Montag, 11. Juni 2018

7.கம்பராமாயணம் -6

1541.எண் தரும் கடை சென்ற
     யாமம் இயம்புகின்றன - ஏழையால்,
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
     மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன
     காமர் துணைக் கரம்
கொண்டு, தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப
     போன்றன - கோழியே.
     எண்தரும் கடை சென்ற யாமம் -  எண்ணப்படுகிற யாமங்களில்
கடைசியாய் வந்த யாமத்தில்; இயம்புகின்றன கோழி - கூவுகின்றன வாகிய
கோழிகள்;  ஏழையால் - அறிவற்றவளானகைகேயியால்;வண்டு தங்கிய தொங்கல் மார்பன்-வண்டுகள் மொய்க்கின்ற மாலையை
அணிந்த மார்பினையுடைய தயரதன்;  மயங்கி - அறிவு அழிந்து;
விம்மியவாறு எலாம் கண்டு - புலம்பியவற்றை எல்லாம் பார்த்து; நெஞ்சு
கலங்கி -
மனம் கலங்கி;  அம் சிறை ஆன - அழகிய சிறகுகளாகிய;
காமர் துணைக் கரம்கொண்டு- அழகிய இரு கைகளால்;  தம் வயிறு
எற்றி எற்றி -
தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப
போன்றன -
அழுவன போன்றிருந்தன.
     இது முதல் பதினாறு பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும்
நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்படுகின்றன. வைகறையில் இயல்பாகக் கூவும்
கோழிகள் கைகேயியால் துன்புற்ற தயரதனைப் பார்த்து அடித்துக்கொண்டு
அழுவன போன்றிருந்தன என்பது தற்குறிப்பேற்ற அணி.  இந்த அணிக்கு,
‘சிறை ஆன காமர் துணைக்கரம் என வரும் உருவக அணி அங்கமாய்
அமைந்தது.  கோழி - பால்பகா அஃறிணைப் பெயர். ஏ - ஈற்றசை.



ஒப்பு:தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரியருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா 280)       51

1542.தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி,
     மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின்
     நின்று சிலம்புவ -
கேகயத்து அரசன் பயந்த விடத்தை,
     இன்னது ஓர் கேடு சூழ்
மா கயத்தியை, உள் கொதித்து,
     மனத்து வைவன போன்றவே.
     தோய் கயத்தும் - நீராடும் குளங்களிலிருந்தும்; மரத்தும் -
மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால்
குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற
பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய
சிற்றிடையையுடைய;  மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச்
சிலம்புகள்போலிருந்து;  சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன்
பயந்த விடத்தை -
கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை;
இன்னது ஓர்கேடு  சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த;  மா
கயத்தியை -
மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து  - உள்ளம்
புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை
ஒத்திருந்தன;  ஏ -அசை.
     பறவைகள் விடியற் காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு
அவளைத்
தம் மனத்தினுள் வைவது  போலும் என்றார். இது தற்குறிப்பற்ற அணி,
கணவன் உயிரை வாங்கக் காரணமாதலின்‘விடத்தை’ என்றார்.  கயத்தி -
கயவன் என்பதன் பெண்பால்; கீழ்மையுடையவள். அவள் செயலின்
கொடுமை நோக்கி ‘மா கயத்தி’ என்றார். ஏ - அசை                 52



யானைகள் துயில் ஒழிந்து எழுதல்  

1543.சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த
     இன் துயில் செய்தபின்,
‘வாம மேகலை மங்கையொடு வனத்துள்,
     யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்’ என்று
     நடுங்குகின்ற மனத்தவாய்,
‘யாமும் இம் மண் இறத்தும்’
     என்பனபோல் எழுந்தன - யானையே.
     யானை - யானைகள்;  சேமம் என்பன பற்றி - தமக்குப்
பாதுகாப்பான கூடங்களில்பொருந்தி;  அன்பு திருந்த இன்துயில்
செய்தபின் -
இராமபிரானிடத்து அன்பு மிக இனிதுதூக்கத்தைச் செய்த
பின்பு;  வாம மேகலை மங்கையொடு - அழகிய மேகலை அணிந்த சீதை
யோடு;  யாரும் மறக்கிலா நாம நம்பி - எவரும் மறக்க முடியாத
திருப்பெயரை உடைய இராமபிரான்; வனத்துள் நடக்கும் என்று -
காட்டிற்குச் செல்வான் என்று;  நடுங்குகின்ற மனத்தவாய்- வருந்துகின்ற
நெஞ்சையுடையவனவாய்;  ‘யாமும் இம் மண் இறத்தும் - நாமும் இந்த
நாட்டைவிட்டுச் செல்வோம்;’  என்பன போல் - என்று கூறுவன போல;
எழுந்தன -கிளம்பின.
     யானைகள் எழுந்ததை, இராமபிரான் நாட்டை விட்டுக் காட்டுக்குச்
செல்லப் போவதனால் நாமும்இந்நாட்டைவிட்டுச் செல்வோம் என எழுந்தது
போலத் தோன்றியது என்கிறார். இது தற்குறிப்பேற்றஅணி. சேமம் - கூட்டு
மிடம்;  கூடம். வாமம் - அழகு. மேகலை - எண்கோவை மணி.  யானை -
பால்பகாஅஃறினைப் பெயர்.                                    53


