Montag, 2. Juli 2018

8.தேம்பாவணி -4

   17
மருந்தடக் கனிமுக மகிழ்ந்து நாயக
னருந்தடத் தவர்க்குநல் லருளோ டாசியைத்
தருந்தடத் திவர்ந்திருட் புதைத்த சாமத்தாங்
கிருந்தடத் தேகுதற் கெழுந்து போயினார்.
மருந்து அடக் கனி முகம் மகிழ்ந்து நாயகன்,
அருந் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியைத்
தரும் தடத்து இவர்ந்து, இருள் புதைத்த
சாமத்து, ஆங்கு
இருந் தடத்து ஏகுதற்கு, எழுந்து போயினார்.


     அமுதத்தையும் வென்ற தன்மையாய் ஆண்டவனாம் அப் பாலன்
கனிந்த முகம் காட்டி மகிழ்ந்து, அரிய பெருமையாய் நல்ல அருளோடு
ஆசியை அவர்களுக்குத் தரும் மாண்பினால் அவர்கள் எழுச்சி கொண்டு,
அங்கிருந்து நெடிய வழித் தடத்திற் செல்வதற்கு இருள் கவிந்த நள்ளிரவில்
எழுந்து போயினர்.



             18
இருச்சுட ரோன்பட வீரை யாயிரங்
குருச்சுடர் மேனியைக் கொண்ட வானவர்
திருச்சுட ரோனெனச் சிறுவன் றாளிணை
பருச்சுடர் பாய்ந்துறப் பணிந்து தோன்றினார்.
இருச் சுடரோன் பட, ஈர் ஐயாயிரம்,
குருச் சுடர் மேனியைக் கொண்ட வானவர்,
திருச் சுடரோன் என் அச் சிறுவன் தாள் இணை,
பருச் சுடர் பாய்ந்து உறப் பணிந்து தோன்றினார்.
     பெருஞ் சுடரோன் எனப்படும் கதிரவன் ஒளி கெடத் தக்க நிறம்
வாய்ந்த ஒளி மேனியைக் கொண்ட பதினாயிரம் வானவர், திரண்ட ஒளி
பாய்ந்து நிலைக்குமாறு, திருச்சுடரோன் எனப்படும் அச்சிறுவனின் இரண்டு
அடிகளையும் வணங்கியவண்ணம் வந்து தோன்றினர்.

     'இருஞ்சுடர்' என்பது,எதுகை ஓசைப் பொருட்டு, 'இருச்சுடர்' என
நின்றது.




               19
எல்லியல் படச்சுட ரிரவி றோற்றினார்
பல்லியங் கடலொலி படமு ழக்கினா
ரல்லியங் குழவியை யளவில் வாழ்த்தினார்
கல்லியம் பாத்தொடை கனியப் பாடினார்.

எல் இயல் படச் சுடர் இரவில் தோற்றினார்;
பல் இயம் கடல் ஒலி பட முழக்கினார்;
அல்லி அம் குழவியை அளவு இல் வாழ்த்தினார்;
கல்லியம் பாத் தொடை கனியப் பாடினார்.


     அவ்வானவர் பகலின் தன்மை கெடுமாறு ஒளிரும் இரவு போல்
அதனைத் தோன்றச் செய்தனர்; கடலின் ஒலியும் கெடுமாறு பல இசைக்
கருவிகளை முழக்கினர்; ஆம்பல் மலர் போல் அழகிய அக்குழந்தையை
அளவில்லாது வாழ்த்தினர்; தேன் போன்ற பாடல்களைத் தொடைநயம்
கனியப் பாடினர்.

