Samstag, 16. Juni 2018

7.கம்பராமாயணம் -7

ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல் 

1551.ஆடகம் தரு பூண் முயங்கிட
     அஞ்சி அஞ்சி, அனந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட,
     யாம பேரி இசைத்தலால்,
சேடகம் புனை கோதை மங்கையர்
     சிந்தையில் செறி திண்மையால்,
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர்,
     நையும் மைந்தர்கள் உய்யவே.

     சேடகம் புனை கோதை மங்கையர் - சிறப்புப் பொருந்திய
மலர்மாலையை அணிந்த மகளிர்; சிந்தையில் செறி திண்மையால் 

மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன்
மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி -
(கணவன்மார்) தம் மார்பில் அணிந்தபொன்மாலையோடு தழுவுவதற்கு
(மகளிர் மார்பில் ) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு;
அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு;  ஏடு அகம் பொதி தார்
புனைந்திட -
  பூக்களால்கட்டிய மாலையை அணிந்துகொள்ள;  யாம
பேரி இசைத்தலால் -
அப்பொழுது  கடையாமம் கழிந்ததைஅறிவிக்கும்
முரசம் ஒலித்தலால்;  நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின்
ஊடலால்வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி;  கூடல்
கண்டிலர் -
கூடி  மகிழ்தலைப்பெற்றாரில்லை.
     மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம்
கழிந்ததால் அம்மகளிர் கூடல்பெறாமல் பிரிந்தனர்.  ஊடல் - கணவனும்
மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது,  கணவனிடத்துப்புலத்தற்கும்
காரணம் இல்லாமல் இருந்தும்,  மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக்
கற்பித்துக்கொண்டுமனைவி மனம் மாறுபட்டு நிற்றல்.  மைந்தர் உய்யக்
கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும்.         61



பல்வகை ஒலிகள்
  
1552.தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன;
     தார் ஒலித்தன; பேரி ஆம்
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன;
     முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன; புள் ஒலித்தன;
     யாழ் ஒலித்தன; - எங்கணும் -
மழை ஒலித்தனபோல் கலித்த,
     மனத்தின் முந்துறு வாசியே.
     எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்;  தழை ஒலித்தன -
பீலிக்குஞ்சங்கள்விளங்கின;  வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம்
செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு
ஒலித்தன -
மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தின -
பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன;  தேர் ஒலித்தன -தேர்கள்
தெருவில் ஓடும்போது  ஒலி எழுப்பின;  முத்து  ஒலித்து  எழும்
அல்குலார் -
முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய
பெண்களுடைய;  இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள்
ஒலித்தன -
பறவைகள் கூவின;  யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன;
மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து
ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல;
கலித்தன - ஒலித்தன.
ஒலித்தன என்னும்  சொல் பல்வேறு பொருள்களில் அடுத்தடுத்து
வந்தமையால் சொற்பின்வருநிலை அணி.                          62



விளக்குகள் ஒளி மழுங்குதல்
  
1553.வையம் ஏழும் ஓர் ஏழும் ஆர் உயிரோடு
     கூட வழங்கும் அம்
மெய்யன், வீரருள்வீரன், மா மகன்மேல்
     விளைந்தது ஒர்காதலால்
நைய நைய, நல் ஐம்புலன்கள்
     அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி
     போல் மழுங்கின - தீபமே.
     வையம் ஏழும் ஓர் ஏழும் - பதினான்கு உலகங்களையும்;  ஆர்
உயிரோடு கூட வழங்கும்அம் மெய்யன் -
தன் அரிய உயிருடனே
சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்; வீரருள் வீரன் -
வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்;  மா மகன்மேல்
விளைந்தது ஓர் காதலாதல்-
தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற
பாசத்தால்; நையநைய - மிகவும் வருந்த;  நல் ஐம்புலன்கள் அவிந்து
அடங்கி -
சிறந்த ஐந்து புலன்களும்கெட்டு அடங்கிப்போக; நடுங்குவான்
தெய்வமேனி படைத்த -
நடுங்குகி்ன்றவனாகிய தயரதனதுதெய்வத்தன்மை
பொருந்திய உடலில் இருந்த;  சேய் ஒளிபோல் - செவ்விய ஒளி மெல்ல
மெல்லமழுங்குவது போல; தீபம் மழுங்கின - விளக்குகள் (பொழுது
விடிவதால்) ஒளி குறைந்தன.
     தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன.  மா
மகன் - மூத்த மகன்,ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய
இராமனைக் குறித்தது. திருவுடை மன்னன் திருமாலாகக்கொள்ளப்படுதலின்,
அவன் மேனி  ‘தெய்வமேனி’ எனச் சிறப்பிக்கப்பட்டது. உயிர்ப்பிரியும்
காலம் அடுத்தபோது,  புலன்கள் கலங்கி ஒடுங்குதலும்,  உடம்பின் ஒளி
குன்றுதலும் நிகழ்வனவாகும்.                                   63