விண்மீன்கள் மறைதல்  

1544.
சிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை,
     திருமாலை, அக்
கரிக் கரம் பொரு கைத்தலத்து, உயர் காப்பு
     நாண் அணிதற்குமுன்
வரித்த தண் கதிர் முத்தது ஆகி,
     இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்

விரித்த பந்தர் பிரித்தது ஆம் என,
     மீன் ஒளித்தது - வானமே.
     சிரித்த பங்கயம் ஒத்த - மலர்ந்த தாமரைப் பூக்களைப் போன்ற;
செங்கண்திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய
இராமபிரானது;  கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது
துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்;  உயர்காப்பு நாண் -  சிறந்த
மங்கல நாணை;  அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே;  இம் மண்
அனைத்தும் நிழற்ற -
இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்;
வரித்ததண் கதிர் முத்தது ஆகி- கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய
முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி
வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என- பிரிக்கப்பட்டது
போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது- விண்மீன்களோடு மறைந்தது.
     வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும்
கொண்டு, காலையில் விண்மீன்கள்மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில்
முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார்.இது
தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன்,  அதற்குரிய தலைவன்
வலங்கையில்காப்புக் கயிறு  (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த
பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு;  வேற்றுமை
மயக்கம்.                                                     54


மகளிர் எழுதல்
  
1545.‘நாம விற் கை இராமனைத் தொழும் நாள்
     அடைந்த நமக்கு எலாம்,
காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது’
     என்பது கற்பியா,
தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி,
     சாரல் மாரி தழங்கலால்,
மா மயில் குலம் என்ன, முன்னம்
     மலர்ந்து எழுந்தனர், மாதரே,
     நாம வில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும்
கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை;  தொழும் நாள் அடைந்த
நமக்கு எலாம் -
வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்;
காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனது கரும்பு வில்லுக்குத்
தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது;  கரித்தது - நீங்கியது;
என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக் கொண்டு; பேரி ஒலித்தன -
முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி- அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்-
மலைப் பக்கங்களில் தங்கியமேகம்போல முழங்கியதால்; மாமயில் குலம் என்ன - பெரிய மயில்களின்
கூட்டம் எழுந்தாற்போல; மாதர் - மகளிர்;  முன்னம் மலர்ந்து
எழுந்தனர்
- தம் கணவர் எழுவதற்குமுன்னே முகம் மலர்ந்து
துயிலினின்றும் எழுந்தனர்;
     நாமம் - அச்சம். கங்குல் மாலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
ஏ - ஈற்றசை.                                                 55


1546.இன மலர்க் குலம்வாய் விரித்து,
     இள வாச மாருதம் வீச, முன்
புனை துகிற்கலை சோர, நெஞ்சு
     புழுங்கினார் சில பூவைமார்;
மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப்
     புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார்
     சில கன்னிமார்.
     சில பூவைமார் - பெண்கள் சிலர்;  இன மலர் குலம் வாய்
விரித்து-
பல்வகையானபூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள
மாருதம் வீச -
நறுமணம் கலந்த இளங்காற்றுவீசுதலினால்; முன் புனை-
முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலைசோர - அடையும்
மேகலையும் குலைய;  நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில
கன்னிமார் -
மணமாகா மகளிர் சிலர்; மனம் அணுக்கம் விட - நெஞ்சில்
உள்ள வருத்தம்  தீர;  தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்);
வள்ளலைப்புணர்- இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன்
கனவுக்கு -
மிக்க வஞ்சனையையுடையகனாவிற்கு;  இடையூறு அடுக்க -
காற்றினால் தடை பொருந்துதலினால்;  மயங்கினார் -திகைத்தனர்.
     தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த
மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாதபெண் காற்றினால் தூக்கம் கலைந்து
கனவு நீங்க,  உண்மையறிந்து  மயங்கினர். விரித்து -விரிய;  செய்தென்
எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு.                       56



குமுதங்கள் குவிதல் 

1547.சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு
     தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு,
     அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு,
     சீரிய நங்கையார்.