     தொடை - எதுகை; மோனை போன்ற பாடல் உறுப்புக்கள்.
                  நாதன் நீங்க நலமெலாம் நீங்கல்
     - விளம், - மா, - தேமா, - விளம், - மா, - தேமா
                 20
வார்வளர் முரசு மாரா வரிவளர் வளையு மூதா
தேர்வள ருருளுஞ் செல்லா தெருவள ரரவுந் தோன்றா
வூர்வள ரசைவு மில்லா வுறங்கிய சாமத் தேகிச்
சீர்வள ருயிர்போ யவ்வூர் செத்துடம் பொத்த தன்றே.
வார் வளர் முரசும் ஆரா, வரி வளர் வளையும் ஊதா,
தேர் வளர் உருளும் செல்லா, தெரு வளர் அரவும் தோன்றா,
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி,
சீர் வளர் உயிர் போய் அவ் ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே


     வாரால் அடித்துப் பிறக்கும் முரசு முழங்காமலும், வரிகளைத்
தன்பால் கொண்டுள்ள சங்கு ஊதாமலும், தேரோடுபொருந்திய சக்கரம் உருண்டு செல்லாமலும், தெருவிலே வளரும் ஆரவாரம் தோன்றாமலும், ஊரில் காணப்படும் நடமாட்டம் இல்லாமலும் உறங்கிக் கிடந்த நள்ளிரவில் இவர்கள் நீங்கிச் சென்றமையால், அவ்வூர் தன் சிறப்பு வளர்வதற்குக் காரணமான உயிர்போகச் செத்த உடம்பு போன்றது.
'அன்றே' - இங்கும், தொடரும் பாடல்களிலும் அசைநிலை : வரி - சங்கைச் சுற்றிக் காணப்படும் கோடு. அது 'புரி' எனப்படும். புரியின் போக்கு நோக்கி, வலம்புரி இடம்புரி எனச் சங்கு இருவகைப்படும். வலம்புரிச் சங்கே சிறப்புக் கொண்டது. 'செத்தவுடம்பு' என்பது, 'செத்துடம்பு' என வந்தது தொகுத்தல் விகாரம். அரவு - அரவம் என்பதன் கடைக்குறை.



          21
நல்வினை யுலந்த போழ்தின் னலமெலா மகலும் போலக்
கொல்வினை யறுப்ப வந்த குணத்தொகை யிறைவன் போக
வல்வினை மருளிற் பொங்கு மல்லவை யுயிரை வாட்டப்
புல்வினை மல்கிச் சீலம் புரிநலம் போயிற்றன்றோ.
நல்வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகலும் போல,
கொல் வினை அறுப்ப வந்த குணத் தொகை இறைவன் போக,
வல் வினை மருளின் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட,
புல் வினை மல்கி, சீலம் புரி நலம் போயிற்று அன்றே.


     நற்செயல் அழிந்த போதே நலமெல்லாம் நீங்குதல் போல, கொல்லும் தன்மை வாய்ந்த பாவ வினையை அறுக்க அவதரித்து வந்த, குணமெல்லாம் தொகையாகக் கொண்ட ஆண்டவன் நீங்கிப் போகவே, வலிமையின் வயப்பட்ட அறிவு மயக்கத்தால் பெருகும் பாவங்கள் உயிரை வாட்ட, அதனால் தீவினை பெருகி, நல்லொழுக்கத்தால் வரும் நன்மையெல்லாம் போயிற்று.
 அல்லவை - அறம் அல்லாதவை: மறங்கள் - பாவங்கள் நல்வினை
- புல்வினை.

 
                  22
இருள்புரி கங்கு னாப்ப ணிரிந்தறக் கடலோன் போக
வருள்புரி வுணர்வு காட்சி யறந்தவஞ் சுருதி தானந்
தெருள்பொறை நீதி வீரஞ் சீர்தகை யுறுதி ஞானம்
பொருள்புகழ் மற்றப் பொலிநலம் போயிற் றன்றே.
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அறக் கடலோன் போக,
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்றப் பொலி நலம் போயிற்று அன்றே.
     
இருளைச் செய்யும் இரவின் நடுவே அறக் கடலாகிய ஆண்டவன்
நீங்கிச் செல்லவே, அருளும் அன்பும் உணர்வும் அறிவும் அறமும்
தவமும் வேதமும் கொடையும் உறுதியும் ஞானமும் பொருளும் புகழும்
புலமையும் மற்றுமாக ஒரு நாட்டைப் பொலியச் செய்யும் நலமெல்லாம்
போயிற்று. 

Keine Kommentare:

Kommentar veröffentlichen