்கும்வெட்கமுற்றாள்
என்னும்படி;  ஏகினாள் - அகன்று போனாள் (இரவு கழிந்தது)
     சேண் உலாவிய நாள் எலாம் - நீண்ட காலமாக;  பல ஆண்டுகளாக;
அஃதாவது திருமணம் ஆனதுமுதல்அதுவரை உள்ள நிண்ட காலம்.
இவ்வளவு  காலமும்  ஈருடலும் ஓருயிரும் போலக் கணவனுடன் ஒன்றுபட்டு
அவன் இன்பத்தில் தான் இன்புற்றும்,  அவன் துன்பத்தில் தான் துன்புற்றும்
வாழ்ந்தவள் இப்போதுமாறுபட்டு இரக்கமின்றி அவன் பெருந் துயரத்திற்கும்
காரணமாகிப் பழியேற்றது கண்டு,  அது பெண்குலத்திற்கேஇழுக்க என்று
கருதிக் கங்குலாகிய நங்கை ஆடவர் முன் நின்றகவும் நாணி அகன்றாள்.
தற்குறிப்பேற்றஅணி. வாள்நிலா - ஒரு பொருட் பன்மொழி.  நிற்கவும் -
உம்மை இழிவு சிறப்பு.                                          50

Keine Kommentare:

Kommentar veröffentlichen