வாய் அடங்கின என்ன வந்து குவிந்த -
     வண் குமுதங்களே.
     சாய் அடங்க - தன் பெருமை அழியவும்;  நலம் கலந்து  தயங்கு
தன்குல நன்மையும்-
நன்மை பொருந்தி விளங்குகின்ற  தனது  குலத்தின்
சிறப்பும்;  போய் அடங்க -  கெட்டழியவும்; நெடுங் கொடும் பழி
கொண்டு
- நெடுங்காலம் நிற்பதாகிய கொடிய பழியையேற்றும்; அரும்
புகழ் சிந்தும்
- பெறுதற்கரிய புகழைச் சிதறுகின்ற;  அத் தீ அடங்கிய
சிந்தையாள்-
அந்தக் கொடுமை பொருந்திய மனத்தையுடைய
கைகேயியினது;  செயல் கண்டு - தகாத செயலைப்பார்த்து;  சீரிய
நங்கைமார் வாய் -
சிறந்த பெண்களின் வாய்கள்;  அடங்கின என்ன-
அடங்கி மூடினாற்போல; வண்  குமுதங்கள் - வளப்பத்தையுடைய
செவ்வாம் பல் மலர்கள்;வந்து  குவிந்த - (இதழ்கள் கூடி) மூடின.
     ஆம்பல் மலர் காலையில் குவிதல் இயற்கை நிகழ்ச்சி. அது
கைகேயியின் கொடுமை கண்டு குலப்பெண்டிர்வாயடங்கியிருந்தாற்போன்று
இருந்தது என்பது தற்குறிப் பேற்றம். பழி கொண்டு புகழ் சிந்தினாள்என்பது
மாற்றுநிலை அணி (பரிவர்த்தனாலங்காரம்). தீ - உலமவாகு பெயர்;
தீப்போலும் கொடுமையைக்குறித்தது.   


                          57
1548. மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு
     தீயின் முழங்க, மேல்
வை அராவிய மாரன் வாளியும், வான்
     நிலா நெடு வாடையும்,
மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு
     மாதர்தம் மென் செவி,
பை அரா நுழைகின்ற போன்றன -
     பண் கனிந்து எழு பாடலே.
     மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில்
நிறையும்படியும்;  ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த
எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே;  வை
அராவிய மாரன் வாளியும்-
கூர்மை செய்யப்பட்ட மன்மதன்அம்புகளும்;
வான் நிலா நெடு வாடையும்- விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்;
மெய் அராவிட -  உடலை அறுத்தலால்;  ஆவி சோர - உயிர் தளர;
வெதும்பும்மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய
காதுகளில்;  பண் கனிந்து  எழுபாடல் - இசை முதிர்ந்து  எழுகின்ற
பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள்
நுழைவனவற்றை ஒத்தன;
     கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும்
இரவில் வருத்த. காலையில்எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை
மிகுவித்துத்
துன்புறுத்தின. அராகம் - காதல்; பொருளிடத்துத் தோன்றும்
பற்றுள்ளம். ஆசை - உள்ளம்விரும்பியதைப் பெறவேண்டும் என்று மேலும்
மேலும் நிகழ்வது.  நிலா நெடுவாடை - நிலாவும் நெடியவாடைக் காற்றும்.
பாடல் - பள்ளியெழுச்சிப் பாடல்.  ஏ - ஈற்றசை.                   58