பல்வகை இசையொலி
  
1554.வங்கியல் பல தேன் விளம்பின.;
     வாணி முந்தின பாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின;
     பம்பை பம்பின; பல் வகைப்
பொங்கு இயம் பலவும் கறங்கின;
     நூபுரங்கள் புலம்ப, வெண்
சங்கு இயம்பின; கொம்பு அலம்பின,
     சாம கீதம் நிரந்தவே.
     வங்கியம் பல - இசைக் குழல்கள் பலவும்; தேன் விளம்பின -
தேன்போலும்  இனிய இசையை ஒலித்தன;  வாணி முந்தின பாணியின்
பங்கி -
சொற்கள் முற்பட்ட இசைப்பாட்டின் வகைகள்; அம்பரம் எங்கும்
விம்மின -
வானம் எங்கும் நிறைந்தன; பம்பை பம்பின - பம்பை என்னும்
வாத்தியங்கள் பேரொலி  செய்தன;  பல்வகை -பலவகையான; பொங்கு
இயல் பலவும் -
மகளிரின் காற்சிலம்புகள் ஒலிக்க; வெண்சங்குஇயம்பின-
வெள்ளிய வளையல்கள் அவற்றிற்கேற்ப ஒலித்தன;  கொம்பு அலம்பின -
ஊது கொம்புகள் ஒலித்தன;  சாமகீதம் நிரந்த - சாமவேத இசை நிரம்பின.
     அயோத்தி நகரில் காலையில் எழுந்த பல்வேறு ஒலிகள்
குறிக்கப்பட்டன.  கொட்டுவன, தட்டுவன, ஊதுவன முதலிய வாத்தியங்கள்
பலவகை.  நூபுரங்கள் புலம்ப என்பதற்கு மகளிர் காற்சிலம்பு என்றுபொருள்
கொண்டதற்கு  ஏற்பச் ‘சங்கு இயம்பின’ என்பதற்கு வளையல்கள் ஒலித்தன
என்றுபொருள்கொள்ளப்பட்டது. சங்கு - சங்கினால் ஆகிய வளையல். ஏ -
ஈற்றசை.                                                     64



கதிரவன் தோற்றம் 

1555.தூபம் முற்றிய கார் இருட் பகை
     துள்ளி ஒடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்றென
     சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத்
     திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
     ஒத்தனன், குண குன்றிலே.
     தூபம் முற்றிய - புகைபோல எங்கும் சூழ்ந்த; கார் இருள் பகை
துள்ளி ஓடிட-
கரிய இருளாகிய பகை குதித்து ஓடிப்போகவும்; உள் எழும்
தீபம் முற்றவும்-
வீடுகளின்உள்ளே எரிகின்ற விளக்குகள் எல்லாம்; நீத்து
அகன்றென -
ஒளியைத் துறந்து மழுங்கியபோல; சேயது ஆர் உயிர்
தேய
- தன் குலத்தில் பிறந்த தயரதனது அரிய உயிர் மெலியும்படி;  வெம்
பாபம் முற்றிய பேதை செய்த -
தீவினை முதிர்ந்த கைகேயி புரிந்த;
பகைத் திறத்தினில்- பகைச் செயலால்; வெய்யவன் - சூரியன்;  குண
குன்றின் -
கிழக்கு மலையில்; கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
ஒத்தனன்
- சினம் முதிர்ந்து  மிகவும் செந்நிறம்கொண்டவன் போலக்
காணப்பட்டான்.
     சூரியன் கிழக்கு மலையில் சிவந்து  தோன்றியதனைத் தன் குலத்தில்
பிறந்த தயரதனது உயிர்ஒடுங்குமாறு கேடு சூழ்ந்த கைகேயியின்மீது கோபம்
கொண்டவன் போலத் தோன்றினான் என்றது  ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.
குண குன்று - கதிரவன் எழும் கிழக்கு மலை. குணக்கு - கிழக்கு      65



தாமரைகள் மலர்தல்
  
1556.மூவர் ஆய், முதல் ஆகி, மூலம்
     அது ஆகி, ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில்
     ஒடித்த சேவகன், சேண் நிலம்
காவல் மா மூடி சூடு பேர் எழில்
     காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம்
     மலர்ந்த - பங்கய ராசியே.
     மூவர் ஆய் - அயன்,  அரி,  அரன் என்னும் மூன்று மூர்த்திகளாகி;
முதல் ஆகி- அம்மூவர்க்குள்ளும் திருமாலாகிய முதல்வனாகி;  மூலம்
அது ஆகி -
இவையெல்லாவற்றிற்கும்அடியாய் ஆகி;  ஞாலமும் ஆகி -
உலகத்துள்ள எல்லாப் பொருள்களும் தானே ஆகி;  அத்தேவதேவர்
பிடித்த போர் வில் -
அந்த மகாதேவராகிய சிவபெருமான் பிடித்த
போரிற்குரியவில்லை; ஒடித்த சேவகன் - (சீதையை மணத்தற்காக) ஒடித்த
வீரன் ஆகிய இராமபிரான்; சேண் நிலம் காவல் - பெரிய மண் முழுதும்
காத்தற்குரிய;  மாமுடிசூடுபேர் எழில் -சிறந்த மகுடத்தைச்
சூட்டிக்கொள்ளும் பேரழகை; காணலாம் எனும் ஆசை கூர்- பார்க்கலாம்
என்னும் ஆவல் மிகுந்த;  பாவைமார் முகம் என்ன -  பெண்களின்
முகங்கள்போல;  பங்கயராசி முன்னம் மலர்ந்த - தாமரைப் பூக்களின்
கூட்டம்  முந்தி மலர்ந்தன.
     தாமரைப் பெண்களின் முகத்திற்கு உவமையாகச் சொல்வதே வழக்கம்.
இங்குப் பெண்களின் முகம்போலத்தாமரை மலர்ந்தன என்றார். இது எதிர்
நிலை உவமை அணி.


    “முதலாவார் மூவரே;  அம்மூவர்  உள்ளும்
     முதலாவான் மூரிநீர் வண்ணன்”


என்பது பொய்கையாரின் முதல் திருவந்தாதி.   
                    66

Keine Kommentare:

Kommentar veröffentlichen