ஆடவர் பள்ளியெழுச்சி  
1549.‘ஆழியான் முடி சூடும் நாள்,
     இடை ஆன பாவிஇது ஓர் இரா
ஊழி ஆயினவாறு’ எனா, உயர்த
     போதின்மேல் உறை பேதையும்,
ஏழு லோகமும், எண் தவம் செய்த
     கண்ணும், எங்கள் மனங்களும்,
வாழும் நாள் இது’ எனா எழுந்தனர் -
     மஞ்ச தோய் புய மஞ்சரே.
     மஞ்சு தோய் புய மஞ்சர் - மேகத்தை யொத்த கைகளையுடைய
ஆடவர்;  ஆழியான்முடிசூடும் நாள் - சக்கரப்படை ஏந்திய இராம
பிரான் மகுடம் சூடிக்கொள்ளும் நாளுக்கு;  இடை ஆன - நடுவிலே வந்த;
பாவி இது  ஓர் இரா - பாவியாகிய இந்த ஓர் இரவு;  ஊழி ஆயினவாறு
எனா -
ஊழிக்காலம் போல நெடிதாய் இருந்தது  என்னோ என்று
எண்ணியும்;  உயர் போதின்மேல் உறை பேதையும் - சிறந்த
தாமரைமலரில் தங்கியுள்ள திருமகளும்; ஏழுலோகமும் - ஏழு உலகத்தில்
வாழ்வோரும்;  எண் தவம் செய்த கண்ணும் - முடி சூட்டுவிழாவைக்
காணப் பெருமைக்குரிய தவத்தைப் புரிந்த எங்கள் கண்களும்; எங்கள்
மனங்களும் -
அத்தகைய எங்கள் நெஞ்சங்களும்;  வாழும் நாள் இது
எனா -
வார்ச்சியுறும் காலம் இந்நாள்என்று எண்ணியும்;  எழுந்தனர் -
படுக்கையிலிருந்து எழுந்தனர்.
     இராமன் முடிசூடும் விடியலுக்குக் காத்திருந்தமையால்,  இரவு  நீண்டு
செல்வதாகத் தோன்றியது.எனவே, ‘பாவி இரா’ என்று பழித்தனர்.  எனினும்,
கைகேயி சூழ்ச்சி செய்த இரவாக அது அமைந்துஉண்மையிலேயே பாவி
இரவாக ஆயிற்று. எண் தவம் செய்த என்னும் அடையினை மனங்களோடும்
கூட்டுக.வாழும் நாள் - தாம் தோன்றியதற்குரிய பயனைஅடையும் நாள்.
இரவைப் பாவி என்றது.‘அழுக்காறு எனஒரு பாவி’ (குறள்.168) என்பது
போல.                                                      59

மகளிர் எழுதல்  
1550.
ஐஉறும் சுடர் மேனியான் எழில் காண
     மூளும் அவாவினால்,
கொய்யுறும் குல மா மலர்க் குவைநின்று
     எழுந்தனர் - கூர்மை கூர்

நெய் உறும்சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து,
     நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு
     பொம்மென விம்மவே.
     கூர்மை கூர் - கூர்மை மிக்க;  நெய்உறும் சுடர் வேல் - நெய்
பூசப்பட்டஒளிபொருந்திய வேல் போன்ற;  நெடுங் கண் முகிழ்ந்து -
நீண்ட கண்களை மூடிக்கொண்டு; நெஞ்சில் நினைப்பொடும் - மனத்தில்
இராமனைப் பற்றிய எண்ணத்தோடு;  பொய்உறங்கும் மடந்தைமார் -
கள்ளத்துயில் கொண்ட மகளிர்; ஐ உறும் சுடர் மேனியான் - வியப்பைத்
தருகின்ற ஒளிவீசும் திருமேனியையுடைய இராமபிரானது;  எழில் காண -
முடிசூடியபுதிய அழகைக் காண்பதற்கு; மூளும் அவாவினால் -
கிளர்ந்தெழுகின்ற ஆசையினால்;  கொய் உறும் குல மா மலர்க் குவை
நின்று -
கொய்யப்பட்ட சிறந்த பெரிய மலர்த்தொகுதியினால்செய்யப்பட்ட
படுக்கையிலிருந்து; குழல்வண்டு பொம்என விம்ம- இசைப்பாட்டையுடைய
வண்டுகள் பொம்மென்று  ஆளத்திவைக்க;  எழுந்தனர்-.
     ‘நாம விற்கை’ (1545) என்று தொடங்கும் பாடல் தத்தம் கணவரோடு
கூடியிருந்த பெண்கள்விழித்ததைத் தெரிவிப்பது; இப்பாடல்
கன்னிப்பெண்கள் விழித்தெழுந்ததைக் கூறுவது.  இராமனது முடிசூட்டு
விழாவைக் காணும் ஆசை நெஞ்சில் மூண்டெழுவதால் உறக்கம்
வராதிருக்கவும் கண்மூடிக் கிடந்தனர். ஆதலின் அது ‘பொய் உறக்கம்’
ஆயிற்று.  எழில் - மேலும் மேலும் வளர்ந்து சிறக்கும் அழகு. குவை -
ஆகுபெயராய் மலர்களால் ஆகிய படுக்கையை உணர்த்திற்று. குழல்
வண்டு - குழல்போல இசைபாடும்வண்டு. “பொன் பால் பொருவும் விரை
அல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது,  தன்பால் தழுவும்குழல்வண்டு,
தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே”  (3736) என்னும் இடத்தும்
இப்பொருளில்வருதல் காணலாம். பொம்மென - ஒலிக்குறிப்பு.         60

Keine Kommentare:

Kommentar veröffentlichen